Tuesday, October 18, 2005

கந்தனுக்கு அலங்காரம்

கந்தனுக்கு அலங்காரம்

கந்தரலரங்காரம் அருணகிரிநாதர் எழுதிய நூல். அருள் நூல். அழகு நூல். அறிவு நூல். முருகப் பெருமானின் திரு அலங்காரங்களை விளக்கும் நூல். உச்சி முதல் உள்ளங்கால் வரையிலான அழகினையும் முருகப் பெருமானின் ஊர்தியின் பெருமையையும், வெற்றி வேலின் திறமையையும் இவைகளினால் நாம் பெறும் வளமையையும் விவரித்து எழுதப்பட்ட நூல்.

காலை அரும்பிப் பகலெல்லாம் போதாகி மாலையில் மலரும் பூக்களைக் கொண்டும் அலங்காரம் செய்யலாம். அப்படி இன்றைக்குச் செய்தது நாளைக்கு ஆகாது. என்றைக்கும் ஆகும் வகையில் என்றுமுள தீந்தமிழில் கந்தனுக்கு அலங்காரம் செய்துள்ளார் அருணகிரியார்.

இந்த நூலைப் படித்தாலும் கேட்டாலும் உள்ளத்தில் நினைத்தாலும் இன்பம் பெருகும். துன்பம் கருகும். உள்ளம் உருகும். பாம்பன் சுவாமிகள் அருணகிரியாரைக் குறித்துச் சொல்கையில் ஓசைமுனி என்பாராம். எந்த ஒரு ஓசையையும் தமிழ்ச் சொல்லாக்கி அந்தச் சொல்லையும் பூவாக்கி முருகனுக்கு அலங்காரம் செய்தவர் அருணகிரியார். இறைவன் அருளும் இறைவன் மீது அன்பும் உண்மையிலேயே இருந்தால்தான் இதெல்லாம் நடைமுறைக்கு வரும்.

காப்புச் செய்யுளோடு சேர்த்து மொத்தம் நூற்று எட்டு பாக்கள் உள்ளன. இந்த நூற்றி எட்டுப் பாப்பூக்களையும் படிப்பது இன்பமென்றாலும் நாம் எளிமையாக பாடியும் துதித்தும் மகிழத்தக்க சிறந்த பாடல்களைப் பொறுக்கி அவற்றிற்கு உரையளிக்க உள்ளேன். அனைத்துப் பாக்களுக்கும் உரையளிப்பது என்பது பேரறிஞர்களுக்கே கைவரும். எளியேனாகிய எனக்குப் புரிகின்ற செய்யுட்களை எடுத்து வாரம் ஒன்றாக அவைகளுக்கு விளக்கம் கோர்த்து நீங்கள் படித்து மகிழ்ச்சியும் வளமும் பெறத் தருகிறேன். எல்லாம் முருகன் செயல்.

அன்புடன்,
கோ.இராகவன்

5 comments:

said...

வாழ்த்துகள் அண்ணா.

சிறப்பாக அமைந்து, நல்ல பெயரை எடுக்க வாழ்த்துகள்.

said...

நன்றி பரஞ்சோதி. எல்லாப் புகழும் இறைவனுக்கே.

said...

அட அட அடா.. என்ன ஒரு விளக்கம்..

இன்பம் பெருகும்.. துன்பம் கருகும்.. உள்ளம் உருகும்...

அசத்தலான வரிகள்.. அற்புதமான விளக்கம்/விமரிசனம்...

வருகிறேன்.. வலைப்பூக்களைப் பின்னோக்கித் தரிசித்து வாழ்வியல் நெறிகளில் முன்னோக்கி வருகிறேன்..

தொடரட்டும் உமது திருத்தொண்டு...

said...

/* நாம் எளிமையாக பாடியும் துதித்தும் மகிழத்தக்க சிறந்த பாடல்களைப் பொறுக்கி அவற்றிற்கு உரையளிக்க உள்ளேன். */

ஆகா! இராகவன், இனிப்பான செய்தி!
கந்தர் அலங்காரத்தை உங்களின் இனிமையான தமிழில் படிக்க ஆவலாக உள்ளேன்.

உங்கள் முயர்சிக்கு வாழ்த்துக்கள்.

said...

முருகனருள் முன்னிற்கும்!
வாழ்த்துக்கள்!