Friday, October 28, 2005

சரீரியா? அசரீரியா?

தேனென்று பாகென்று உவமிக் கொணமொழித் தெய்வ வள்ளிக்
கொனென்று உபதேசித்தது ஒன்று உண்டு கூறவற்றோ
வானன்று காலன்று தீயன்று நீரன்று மண்ணுமன்று
தானன்று நானன்று அசரீரியன்று சரீரியன்றே


உபதேசம் என்ற சொல்லுக்கு உணர்விப்பது என்று தமிழில் பொருள். எல்லாராலும் உணர்விக்க முடியாது. ஒன்றைக் குற்றமற அறிந்தவரே நல்லவிதமாக உணர்விக்க முடியும்.

அருணகிரிநாதரை உணர்வித்தவன் முருகப் பெருமான். தமிழ்க் கடவுள். அவரிடம் உபதேசம் பெற்றவர் மூவர். தமிழ் முனிவர் அகத்தியர், சிவபெருமான், மற்றும் அருணகிரிநாதர். இவர்களில் சிவபெருமான் முருகன் உபதேசித்ததை அடுத்தவர்களுக்கு எடுத்துச் சொல்லவில்லை. அகத்தியரோ முருகனின் தமிழைத் தரணிக்கு அளித்து வளர்த்தார். அருணகிரியோ முருகன் உணர்த்திய தத்துவப் பொருளை உலகிற்கு எடுத்துச் சொன்னார்.

தேனும் பாகும் இனியவை. ஔவை கூட "தெளிதேனும் பாகும் பருப்பும்" என்று பாடியிருக்கின்றார் என்றால் அவைகளின் சுவை விளங்கும். இந்தச் சுவைகளைப் பழிக்கும் சுவையும் உண்டாம். அது தெய்வத் திருமகள் வள்ளியின் திருவாய் மொழியே அந்தச் சுவை. பேசினால் கேட்டுக்கொண்டேயிருக்கலாம்.

சிலர் பேசினால் காதைப் பொத்திக்கொள்ளத் தோன்றும். சிலர் பேசினால் ஒன்றும் புரியாது. ஆனால் வள்ளியம்மையின் தமிழ்ப் பேச்சு மிகவும் இனியது. அதனால்தான் முருகனே தேடி வந்து வள்ளியிடம் ஏச்சும் பேச்சும் கேட்டார்.

இப்படித் தேனென்று பாகென்று உவமிக்கொணா மொழித் தெய்வ வள்ளியின் கோனாகிய முருகப் பெருமான் உபதேசித்ததைக் கூறவற்றோ!

ஒருவர் ஒரு தகவலைச் சொல்கிறார். அதை மற்றவருக்குச் சொல்ல வேண்டும். கண்டிப்பாக பாதித் தகவல் மறந்து போய்விடும். பாதித் தகவல் மாறிவிடும். இந்நிலையில் ஆண்டவராகிய முருகப் பெருமான் ஒன்றை உணர்வித்தால் அதை மனிதப் பிறப்பெடுத்த அருணகிரியால் முழுமையாகச் சொல்ல முடியுமா?

கண்டிப்பாக முடியாது. இதை அநுபூதியிலும் சொல்கிறார். "சாடும் தனிவேல் முருகன் சரணம் சூடும்படித் தந்தது செப்புமதோ!"

இருந்தாலும் சொல்ல முயல்கிறார். முடிந்ததைச் செய்வோம் என்ற நல்ல எண்ணம் அருணகிரிக்கு. பெற்ற தாய்தான் முடிந்தவரை பிள்ளைகளுக்குக் கொண்டு சேர்ப்பாள். அருணகிரிக்கும் தாயுள்ளம். அதனால் முடிந்த வரை முருகனைப் பற்றிச் சொல்கிறார். இனி அருணகிரியின் வாக்கினிலேயே பார்ப்போம்.

"இறையருள் என்று நான் உணர்ந்து கொண்டது எப்படிப் பட்டது? முருகன் எப்படிப் பட்டது? ஐம்பூதங்கள் இந்த உலகத்தின் அடிப்படை. வானம், நீர், நிலம், நெருப்பு, காற்று ஆகிய ஐம்பூதங்களால் ஆனது இந்த உலகம். இந்த ஐந்துபூதங்களுமா இறைவன்? இல்லை. அவைகளுக்கும் அப்பாற்பட்டவன். வானன்று. காலன்று (காற்றன்று). தீயன்று. நீரன்று. மண்ணுமன்று. சரி. தானும் நானுமா? இல்லை. உருவம் உள்ளவனா? இல்லை. உருவம் இல்லாதவனா? இல்லை?"

அப்படியென்றால்?

"அப்படியென்றால் அனைத்தையும் கடந்தும் அனைத்திற்கும் உள்ளிருப்பதுமே கடவுள். பார்ப்பதனைத்தும் பரமன் காட்சியே. கேட்பதனைத்தும் முருகனொலியே. உணர்வதனைத்தும் சக்தியே. சுருங்கச் சொன்னால் யாதுமாகி நிற்பதே கடவுள். அதை நான் சொல்ல முடியுமா?"

அருணகிரி சொல்வது இப்பொழுது புரிந்திருக்கும். கல்லிலும் திசையிலும் தீயிலும் சொல்லிலும் வில்லிலும் நிறைந்திருப்பது ஒன்றே. அதுதான் இறைமை. பெயர் மாறலாம். முறை மாறலாம். ஆனால் இறைவன் அருள் மாறாது என்று அன்போடு சொல்லிக் கொடுக்கிறார்.

இந்தப் பாடலை மனமகிழ்ச்சியோடு பாடுங்கள். கந்தனருள் பெறுங்கள். வளமோடு வாழுங்கள்.

அன்புடன்,
கோ.இராகவன்

4 comments:

said...

அன்பின் ராகவன்,

எம்பெருமான் முருகன் புகழ் பாட நாவொன்று போதாதய்யா!

வாழ்த்துக்கள்.

said...

ராகவன்,

மெல்லிய ஓடை நீர் ஓடுவது போல உள்ளது உங்கள் தெளிந்த நடை.

உருவாய், அருவாய் என்று பாடிய போது எந்த எந்த வடிவில் கந்தன் வருவான் என்று பாடியவர் இங்கு எதிர் மறையில் 'இதுவன்று, அதுவன்று, இவையல்ல, அவையல்ல' என்று அவனைப் பாடுகிறார். வேதமும் இறைவனைப் பற்றிப் பாடும் போது 'இது இல்லை, இது இல்லை' என்று தானே சொல்லிக் கொண்டு செல்கிறது.

ஒரு முறை மீண்டும் நீங்கள் எழுதியதைப் படியுங்கள். ஆங்காங்கே சிறு எழுத்துப் பிழைகள் இருக்கலாம் என்று தோன்றுகிறது.

குமரன்

said...

ராகவன்,

நீங்கள் எந்த கோவிலில் சொற்பொழிவு ஆற்றுகிறீர்கள் :-). அப்படியே கிருபானந்த வாரியார் குரலில் உங்கள் பதிவை படித்து பார்த்தேன். இன்பமோ இன்பம், போங்க!

said...

பிரமாதம்...