Monday, November 07, 2005

இளமையில் கல்லா? கள்ளா?

கண்டுண்ட சொல்லியர் மெல்லியர் காமக் கலவிக்கள்ளை
மொண்டுண்டு அயர்கினும் வேல் மறவேன் முதுகூளித்திரள்
டுண்டுண் டுடுடுடு டூடூ டுடுடு டுண்டுடுண்டு
டிண்டிண் டெனக் கொட்டியாட சூர் கொன்ற ராவுத்தனே


இளமையில் கல் என்பது பழமொழி. இளமையில் கள் என்பது புதுமொழி. கள்ளருந்தினால் என்னவாகும்? அறிவு மங்கும். அறிவின் வயப்பட்டிருந்த உடல் தன்னிச்சையாக செயலாற்றத் துவங்கும். அது அழிவில் சென்று விட்டு விடும்.

ஆகையால்தான் கள்ளுண்ணாமை என்று அதிகாரமே எழுதியிருக்கின்றார் வள்ளுவர். குடித்த பொழுதே மனதை மயக்குவது கள்ளென்றால், நினைத்த பொழுதே மனதை மயக்குவது காமம்.

கள்ளுக்கடையை கண்ட பொழுதெல்லாம் கள்ளுண்டவனைப் போல காமக் கள்ளை மொண்டு உண்டார் அருணகிரிநாதர்.

கண்டுண்ட - கற்கண்டு உண்ட
சொல்லியர் - பேசுகின்றவர்கள்
கண்டுண்ட சொல்லியர் என்றால் கற்கண்டு போல இனிமையாகப் பேசுகின்றவர்கள்.
கண்டுண்ட சொல்லியர் மெல்லியர் என்றால் கற்கண்டு போல இனிமையாகப் பேசும் மென்மையான பெண்கள். அவர்களோடு கூடிக் குலவி காமக் கள்ளை மொண்டு உண்டு அயர்ந்து போகின்ற வேளையில் என்ன நினைக்க வேண்டும்?

வேலை நினைக்க வேண்டும். வேலென்றால் கொலைக்கருவி அல்ல. அறிவின் வடிவம். கொலைக்கருவி என்று கேவலமாகப் பேசக் கூடாது. அறிவு ஆழமானது. அகலமானது. கூர்மையானது. இவை மூன்றையும் குறிப்பது வேல்.

மதி மயங்கிய வேளையில் வேலை நினைக்க வேண்டும். அறிவு வரும். ஆகையால்தால் "அயர்கினும் வேல் மறவேன்" என்றார் அருணகிரிநாதர்.

இன்னும் விளக்கமாகச் சொல்கின்றேன். பாலைக் காய்ச்சுகிறோம். கொதிக்கின்ற பால் பொங்கி வழியப் போகிறது. அப்பொழுது சிறிது தண்ணீரைத் தெளித்தால் பால் அடங்கி விடும். இப்படி அடிக்கடி தண்ணீர் தெளித்து காய்ச்சிக் கொண்டே இருந்தால் பால் திரண்டு வரும். அறிவு மயங்கும் வேளைகளிலெல்லாம் வேலை நினைத்தால் அறிவு திரண்டு வரும். புரிகிறதா?

முருகனை நினைக்க வேண்டுமென்று சொல்லவில்லை. வேலை நினை என்று சொல்கின்றார். இதுதான் அருணகிரியின் மதச்சார்பற்ற பண்பு.

சூர் கொன்ற ராவுத்தனே என்று பாடலை முடிக்கிறார். சூர் என்றால் துன்பம். துன்பத்தைக் கொன்ற ராவுத்தனே என்று முருகனைப் புகழ்கிறார். இந்தப் பாடல் கந்தரலங்காரத்தில் வந்திருப்பதால் முருகனைக் குறிக்கின்றார் என்று சொல்கிறோம். தனிப்பாடலாக எடுத்துப் படித்தால் எல்லா மதத்தினரும் ஒத்துக் கொள்ளும் கருத்து நிறைந்திருக்கிறது.

கூளி என்றால் பேய். முது கூளித்திரள் என்றால் பெரும் பேய்க்கூட்டம். டுண்டுண்டுண்டென்று இந்தப் பேய்க்கூட்டங்கள் ஆடுகையில் துன்பத்தைக் கொன்ற ஆண்டவனை வேண்டுகின்றார் அருணகிரி.

இலக்கியத்தில் ஒரு காட்சி நினைவிற்கு வருகின்றது. சிலப்பதிகாரத்தில் வரும் போர்க்காட்சி. சேரன் செங்குட்டுவன் இமயத்தில் கல்லெடுக்கப் போகின்றான். அங்கே அவனை எதிர்க்கின்ற கனகனையும் விசயனையும் போரில் எதிர்கொள்கின்றான். வெல்கிறார். அப்பொழுதும் பேய்க்கூட்டங்கள் ஆடின பாடின என்று எழுதியுள்ளார் இளங்கோவடிகள். "பறைக்கண் பேய்மகள்" என்று எழுதியிருக்கிறார். பறையை ஒத்த பெரிய வட்ட வடிவமான கண்களை உடைய பேய் மகள் என்று பொருள்.

மனது மயங்கும் பொழுது இந்தப் பாடலை நினைத்துக் கொள்ளுங்கள். அறிவு வேலை செய்யும்.

அன்புடன்,
கோ.இராகவன்

6 comments:

said...

ராகவன்! வழக்கம் போல அழகாக சொல்லிவிட்டீர்கள். முருகனை பற்றி இவ்வளவு அழகான பாடல்கள் எல்லாம் இருக்கின்றன என்று உங்கள் மூலமாக தான் தெரிகிறது. மிகவும் நன்றி.
இந்த பாடல்களை ஒலி வடிவில் கேட்க வாய்ப்பு உள்ளதா?. கூறுங்கள்.

said...

என்ன ராகவன்? மகரந்தத்தில் போட்டப் பதிவை மீண்டும் இங்கே போட்டுவிட்டீர்கள். இந்தப் பதிவு கந்தரலங்காரத்தில் வரும் பாட்டைப் பற்றி என்பதாலா? இளமையில் எல்லோரும் விரும்பும் காமக்கலவிக் கள்ளைப் பற்றி எத்தனை முறை வேண்டுமானாலும் கூறலாம். அது வேண்டாம் என்று ஒரேயடியாய்ச் சொல்வதைவிட அதை மொண்டு உண்டு அயர்வுறும் வேளையில் வேலை நினை என்று சொல்வது நல்லது.

என் நண்பர் ஒருவர் கலவி முடிந்த உடனே கடவுளை நினைக்க முடியுமா - அது சரியாய்ப் படவில்லையே என்று ஒரு முறை கேட்டார். ஒரு தடவை அப்படி நினைத்துப்பார்; எப்படி உணர்ந்தாய் என்று பின்னர் வந்து சொல் என்றேன்.

இன்னொரு குறும்பு நண்பர் இருக்கிறார்...நான் எப்போதும் பெரியவர்கள் சொன்னப் பேச்சைக் கேட்பேன். அதனால் அந்த வேளையில் மதன வேளை மட்டுமே நினைப்பேன்; குமர வேளை நினைக்க மாட்டேன் என்றார். என்னப்பா சொல்கிறாய்? பெரியவர்கள் பேச்சைக் கேட்பேன் என்கிறாய்; பின்னர் இந்த பாடலில் சொன்ன மாதிரி வேலை நினைக்க மாட்டேன் என்கிறாய்; முன்னுக்குப் பின் முரணாய் இருக்கிறதே என்றால், அருணகிரிநாதர் தான் தெளிவாய்ச் சொல்லியிருக்கிறாரே 'அயர்வுறும் வேளையில்' என்று; எனக்கு இன்னும் இது அயர்வுறவில்லை; எப்பொது அயர்ந்து போகிறேனோ அப்போது நினைக்கிறேன் என்கிறார் :-)

said...

நன்றி சிவா. இன்னும் எக்கச்சக்கமாக உள்ளது. கந்தர் அலங்காரத்திலேயே நான் பொறுக்குமணிகளைத்தான் தருகிறேன். கந்தரநுபூதி இருக்கிறது. கந்தரந்தாதி, வேல் விருத்தம். மயில் விருத்தம். சிலப்பதிகாரம். கந்தபுராணம். நிறைய நிறையவே.

// இந்த பாடல்களை ஒலி வடிவில் கேட்க வாய்ப்பு உள்ளதா?. கூறுங்கள். //

உள்ளது என்று நினைக்கிறேன். எனக்குத் தெரிந்து சீர்காழி கோவிந்தராஜன் பாடி கந்தரலங்காரம் இசைக் கோர்வை வெளிவந்தது. கடைகளில் கேசட்டுகள் கிடைக்கலாம்.

said...

// என்ன ராகவன்? மகரந்தத்தில் போட்டப் பதிவை மீண்டும் இங்கே போட்டுவிட்டீர்கள். இந்தப் பதிவு கந்தரலங்காரத்தில் வரும் பாட்டைப் பற்றி என்பதாலா? //

அன்று மகரந்தத்தில் போட்ட காரணமே வேறு. ஒரே சண்டைக்காடாக இருந்தது. அடுத்த மதத்தைத் தாழ்ந்தது என்று கூறிச் சண்டை. ஆகையால் ஒரு நல்லிணக்கத்திற்காகப் போட்டேன். இன்று தொடர்ந்து போடுகிறோமே. அதனால்தான்.

// எனக்கு இன்னும் இது அயர்வுறவில்லை; எப்பொது அயர்ந்து போகிறேனோ அப்போது நினைக்கிறேன் என்கிறார் :-) //
அந்த வேளையில் கந்த வேளை நினைக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை. குடும்ப வாழ்க்கையை விட்டு விட்டு கந்தனை நினைக்கச் சொல்லவேயில்லை அருணகிரி. அவருக்குத் தெரியும். தவமும் அவமுடையார்க்கே ஆகும். அருணகிரி இந்த இடத்தில் சொல்வது அது ஒன்றே குறி என்று இருப்பவர்களுக்கு. சரிதானே!

ஆனாலும் உங்கள் நண்பர் குசும்பர்தான்.

said...

Erai Nesan said...
//இஸ்லாமியர்கள் மேல் பொதுவாக தனிப்பட்ட முறையில் யாருக்குமே வெறுப்பு என்பது கிடையாது.//

சகோதரர் எந்த காலத்தில் இருக்கிறார் என்று தெரியவில்லை. யாருக்குமே வெறுப்பு இல்லை என்று சகோதரர் சொல்வது முழு பூசணிக் காயை சோற்றில் மறைப்பது போல் உள்ளது. வெறுப்பு அல்ல அழிக்க வேண்டும் என்ற வெறியே உள்ளது. வேண்டுமெனில் பல உதாரணங்களை காட்ட முடியும். இந்த வெறி எங்கிருந்து ஊட்டப்படுகிறது என்பதை புரிந்தாலே போதும் ஏன் இவ்வளவு வெறி என்பதும் விளங்கும். முழுக்க முழுக்க பார்ப்பனர்களால் உருவாக்கப்பட்ட ஆர்.எஸ்.எஸ் உடைய வேத கிரந்தமான கோல்வார்க்கரின் "சிந்தனைத் தொகுப்புகள்(The Bunch of Thoughts)" -ஐப் பார்வையிடுங்கள். ஏன் இந்த வெறி என்பது நன்றாக விளங்கும்.

//பாகிஸ்தான் மீதுள்ள வெறுப்பும் குறைய வேண்டும். அந்த வெறுப்பும் இஸ்லாமிய வெறுப்பு ஆகாது.//

சரியான காமெடி தான் போங்கள்.

//குற்றம் செய்கின்றவர்கள் எங்கும் உள்ளனர். ஆகையால் பொதுப்படையாகக் குற்றம் சொல்வது, உங்களுக்கு அவர்கள் செய்வதைப் போன்றதேயாகும்.//

100% ஒத்துக் கொள்கிறேன். ஒட்டு மொத்தமாக அனைவரையும் குறிப்பிட்டது தவறு தான். ஆனால் நீங்கள் குறிப்பிடுவது போல் தவறு செய்யும் பொழுது முஸ்லிம்களை தவிர வேறு யாரையும் "தீவிரவாதிகள்", "தேச விரோதிகள்" என்று கூறப் படுவதில்லையே. இதனை எப்படி எடுத்துக் கொள்வது.

//சாதுக்கள் தவறு செய்கிறார்கள் என்பதால் தீவிரவாதிகளின் செயல் சரியாகாது.//

ஒருபோதும் நான் அப்படி கூறவில்லையே. நீங்கள் கட்டுரையை சரியாக விளங்கவில்லை என நினைக்கிறேன். நாட்டில் தீவிரவாதத்திலும், தேசவிரோத செயல்களிலும் ஈடுபடுபவர்களை எவ்வித தயவு தாட்சண்யமும் காட்டாமல் தூக்கு கயிறுக்கு அனுப்ப வேண்டும் என்பதே என் நிலைபாடு.

ஆனால் அதற்கு முன் "தீவிரவாதம்" என்றால் என்ன? "தேச விரோதம்" என்றால் என்ன? என்பதற்கு ஒரு இலக்கணம் தேவை என்று தான் நான் கூற வந்தேன்.

ஒரு நாட்டின் இறையாண்மைக்கு சவால் விடும் வகையில், அந்நாட்டு சட்டத்தை மதிக்க மாட்டோம் என்றும் அச்சட்டம் எங்களை கட்டுப் படுத்தாது என்று கூறுவதும் தேசவிரோதம் இல்லையா?. ஒரு நாட்டின் பாதுகாப்பிற்கு ஊறு விளைவிக்கும் அந்நாட்டு இராணுவ ரகசியங்களை அயல் நாட்டிற்கு விற்பது தேச விரோதம் இல்லையா? இவ்வாறு செயல் படுபவர்களில் எத்தனை பேரை தேசவிரோதிகள் என்று மக்கள் முன் அடையாளப்படுத்தப் பட்டிருக்கின்றனர். அல்லது "முஸ்லிம் தேச விரோதிகள்","முஸ்லிம் தீவிரவாதிகள்" என்று தொட்டதற்கெல்லாம் கூறுபவர்களில் எத்தனை பேர் இது போன்ற செயல்களில் ஈடுபட்டு உள்ளனர்.

"தவறு யார் செய்தாலும் தவறு தான்" இதை தான் நானும் கூறுகிறேன். தவறு முஸ்லிம்கள் செய்யும் போது மட்டும் அந்த அடைமொழிகளை கொடுத்து விட்டு மற்றவர்கள் செய்யும் பொழுது அதனை கண்டுகொள்ளாமல் விடக்கூடாது என்று தான் கூறுகிறேன். அல்லாமல் தீவிரவாதிகளும், தேசவிரோதிகளும் செய்வதை நியாயப்படுத்துவது என் நோக்கமல்ல. சகோதரர் புரிந்து கொள்வார் என நினைக்கிறேன்.

//இது போன்ற பதிவுகள் நமக்குத் தேவையில்லை. புரிந்து கொள்வீர்கள் என்று நினைக்கிறேன்.//

பதிவின் நோக்கம் உண்மையான தீவிரவாதிகளையும், தேசவிரோதிகளையும் அடையாளம் காட்டுவதே!. இல்லாமல் எந்த ஒரு சமுதாயத்தையும் கண்ணைமூடிக்கொண்டு காழ்ப்புணர்ச்சியுடன் காறித்துப்புவதில்லை. அபாண்டமாக செய்யாததை கூறி அவதூறு பரப்புவதும் நோக்கமல்ல. ஒரு நூற்றாண்டு காலமாக அபாண்டமாக பழி சுமத்தப்பட்டு அழித்து ஒழிக்கப்பட்டு கொண்டிருக்கும் இந்நாட்டு பூர்வீக குடிகளின் மனக்குமுறல் தான் இப்பதிவுகள். எனவே மக்கள் முன் உண்மையான தீவிரவாதிகளையும், தேசவிரோதிகளையும் அடையாளம் காட்ட இது போன்ற பதிவுகள் அவசியம் என்பது என் கருத்து. சகோதரர் புரிந்து கொள்வீர்கள் என்று நினைக்கிறேன்.

said...

தமிழ்ச் செல்வன். அது இறைநேசனின் வலைப்பூவில் இட்ட பதிவு அல்லவா! அதை இங்கே இட வேண்டிய அவசியம்?