Friday, December 23, 2005

பாவை - பதிமூன்று

புள்ளின் வாய் கீண்டானைப் பொல்லா அரக்கனைக்
கிள்ளிக் களைந்தானைக் கீர்த்திமை பாடிப் போய்ப்
பிள்ளைகள் எல்லாரும் பாவைக் களம் புக்கார்
வெள்ளி எழுந்து வியாழம் உறங்கிற்று
புள்ளும் சிலம்பின காண் போதரிக் கண்ணினாய்
குள்ளக் குளிரக் குடைந்து நீராடாதே
பள்ளிக் கிடத்தியோ பாவாய் நீ நந்நாளால்
கள்ளம் தவிர்த்து கலந்தேலோர் எம்பாவாய்


கொக்கின் உருவிலே ஒரு அரக்கன் வந்தான். வந்தவனும் நொந்தான். ஏன் தெரியுமா? அந்தக் கொக்கின் பெரிய நீண்ட அலகுகளைப் பற்றி அதன் வாயைப் பிளந்து எறிந்தான் கண்ணன். அத்தோடு சமருக்கு வந்த பொல்லாதவர்கள் தலைகளைக் கிள்ளிக் களைந்தான்.

(பொல்லாதவர் தலையைக் கிள்ளிக் களைந்தான் என்பதற்கு வேறுவிதமாகவும் பொருள் கொள்ளலாம். பொல்லாத்தன்மை தலையில் விளைவதுதானே. இறைவன் அந்தத் தலைக்கனத்தைக் கிள்ளிக் களைந்தான் என்றும் கொள்ளலாம். நமக்கு நல்லறிவு தரவேண்டிய கடமை இறைவனுக்கு உள்ளது அல்லவா!)

இப்படி நமது பொல்லாத்தனங்களை நீக்கும் பேரிறைவனின் புகழினைப் பாடுவதில் இன்பம் கொண்டு நமது தோழியர் எல்லாம் பாவை நோன்புக் களத்தில் புகுந்தனர். அவர்கள் நிச்சயமாக அந்தக் களத்தில் வெல்வர்.

(நோன்பு என்பதும் போர்க்களமே. முன்பே ஆண்டாள் சொன்னது போல நோன்பு என்பது இறைவனைத் தொழுவது மட்டுமல்ல. நல்ல செயல்களைச் செய்வதும்தான். அப்படி இருப்பது ஒரு சோதனைக் களந்தானே. அதில் வென்றால் பக்குவம் கிட்டும்.)

பின்னிரவில் ஒளிரும் வியாழன் ஒளி மங்கியது. ஏனென்றால் விடியலில் முளைக்கும் வெள்ளி ஒளியால்தான். இந்த விடிகாலையில் பறவைகளும் எழுந்து தமது கடமையைச் செய்ய ஒலியெழுப்பிக் கொண்டு பறக்கின்றன. இதை இப்பொழுதுதாவது உனது மலர்வண்டுக் கண்களைத் திறந்து பார்ப்பாய்!
(போதரி என்பதைப் போது+அரி என்று பிரிக்க வேண்டும். அரி என்றால் வண்டு. போது என்றால் மலரின் பருவம். காலையரும்பிப் பகலெல்லாம் போதாகி மாலையில் மலரும் மலர் என்ற வழக்கும் உண்டல்லவா. அரும்பு முழுதும் மூடியிருப்பது. மலர் முழுதும் விரிந்திருப்பது. போது என்பது பாதி மூடியும் திறந்தும் இருப்பது. அத்தகைய அழகிய கண்களை உடைய தோழியைப் பாடி அழைக்கின்றார் ஆண்டாள்.)

காலையில் எழுந்து குளிர்ந்த நீரில் மூழ்கியெழுந்து குளித்துப் புத்துணர்வு பெறாமல் இன்னமும் படுக்கையில் கிடக்கின்றாயே! இந்த நந்நாட்களிலாவது இயல்பான சோம்பலையும் கள்ளத்தனங்களையும் விடுத்து நல்லெண்ணம் கொள்வாய் எம்பாவாய்!

(பொதுவாகவே மதரீதியான நோன்புகளின் பலன் உடலையும் மனத்தையும் கட்டுப் படுத்தும் பக்குவம் பெறுவதே. ஆகையால்தான் தீய எண்ணங்களை விடுத்து மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ணம் ஒன்றையே கொண்டு நோன்பு நோற்க வேண்டும். அதுதான் முழுப்பலனைத் தரும்.)

அன்புடன்,
கோ.இராகவன்

11 comments:

said...

பொதுவாகவே மதரீதியான நோன்புகளின் பலன் உடலையும் மனத்தையும் கட்டுப் படுத்தும் பக்குவம் பெறுவதே. //

கரெக்டா சொன்னீங்க ராகவன். நோன்பு இருக்கும்போது நல்ல எண்ணங்களும் நம் மனதில் எழவேண்டும் என்பதும் மிகச்சரி. ஏதோ பெரியவங்க சொன்னாங்கன்னு நானும் நோம்பு இருக்கிறேன்னு சொல்றவங்க ஜாஸ்தியாயிருக்காங்க இப்ப.

said...

புதுமையான விளக்கங்கள். நன்றாய் இருக்கின்றன இராகவன்.

said...

//புதுமையான விளக்கங்கள். நன்றாய் இருக்கின்றன இராகவன்.//

வழிமொழிகிறேன்.

என்ன செய்யறது இராகவன்.நான் சொல்ல நினைக்கிறத எனக்கு முன்னாடியே குமரன் சொல்லிடறாரே!

அப்படியே நேரம் கிடைத்தால் ramanathan.blogATgmailDOTcom க்கு ஒரு மயில் பறக்க விடுங்களேன்.

நன்றி

said...
This comment has been removed by a blog administrator.
said...

அன்பு இராகவன்,
கம்சனால் ஏவிவிடப்பட்ட பகாசுரன்தான் கொக்கு வடிவில் வந்தவன்.

//அந்தக் கொக்கின் பெரிய நீண்ட அலகுகளைப் பற்றி அதன் வாயைப் பிழந்து எறிந்தான் கண்ணன்.//

பிழந்து என்பதை அருள்கூர்ந்து "பிளந்து" என மாற்றுதல் நலம்.

நோன்பு என்பது நமக்கு நாமே விதித்துக்கொள்ளும் சோதனை.
அருமையாகச் சொல்லியுள்ளீர்.

said...

இராகவன் - கிள்ளிக் களைந்தானை என்பதற்கு தங்கள் விளக்கம் (இறைவன் அந்தத் தலைக்கனத்தைக் கிள்ளிக் களைந்தான்) அருமை.

உங்களின் சில பதிவுகளை நான் படிக்க சிறிது தாமதமாகி விடுகிறது - என்னுடைய பின்னூட்டங்கள் மிகவும் தாமதமாய் வந்திருக்கிறது என நினைக்கிறேன். சமயம் கிடைத்தால் சென்று பார்த்து பதில் போடவும்.

ரங்கா.

said...

// கரெக்டா சொன்னீங்க ராகவன். நோன்பு இருக்கும்போது நல்ல எண்ணங்களும் நம் மனதில் எழவேண்டும் என்பதும் மிகச்சரி. ஏதோ பெரியவங்க சொன்னாங்கன்னு நானும் நோம்பு இருக்கிறேன்னு சொல்றவங்க ஜாஸ்தியாயிருக்காங்க இப்ப. //

உண்மைதான் சார். சரியாச் சொன்னீங்க.

// புதுமையான விளக்கங்கள். நன்றாய் இருக்கின்றன இராகவன். //

இதுக்கு எப்படி பொருள் கொள்றது குமரன்? அப்போ வழக்கமான பொருள் வேறயா?

said...

// அப்படியே நேரம் கிடைத்தால் ramanathan.blogATgmailDOTcom க்கு ஒரு மயில் பறக்க விடுங்களேன். //

பறக்க விட்டுருக்கேன் இராமநாதன்.

said...

// பிழந்து என்பதை அருள்கூர்ந்து "பிளந்து" என மாற்றுதல் நலம். //

நானும் எழுத்துப்பிழையறக் கற்க வேண்டும் என்று பார்க்கின்றேன். எப்படியோ தவறு வந்து விடுகின்றது. நல்ல வேளையாக நீங்களும் குமரனும் அதைச் சுட்டிக் காட்டி உதவுகின்றீர்கள். பதிவில் மாற்றி விட்டேன் ஞானவெட்டியான்.

said...

// உங்களின் சில பதிவுகளை நான் படிக்க சிறிது தாமதமாகி விடுகிறது - என்னுடைய பின்னூட்டங்கள் மிகவும் தாமதமாய் வந்திருக்கிறது என நினைக்கிறேன். சமயம் கிடைத்தால் சென்று பார்த்து பதில் போடவும். //

தாமதமானாலும் படித்துப் பின்னூட்டம் இடும் உங்கள் அன்பிற்கு மிக்க நன்றி. கண்டிப்பாக சென்று பார்க்கின்றேன். நான்கு நாட்கள் விடுப்பில் இருந்ததால் நானும் ஒழுங்காகப் பின்னூட்டம் இடவில்லை. :-)

said...

//இதுக்கு எப்படி பொருள் கொள்றது குமரன்? அப்போ வழக்கமான பொருள் வேறயா?
//

அதே.