Tuesday, November 01, 2005

காதறுந்த ஊசியும்....

கோழிக் கொடியனடி பணியாமற் குவலயத்தே
வாழக் கருதும் மதியிலிகாள் வல்வினை நோய்
ஊழிற் பெருவலி யுண்ணவொட்டா துங்கள் அத்தமெல்லாம்
ஆழப் புதைத்து வைத்தாலும் வருமோ நும் மடிப்பிறகே


நமக்குச் செருக்கு என்று வரும் பொழுது இந்தப் பாடலை நினைத்துக் கொண்டால் வந்த செருக்கு சரக்கென்று மறைந்தோடி விடும்.

கோழிக் கொடியனடி - முருகனுடைய கொடியில் இருப்பது கோழி. ஏன் கோழி? இருள் விடிந்து ஒளி வருவதை ஓங்காரமிட்டுச் சொல்வது கோழி. அதாவது உறங்கிக் கிடப்பவர்களை விழிக்கச் செய்யும் பணி. அது அறிஞர்களுக்கு மட்டுமே ஆகும். ஞான வடிவமாக கோழி கொடியில் நின்று கூவி உலகமாயையில் உறங்கிக் கிடப்பவர்களை விழிக்கச் செய்வதால் இந்தப் பெருமை.

செவற்கொடியோன் என்றுதானே சொல்வார்கள். இங்கென்ன கோழி என்று கேட்கலாம். கோழி என்பது சேவலின் பெண் பால். பால் வேறுபாடு பார்க்கும் வழக்கம் இறைவனுக்குக் கிடையாது என்பதால் கோழியையும் சேவலையும் அருணகிரி மாறிமாறிப் பயன்படுத்தியிருக்கிறார்.

அப்படி முருகனுடைய அடியைப் பணியாதவர்களுக்கு இந்தப் பாடலை எழுதியிருக்கிறார் அருணகிரி.
"குவலயத்தே வாழக் கருதும் மதியிலிகாள்" - முருகனுடைய திருவடிகளைச் சரணடையாமல் இந்த உலகத்தில் வாழக் கருதும் மதியற்ற்வர்களே உணருங்கள். எதை?

வல்வினை நோய் - நல்வினை தீவினையாகிய நோய்கள் கொடுமைப் படுத்தும்.

ஊழிற் பெருவலியுண்ணவொட்டா துங்கள் அத்தமெல்லாம் - ஊழினைக் காட்டிலும் பெரிது உண்டோ? "ஊழிற் பெருவலி யாவுள? மற்றொன்று சூழினும் தாமுந்துறும்" என்கிறார் வள்ளுவர். விதி வலியது. அந்த விதியின் கொடுமையிலிருந்து தப்பிக்க சேர்த்து வைத்த செல்வம் (அத்தம்) பயன்படுமா? பயன்படாது. ஊழின் பிடியிலிருந்து தப்பிக்க கோழிக்கொடியனடி பிடிக்க வேண்டும்.

ஆழப் புதைத்து வைத்தாலும் வருமோ நும் மடிப்பிறகே - பாடுபட்டுப் பல செல்வந் தேடி அதைக் குழி வெட்டிப் புதைத்து வைத்தால் நம்மோடு கடைவழிக்கு வருமோ? பட்டினத்தடிகள் பெருஞ்செல்வந்தர். தங்கம் மலையாகக் குவிந்த வீடு. வெள்ளித் தரையாக மெழுகிய வீடு. வைரக் கதவாக விளங்கிய வீடு. இப்படி வாழ்ந்தவருக்கும் ஞானம் வந்தது. எப்படி? ஒரு வரியால். "காதற்ற ஊசியும் வாராதுகாண் கடைவழிக்கே!"

காதறுந்த ஊசி கூட கூட வராத நிலையில் தங்கமும் வெள்ளியுமா வரப் போகிறது. பசித்த வேளைக்குத் திங்கக் கூட முடியாத அந்த அந்தச் செல்வமா நமது விதியிடமிருந்து காக்கப் போகின்றது. இல்லை. இறைவன் திருவடி ஒன்று மட்டுமே நம்மை வாழ வைக்கும். திருவடியென்னும் திருச்செல்வத்தைத் தேடினால் பெருஞ்செல்வம் நம்மைத் தேடி வரும்.

முருகனடி பணிந்தால்தானா இப்படி? வேறு தெய்வங்களை வணங்குகின்றார்களே அவர்களுக்கு? எல்லா தெய்வங்களும் ஒன்றே. உங்கள் மனதிலுள்ள தெய்வத்தை நினைத்துக் கொள்ளுங்கள். "கோழிக் கொடியனடி" என்ற சொல்லை மட்டும் எடுத்து விட்டு, உங்கள் மனதிலுள்ள இறைவனடி என்று போட்டுப் பாருங்கள். இதுவரை நான் விளக்கியது மாறாமல் அப்படியே வரும்.

அன்புடன்,
கோ.இராகவன்

6 comments:

said...

எப்படி ராகவன் உங்களால் இப்படி எழுதமுடிகிறது? செந்தமிழும் நாப்பழக்கம், பழகப்பழக வரும் கவி என்றெல்லாம் சொல்கிறார்கள். பிறந்ததிலிருந்து தமிழ் படிக்கிறேன். உங்களைப் போல் எழுத வரவில்லையே?

'செருக்கு சரக்கென்று' - நன்றாய் இருக்கிறது.

'ஞான வடிவமான கோழி' - இது புதிது, எங்கும் படித்ததில்லை

'அத்தம் (செல்வம்)' - இது எனக்குத் தோன்றவில்லை - நீங்கள் எழுதியதைப் படித்தபின் தான் ஓஹோ இது 'அர்த்தம்' என்னும் வடமொழிச் சொல்லிருந்து வருகிறதா என்று எண்ணிக்கொண்டேன்.

தொடர்ந்து எழுதுங்கள்...

said...

குமரன். என்னிடம் என்ன இருக்கிறது? கந்தரநுபூதி வரிகள்தான் என்னால் விடையாகத் தர முடியும். "யாம் ஓதிய கல்வியும் எம் அறிவும் தாமே பெற வேலவர் தந்ததினால்".

அத்தம் என்பது தமிழ்ச் சொல்லே. பல தமிழ்ச் சொற்கள் வடமொழிச் சொற்கள் போல இருப்பதால் அவை வடமொழிச் சொற்கள் என்று தவறாக நினைக்கின்றார்கள். ஆனால் உண்மை அதுவன்று.

எடுத்துக்காட்டாக ஒரு சிறிய உண்மை. கந்தன் என்ற தமிழ்ப் பெயருக்கும் ஸ்கந்தன் என்ற வடமொழிப் பெயருக்கும் உச்சரிப்பு ஒற்றுமையைத் தவிர வேறெந்த ஒற்றுமையும் இல்லை. தெரியும்தானே!

said...

இராகவன்: அருமையாக எழுதி வருகிறீர்கள். கந்தர் சஷ்டி துவங்கியுள்ள இக்காலங்களில் முருகனைப் பற்றிப் படிப்பது மனதுக்கு மிகவும் இதமாக உள்ளது.
தொடரவும்.

இந்த தளங்களையும் தாங்கள் படித்திருக்கலாம். ( Just for Information )http://www.dinamalar.com/2005Nov02KandaSastiSpecial/index.asp

http://groups.yahoo.com/group/agathiyar/messages

http://groups.yahoo.com/group/agathiyar/message/37838


- அலெக்ஸ்

said...

அருமை.

//கந்தன் என்ற தமிழ்ப் பெயருக்கும் ஸ்கந்தன் என்ற வடமொழிப் பெயருக்கும் உச்சரிப்பு ஒற்றுமையைத் தவிர வேறெந்த ஒற்றுமையும் இல்லை. தெரியும்தானே!
//

கொஞ்சம் விளக்குங்களேன். நான் ரெண்டும் ஒன்று என்றல்லவா நினைத்துக் கொண்டிருக்கிறேன்.

said...

ராகவன். எந்தச் சொல் எங்கிருந்து வந்தது; தமிழில் இருந்து ஒரு சொல் வடமொழிக்குச் சென்றதா இல்லை வடமொழியில் இருந்து அது தமிழுக்கு வந்ததா என்று அறுதியிட்டுக் கூறுதல் மிகக் கடினம். நீங்கள் சொன்னபடி ஒரு சொல் ஏறக்குறைய அதே போல் இரு மொழிகளிலும் ஒலிப்பதால் அவை ஒன்றே என்று எண்ணுவதற்கு இடம் நிறைய உண்டு. ஆனால் அத்தம் என்னும் சொல்லின் வடமொழி உருவாய் நான் எண்ணும் அர்த்தம் அதே பொருளில் தான் இரு மொழியிலும் பயில்கிறது - அது கந்தன் என்னும் சொல்லைப் போல் அன்று.

இன்னொன்றை கவனித்தீர்களா? 'பொருள்' என்னும் தமிழ்ச்சொல் 'செல்வம்' என்ற பொருளிலும் 'ஒரு சொல்லின் பொருள்' என்னும் பொருளிலும் பயின்று வரும். அதே போல் 'அர்த்தம்' என்னும் வடமொழிச் சொல்லும் 'செல்வம்' என்ற பொருளிலும், 'சொல்லின் பொருள்' என்ற பொருளிலும் பயின்று வரும். :-)

இராமநாதன் கேட்ட படி நீங்கள் கந்தனுக்கும் ஸ்கந்தனுக்கும் உள்ள பொருள் வேறுபாட்டை விளக்குவீர்கள் என்று எதிர்பார்க்கிறேன்.

said...

நல்ல விளக்கம் குமரன். மிக்க நன்றி.

இராமநாதன், உங்களுக்கு இருக்கும் இந்த ஐயம் பலருக்கு இருக்கும் என்று நினைக்கிறேன். கூடிய விரைவில் ஒரு தனிப்பதிவாகவே போடுகிறேன். சரிதானே?