Tuesday, October 25, 2005

மலப்பழமும் மலைப்பழமும்

அழித்துப் பிறக்க ஒட்டா அயில் வேலன் கவியை அன்பால்
எழுத்துப் பிழையறக் கற்கிலீர் எரி மூண்டதென்ன
விழித்துப் புகையெழ பொங்கு வெங்கூற்றன் விடும் கயிற்றால்
கழுத்தில் சுருக்கிட்டிழுக்கின்றதோ கவி கற்கின்றதே


நமது உள்ளத்தில் அச்சம் என்னும் உணர்வு தோன்றி அலைக்கழிக்கும் பொழுது இந்தப் பாடலை சொல்லிக் கொண்டால், வந்த அச்சம் மிச்சமேயில்லாமல் ஓடிப் போகும்.

பைந்தமிழ்ச் சொற்கள் இறையருள் பெற்றவை. அவைகளைச் சொல்லும் பொழுது முறையாக உச்சரிக்க வேண்டும். பாண்டியன் நெடுஞ்செழியன் சொன்னான்.
மன்பதைக் காக்கும் தென்புலக் காவல்
என் முதற் பிழைத்தது கெடுக என் ஆயுள்

"மண்ணுயிர்களைக் காக்கும் பாண்டிய நாட்டு அரசியல் முதன்முறையாகப் பிழையானதே. அதுவும் என்னால். கெடுக என்னுடைய ஆயுள்" என்று அவன் சொல்லிய வேகத்தில் அவன் உயிர் பிரிந்தது.

நல்லவர் நாக்கும் செந்தமிழ் வாக்கும் கூடினால் சொன்னது பலிக்கத்தானே செய்யும். ஆகையால் நாம் தமிழில் பேசுகையிலாவது முறையாக உச்சரித்து, சரியாகப் பேச வேண்டும்.

அருணகிரியும் இதே கருத்தைத்தான் சொல்கிறார். எழுத்துப் பிழையறக் கற்கிலீர். எழுத்துப் பிழையில்லாமல் கற்க மாட்டீர்களா என்று வருந்துகிறார். எதை? அழித்துப் பிறக்க ஒட்டா அயில் வேலன் கவியை. பிறப்பையும் இறப்பையும் மறுப்பாக்கும் வேலவனைப் புகழ்ந்து பாடும் அருந்தமிழ்ப் பாக்களை எழுத்துப் பிழையில்லாமல் கற்க மாட்டீர்களா!

பலருக்கு இந்த ஐயம் உண்டு. ஆன்மீக நாட்டம் எந்த வயதில் வரவேண்டும் என்பதே அந்த ஐயம். வயதான காலத்திலா வரவேண்டும்? நாடியும் நரம்பும் தளர்ந்து நாக்கும் மூக்கும் உலர்ந்து போகும் கிழ வயதிலா இறைவன் திருவடியை நினைக்க வேண்டும்? ஒழுங்காக நினைக்க முடியுமா? கந்தனைப் பாடும் தமிழ்ச் செய்யுளை மனனம் செய்ய வயது ஒத்துழழக்குமா?

பருவத்தே பயிர் செய் என்பது தமிழ் முதுமொழி. இளம் வயதிலேயே நாம் இறைவன் திருவடியைச் சரணடைந்து விட்டால் முதுமை வாட்டாது. போரடித்த நெல்லை குதிரில் சேமித்து வைத்து பின்னாளிலும் பயன்படுத்துவது போல, அருந்தமிழ்ப் பாக்களை, முருகனை வணங்க உதவும் பூக்களை இளம் வயதிலேயே குற்றமறக் கற்க வேண்டும்.

எரி மூண்டதென்ன விழித்துப் புகையெழ பொங்கு வெங்கூற்றன் விடும் கயிற்றால் - கூற்றன் என்றால் காலன். உடலையும் உயிரையும் கூறு செய்கின்றவன் கூற்றன். பகபகவென விழிகளை உருட்டி விழித்து, அந்த விழிகளில் தீப்பொறிகள் பறக்கப் பறக்க கூற்றன் வந்து பாசக் கயிறிட்டு உயிரைப் பறிக்கையிலா முருகன் புகழை கற்கத் தொடங்குவது! அதைத்தான் கழுத்தில் சுருக்கிட்டிழுக்குமன்றோ கவி கற்கின்றதே என்கிறார் அருணகிரி.

இதுவரை நாம் முறையாகச் செய்யவில்லை. சரி. போனது போகட்டும். கந்தன் கருணை என்றைக்கும் உரியது. ஆகையால் இன்றைக்காவது அருந்தமிழ்ச் செய்யுட்களைக் கற்று கந்தனுக்குப் பாமாலையும் பூமாலையும் சாற்ற வேண்டும்.

இன்னொரு கருத்தும் இங்கு போற்றப்பட வேண்டியது. "வேலன் கவியை அன்பால் எழுத்துப்பிழையற".....அதாவது இறைவனை அன்பால் வணங்க வேண்டும். அச்சத்தினால் வணங்கக் கூடாது. இறைவன் அன்பு மயமானவன். அவனா மிரட்டுவான்? இல்லவேயில்லை. இறைவன் மீது அன்பு வைக்க வேண்டும். அந்த அன்பு வளர்ந்தால் நன்மைகள் பல விளையும்.

இந்தச் செய்யுளில் மட்டுமே உள்ள சிறப்பு "எழுத்துப் பிழையற" என்னும் சொற்றொடர். ஒரு சின்ன நகைச்சுவைத் துணுக்கு. ஒருவர் வாழைப்பழக் கடைக்குச் சென்றார். மலைப்பழம் வாங்க வேண்டும். குழந்தைகளுக்கு மலைப்பழம் கொடுப்பது நல்லது. "ஐயா மலப்பழம் கொடுங்க" என்று வாங்கினார். அவர் என்ன வாங்கினார்? மலைப்பழமா? இல்லை. மலப்பழம். பொருள் எவ்வளவு அசிங்கமாக மாறுகிறது பார்த்தீர்களா? முருகனைப் பாடுவது இருக்கட்டும். தமிழில் நாம் பேசுகையிலும் எழுத்துப் பிழையறப் பேசிட வேண்டும்.

அன்புடன்,
கோ.இராகவன்

8 comments:

said...

இப்பாடலைப் படிக்கும் போது 'சாகும் போது சங்கரா சங்கரா என்றால் முடியுமா?' என்னும் பழமொழியும் பெரியாழ்வாரின் 'அப்போதைக்கு இப்போதே சொல்லி வைத்தேன்' பாசுரங்களும் நினைவுக்கு வருகின்றன.

காலனைப் பற்றி எல்லோரும் பயமுறுத்துகிறார்கள். ஆனால் தருமன் யக்ஷனுக்கு சொன்ன பதிலைப் போல எல்லோரும் நிரந்தரமாய் இருக்கப் போவதாய் எண்ணி இறைவனை வணங்குவதில்லை. நல்ல வேடிக்கை. :-)

பஜ கோவிந்தத்தின் முதல் பாடலையும் இந்த பாடல் நினைவூட்டுகின்றது. http://bgtamil.blogspot.com/2005/10/1.html

வாழைப்பழ உச்சரிப்புப்பிழை நன்றாய் இருந்தது. :-)

said...

குமரன் சொல்வது போல, அவரால் நாங்கள் எல்லாம் உங்கள் எழுத்துக்கு ரசிகர்களாகி வருகிறோம். உங்கள் பதிவை தமிழ் மணத்தில் பார்க்கும் முன்னமே, குமரன் சொல்லிவிடுகிறார், "இன்றைய ராகவன் பதிவு" இது என்று. :-)

//**பலருக்கு இந்த ஐயம் உண்டு. ஆன்மீக நாட்டம் எந்த வயதில் வரவேண்டும் என்பதே அந்த ஐயம். வயதான காலத்திலா வரவேண்டும்? **//
உண்மை தான். யோசிக்க வேண்டிய ஒன்று.

//**தமிழில் நாம் பேசுகையிலும் எழுத்துப் பிழையறப் பேசிட வேண்டும்**//

இப்படி வேற சொல்லி விட்டீர்கள். பார்த்து பார்த்து எழுத வேண்டிய இருக்கிறது :-)

said...

// இப்பாடலைப் படிக்கும் போது 'சாகும் போது சங்கரா சங்கரா என்றால் முடியுமா?' என்னும் பழமொழியும் பெரியாழ்வாரின் 'அப்போதைக்கு இப்போதே சொல்லி வைத்தேன்' பாசுரங்களும் நினைவுக்கு வருகின்றன. //

உண்மைதான் குமரன். பெரியவர்கள் இதை திரும்பத் திரும்பச் சொல்லி வைத்திருக்கிறார்கள். மாசத்தின் கடைசி நாளில் சம்பளம் வருகிறதென்று அன்று மட்டும் வேலை செய்தால் போதுமா? மற்ற நாட்களில் செய்த வேலைக்குத் தக்க சம்பளந்தான் இறுதியில் வருகிறது.

வாரியார் அழகாகச் சொல்வார். "பாங்குல போட்டு வெச்சுக்கணும். அப்பத்தான் வேணுங்கறப்போ எடுக்க முடியும்."

said...

// குமரன் சொல்வது போல, அவரால் நாங்கள் எல்லாம் உங்கள் எழுத்துக்கு ரசிகர்களாகி வருகிறோம். உங்கள் பதிவை தமிழ் மணத்தில் பார்க்கும் முன்னமே, குமரன் சொல்லிவிடுகிறார், "இன்றைய ராகவன் பதிவு" இது என்று. :-) //

நன்றி சிவபுராணம். நான் எழுதுவது எல்லாம் என்னுள் இருந்து முருகன் எழுதுவது என்று ஒதுங்கிக் கொள்வதுதான் எனக்கு நன்று. அல்லாஹூ அக்பர் என்றுதானே இஸ்லாமியர்களும் சொல்கின்றார்கள்.

// இப்படி வேற சொல்லி விட்டீர்கள். பார்த்து பார்த்து எழுத வேண்டிய இருக்கிறது :-) //
நானும் கூட எழுதும் அவசரத்தில் சில தவறுகள் செய்து விடுகிறேன். முடிந்த வரையில் பிழையற எழுத வேண்டும். பிழையிருந்து யாராவது சுட்டிக் காட்டினால் திருத்திக் கொள்ளலாம்.

said...

dear Raghavan,
Periyazhvar pertuedutha penpellai. Thangal vilakkam porutham. idu janakar, seetha uravay pondrathu. seetha kalyanathin pothu janakar ramanidam
"iyam settha mama sudha' enkirar.
itha seethay ennal valarkapattaval. athanal entha vithathilum petra magalukku kuraithaval allal. antha villakkam periyazhvarukkum porunthum.
Ungalathu valay pathivay padipathu kadinamaka ullathu tamil ezhuthu kidaipathillai TRC (trc108uma@yahoo.com)

said...

தகவலுக்கு நன்றி TRC.

// Ungalathu valay pathivay padipathu kadinamaka ullathu tamil ezhuthu kidaipathillai TRC //

யுனிகோடில்தானே நான் பதிகின்றேன். ஒருவேளை உங்களிடம் யுனிகோடு ஃபாண்டு இல்லையோ?

TRC, I use unicode to post my writtings. I feel you need to install any of the unicode fonts.

said...

// isn't that
மன்பதைக் காக்கும் தென்புலக் காவல்
கெடுகவே எனது ஆயுள்
? //

இல்லை பேபல். மன்பதைக் காக்கும் தென்புலக் காவல் சரி. அடுத்து என்ன? தொடர்ந்து முடிக்க வேண்டாமா?

தென்புலத்தைக் காக்கும் எனது காவல் "என் முதல் பிழைத்தது". அதாவது என்னால் முதன்முதலில் பிழையானது. அந்த அவமானம் தாங்க முடியவில்லை பாண்டியனுக்கு. தனக்குத்தானே சாபம். "கெடுக என் ஆயுள்". புரிந்ததா?

said...

சாரி, மன்னிச்சுக்குங்க நீங்க எழுதறத விமர்சிக்கும் தகுதி எனக்கு இருக்கிறாதான்னு தெரியலை.. எனக்கு Banking மட்டும்தான் தெரியும்னு உங்கள மாதிரி எழுதறவங்களா பார்த்தாத்தான் தெரியுது.

ஒன்னே ஒன்னு மட்டும் நல்லா புரிஞ்சது. நல்ல தமிழ்ல பேசணும்னு. நான் தமிழ்நாட்டுல ஒரு ஆறு ஊர்கள்ல வேலை செஞ்சிருக்கேன். எனக்கு மிகவும் பிடிச்ச தமிழ் மதுரை மற்றும் தஞ்சை மக்கள் பேசுவது. தூத்துக்குடி தமிழ்ல நிறைய பேருக்கு லகர ளகரமே வராது. சென்னை தமிழ் கேக்கவே வேணாம். நாக்கு சுளுக்கிக்கும். எழுத்துத் தமிழை எடுத்துக்கிட்டா னகர, ணகரம், ரகர றகரம் இதுலதான் நிறைய பேருக்கு சுளுக்கிக்கும். எனக்கும் சில சமயத்துல அது ஏற்படும். ரெடியா கரியாவின் தற்கால தமிழ் அகராதியை பார்த்துக்குவேன். அதுமட்டுமில்லை சந்திப்பிழையும் சாதாரணமாக ஏற்படுவதுண்டு. எழுத,எழுதத்தான் சரியா வரும்னு நினைக்கிறேன். என் பதிவுகள்ல இருக்கற எழுத்துப் பிழைகளை முக்கியமா சந்திப்பிழைகள நீங்க எனக்கு எடுத்து காட்டினா திருத்திக்கொள்ள உபயோகமாயிருக்கும். தமாஷ் பண்றேன்னு நினைச்சிராதீங்க. சீரியசாத்தான் சொல்றேன்.

அதுசரி, இந்த அநாமதேய பின்னூட்டங்களை தவிர்ப்பது எப்படி? கொஞ்சம் சொல்லுங்களேன். ஈமெய்ல வேணும்னாலும் அனுப்புங்க.