Friday, December 16, 2005

பாவை - மூன்று

ஓங்கி உலகளந்த உத்தமன் பேர் பாடி
நாமும் நம் பாவைக்குச் சாற்றி நீராடினால்
தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரி பெய்து
ஓங்கு பெறும் செந்நெல் ஊடு கயலுகளப்
பூங்குவளைப் போதில் பொறி வண்டு கண்படுப்பத்
தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலை பற்றி
வாங்கக் குடம் நிறைக்கும் வள்ளல் பெரும் பசுக்கள்
நீங்காத செல்வம் நிறைந்தேலோர் எம்பாவாய்


தோழியரே! தமிழ்ப் பெண்களே! பாவை நோன்பைச் சொன்னேன். பாவை நோன்பிற்கான கிரிசைகள் சொன்னேன். ஓங்கி வளர்ந்தானே! உலகம் அளந்தானே! அந்த உத்தமனுக்கு எத்தனை பெயர்கள்! அத்தனை பெயர்களையும் பாடிப் பாவை நோன்பு நோற்றால் நடப்பதென்ன தெரியுமா? நோன்பின் சிறப்புகள் என்ன தெரியுமா? சொல்கின்றேன் கேளுங்கள்.

(ஒரு செயலைச் செய்யும் பொழுது அந்தச் செயலினால் விளையும் நன்மைகளை அடுக்குவது மற்றவர்களையும் அந்தச் செயலைச் செய்யத் தூண்டும். ஆகையால்தான் பெருநோன்பு துவக்குகையில் மற்ற தோழிகளையும் ஊக்குவிப்பதற்காக பாவை நோன்பு நோற்பதன் பயன்களைப் பட்டியலிடுகிறார் ஆண்டாள்.)

மூவடியில் முழுவுலகும் அளந்த அனந்தனின் புகழைப் பாடி நோன்பு நோற்றால் நாடெங்கும் ஒவ்வொரு திங்களும் பெய்ய வேண்டிய மும்மாரி தீங்கின்றி பொழியும். அப்படி தவறா மழை பொழியும் பொழுது வயல்வெளிகளெங்கும் செந்நெல் விளைந்திருந்து கதிர் முற்றும்முன் பால் பிடிக்கும் பருவத்தில் அழகிய கயல் மீன்கள் பயிர்களுக்குள் புகுந்து ஊடாடும்.

(நல்லவர்கள் ஒரு செயலைச் செய்யும் பொழுது அதன் பலன் தனக்கு மட்டுமே கிடைக்க வேண்டும் என்று எதிர் பார்க்க மாட்டார்கள். அனைவருக்கும் அது சேர வேண்டும் என்றே விரும்புவார்கள். நக்கீரரை எடுத்துக் கொள்ளுங்கள். திருமுருகாற்றுப்படையை எப்படித் துவக்குகிறார் தெரியுமா? "உலகம் உவப்ப". உலகமெலாம் மிகிழும் படியாக என்று துவக்கிறார். கச்சியப்பரும் அப்படித்தான் சிவபெருமானின் அம்சமாக முருகப் பெருமான் எழுந்த பொழுது "உலகம் உய்ய ஒரு திரு முருகன் தோன்றினான்" என்கிறார். தமிழருக்கு மட்டுமா? இந்தியருக்கு மட்டுமா? உலகம் முழுவதும் உய்ய வேண்டும் என்பதே அவா. ஏனென்றால் "யாதும் ஊரே! யாவரும் கேளிர்!" என்பதே தமிழ் மரபு அல்லவா. அந்தத் மரபில் வந்த கோதையும் உலகம் முழுவதும் உய்ய வேண்டும் என்று நோன்பு கொள்வதில் வியப்பென்ன இருக்க முடியும்! நாடெல்லாம் மழை பெய்து நிலவளம் செழிக்க வேண்டும் என்ற நல்ல எண்ணத்தை வியக்க வேண்டாம். தாயுள்ளம் அப்படித்தான் நினைக்கும்.)

வண்ணப் பொறியெனப் பறக்கும் அழகிய வண்டுகள் பூத்திருக்கின்ற குவளை மலர்களின் மத்தியில் மெத்தையில் படுத்துக்கொண்டு அளவிளாத தேன் பருகிக் கண் செருகிக் கிடக்கும். அந்த இனிமையான பொழுதுகளில் ஆயர்கள் தொழுது மடியில் கை வைத்து சீர் மிகுந்து பருத்த முலைகளைப் பற்றிப் பீய்ச்சவும், அசையாது நின்றிருந்து வைத்த குடம் நிறைக்க நிறைக்கக் கொடுக்கும் வள்ளல் பெரும் பசுக்கள் என்னும் நீங்காத செல்வம் நிறைந்து மகிழ்வாய் எம்பாவாய்!

(பசுக்கள் யாரையும் மடி தொட விடாது. தேர்ந்த நல்ல ஆயரே பசுவிடம் பால் பெற முடியும். அப்படிப் பால் கறக்கையில் பசுக்கள் வெருவிப் பதறினால் ஆயர் துணுக்குறுவர். அதனால் விரைவாகக் கறந்து செல்ல முயல்வர். அதனால் முழுமையான பலனைப் பெற முடியாது. ஆகையால்தான் பசுக்கள் தேங்காதே புக்கிருந்து (அசையாதே நின்றிருந்து) ஆயர் முழுமையாகப் பயன் பெறும் வகையில் பால் கொடுக்குமாம். அதனால்தான் அவைகளை வள்ளல் என்று புகழ்கிறார் ஆண்டாள். தமிழில் மாடு என்றால் செல்வம். பசு மாடுதானே. ஆகையால்தான் நீங்காத செல்வம் என்றும் புகழ்கிறார்.)

அன்புடன்,
கோ.இராகவன்

6 comments:

said...

மிக நன்று இராகவன். தமிழ் மரபுகளைப் பற்றிக் கூறும் விளக்கங்கள் மிகப் பொருத்தம். உங்களோடு சேர்ந்து நானும் ஒரு முறை இந்த அழகிய பாவைப் பாடலைப் பாடுகிறேன்.

ஓங்கி உலகளந்த உத்தமன் பேர் பாடி
நாங்கள் நம் பாவைக்குச் சாற்றி நீராடினால்
தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரி பெய்து
ஓங்கு பெருஞ்செந்நெல் ஊடு கயலுகளப்
பூங்குவளைப் போதில் பொறி வண்டு கண்படுப்பத்
தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலை பற்றி
வாங்கக் குடம் நிறைக்கும் வள்ளல் பெரும் பசுக்கள்
நீங்காத செல்வம் நிறைந்தேலோரெம்பாவாய்.

said...

நன்றி குமரன். இந்தப் பாடலில் நல்லவை நடக்க வேண்டும் என்று வருகின்றது. அடிக்கடிச் சொன்னால் நல்லதே நடக்கும்.

said...

Dear Raghavan
intha pattil uthamanay padamal uthaman per padi endra marabay vilakkamudiyuma? oonghi valurum payeray patri padiyathal oonghi ulagalantha uthaman endru arambithathaga kollalama TRC

said...

குமரன், நான் எழுத்துப் பிழையோடு பாடலைப் பதித்திருந்தேன். சுட்டிக் காட்டியமைக்கு நன்றி. இனிமேல் வெளிப்படையாகவே சுட்டிக் காட்டுங்கள். திருத்திக் கொள்கின்றேன். தவறுகள் திருந்தத்தானே.

said...

// ராகவன்,
உங்க ரேஞ்சே வேறங்க. ரொம்ப அழகா சொல்லியிருக்கீங்க.
கலக்குங்க. //

நன்றி வீகே. நம்ம ரேஞ்சு என்ன....பாரஸ்டு ரேஞ்சரு கணக்கா இருக்கா? :-))

said...

// intha pattil uthamanay padamal uthaman per padi endra marabay vilakkamudiyuma? oonghi valurum payeray patri padiyathal oonghi ulagalantha uthaman endru arambithathaga kollalama TRC //

நல்லவேளை TRC, நினைவு படுத்திவிட்டீர்கள். உத்தமன் என்ற சொற்றொடர் மிகப் பொருத்தமானது. இந்திரனின் பதவியைத் தான் அடையவே மாபலி யாகம் செய்தான். ஆனால் ஆண்டவன் வந்து மூவடி அளந்து மாபலியை மண்ணுக்குள் தள்ளினார். இந்திரன் பதவி பிழைத்தது. அதே நேரத்தில் மண்ணுக்குள் மாபலி பாதாளலோக அரசனாக சுகமாக வாழ்ந்தான். இப்படி இருவருக்கும் நன்மை செய்தவன் உத்தமனே அல்லவா!