Monday, January 23, 2006

1. சொல்லச் சொல்ல இனிக்குதடா

அன்புடைய நண்பர்களே! உழக்கைக்கொண்டு உததியை(கடலை) அளந்தாற் போல, ஒரு மாபெரும் பொருள் மேல் ஒரு மீச்சிறு முயற்சி. ஆம். நாம் பக்தியோடு பாடி மகிழும் பைந்தமிழ் பாக்களுக்கு, இறைவனை பூசிக்கும் பூக்களுக்கு விளக்கம் கூறும் முயற்சி. மும்மலமும் நீங்கி தன்னலமும் நீக்கி நானிலம் வாழ் நம் நலன் காக்கப் புலவர்கள் பாடிய பாச்சரங்களுக்குப் பூச்சரம் சூட்டும் முயற்சி. பாற்கடலை நக்கிக் குடித்த பூசை(பூனை) என்று கம்பனே தன்னைப் பற்றி கூறிக்கொள்கையில் என்னை என்னவென்றும் கூறலாகாது. ஆவலால் தொடங்கும் இந்த முயற்சி வெற்றி பெற, அதாவது உங்கள் விருப்பத்தைப் பெற, தமிழ்க்கடவுளை வேண்டுகிறேன்.

முதலும் முடிவுமில்லாத முதல்வன், அவன் தன் புதல்வன் முருகனைப் போற்றி அருணகிரி எழுதிய கந்தர் அநுபூதியைத் தொடுகிறேன். எனக்குத் தெரிந்தவைகளை வார்த்தைகளில் விடுகிறேன். முருகன் அருள் சேர்ப்போம். நமது துயர்களைத் தீர்ப்போம். பகையை நீர்ப்போம். இனி ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு செய்யுளாகப் பார்ப்போம்.

அநுபூதி என்றால் ஒன்றுதல் என்று பொருள். கந்தனோடு நம்மை ஒன்றச் செய்யும் செய்யுள்களின் தொகுப்பே கந்தர் அநுபூதி. கந்தரநுபூதியை இயற்றியவர் அருணகிரிநாதர். இவர் திருவண்ணாமலையில் பிறந்தவர். அருணையில் பிறந்து முருகன் அருளை உணர்ந்த இந்த மாமேதை வாய்ச் சொல் ஒவ்வொன்றும் தீந்தேன் துளிகள். அள்ளிப் பருக அலுக்காதவை. சொல்லி மகிழத் திகட்டாதவை.

கடவுள் வாழ்த்து

நெஞ்சக் கனகல்லும் நெகிழ்ந் துருகத்
தஞ்சத் தருள் சண்முகனுக் கியல்சேர்
செஞ்சொற் புனைமாலை சிறந்திடவே
பஞ்சக் கரவானை பதம் பணிவாம்

தஞ்சம் என்று கெஞ்சும் போதிலே அடைக்கலம் தந்து, கல் போன்ற நெஞ்சத்தை கனிய வைத்து உருக்கும் சண்முகக் கடவுளைப் புகழ்ந்து, செழுந்தமிழால் பாடல்களைச் சிறந்த முறையில் புனைந்து பாட, ஐந்து கரத்தானைப் பணிவோம். இதுதான் பாடலின் பொருள். அதற்கு விளக்கம் தொடர்கிறது.

போர் என்று வந்து விட்டது. வெற்றி வேண்டும். போராடிப் பார்ப்பதுதானே முறை! இங்கே ஒரு புனிதப் போரின் தொடக்கத்திலேயே அருணகிரிநாதர் சரணடைகிறார். வெற்றியும் கொள்கிறார்.

"திமிர உததி அனைய நரக ஜனனம்" என்று திருப்புகழ் கூறுகிறது. உததி என்றால் கடல். என்றுமே நிலைக்குந் தன்மையில்லாத கடலைப் போன்ற நரகமே இந்த பிறப்பு. நமது பிறப்பு சுகமாக இருக்கிறதா? தாய்க்குப் பெருந்துன்பம் கொடுத்துப் பிறக்கின்றோம். அதுவும் குறுகிய வழியில் நெருக்கிக் கொண்டு பிறக்கின்றோம். அப்படிப்பட்ட பிறப்பில், நம்மேல் தீயவைகள் தொடுக்கும் போரில் வெற்றி பெற என்ன வழி? முருகப் பெருமானைச் சரணடைவதே! ஆகக்கூடி போராடாமலே வெற்றி.

அத்தைகய மாபெரும் வெற்றி நம்மிடத்தில் என்ன செய்கிறது? கல் போன்ற நெஞ்சத்தைக் கனிய வைத்து உருகச் செய்கிறது. இரும்பு இளகும். செம்பு இளகும். தங்கம், வெள்ளி முதலான உலோகங்கள் இளகும். ஈரம் பட வைத்தால் வெல்லமும் கருப்பட்டியும் கூட இளகும். கல் இளகுமா?

என்ன இது? நடக்காத ஒன்றை அருணகிரி நாதர் கூறுகின்றாரே என்று நினைக்க வேண்டாம். அவர் அறிவிற் சிறந்தவர். ஒன்றை கூறும் முன்னம் பலமுறை சிந்தித்துப் பொருந்தும் விதமாக கூறும் அறிவையும் ஆற்றலையும் முருகப் பெருமான் அவருக்குக் கொடுத்திருந்தார்.

அப்படியானால் கல் இளகுவது! கல் உடைந்துதானே போகும்! அதிலும் நெஞ்சமாகிய கல் துயர் வரும் வேளைகளில் உடைந்து கண் வழியே கண்ணீராக அல்லவா பெருக்கெடுக்கிறது. அந்தக் கல் இளகுமா? உருகுமா?

இயல்பால் கல் உருகாது. அதுபோல துயரங்களும் தாமாக அகலாது. கல் உருகுவது என்பது நடவாத காரியம். நடவாத காரியத்தையும் நடத்திக் காட்டுவான் கந்தன் என்பதே இதன் உட்பொருள். உருகாத கல்லையும் பெரும் வெப்பத்திலும் அழுத்தத்திலும் உருகவைப்பது போல அகலாத அல்லல்களையும் அகற்றுவான் ஆறுமுகன். இப்பொழுது முதல் இரண்டு வரிகளையும் படியுங்கள் பொருள் நன்றாக விளங்கும்.

இப்படியெல்லாம் நமக்கு இன்பம் தந்த கடவுளைப் பாட தந்தக் கடவுளை வேண்டுகிறார் அருணகிரி. முருகனைப் புகழ்ந்து பாடுவதில் இன்பம். அதுவும் தமிழால் பாடுவது பேரின்பம். அந்த பேரின்பத்தை பெற ஆனையை வேண்டுகிறார். அதுவும் ஐந்து கரங்கள் கொண்ட ஆனையாம்!

ஆனை முகமும் மனித உடலும் கொண்ட ஆனை முகத்தானுக்கு வலக்கை இடக்கை மற்றும் துதிக்கை என்று மூன்று கைகள் தானே! ஐந்து எங்கிருந்து வந்தது? நமது வறுமை நீக்கும் நிதிக்கை. நமது பகைமையை வதைக்கை. இவையிரண்டும் சேர்ந்தால் ஐந்து கைகள்தானே! துதிக்கையானை துதித்து பைந்தமிழில் முருகனுக்கு பாமாலை சூட்டுகிறார் அருணகிரிநாதர்.

அன்புடன்,
கோ.இராகவன்



நண்பர்களே இந்தப் படம் தஞ்சைப் பெரிய கோயிலின் சுற்று மண்டபத்தில் எடுத்தது. பழைய நாயக்கர் கால ஓவியங்கள் என்கிறார்கள். நம்முடைய மக்களே நிறைய பாழடித்து விட்டார்கள். தப்பிப் பிழைத்தவைகளில் இதுவும் ஒன்று.

25 comments:

said...

வாழ்த்துகள் அண்ணா.

ஆன்மீக பதிவுகள் படிக்க ஆவலோடு இருக்கிறேன்.

அன்புடன்
பரஞ்சோதி

said...

அடிக்கடி கேட்கும் சில பாக்களுக்கு அர்த்தம் புரிந்து கேட்கும் நாள் வெகு தூரத்தில் இல்லை! ஆவலோடு இருக்கிறோம்மைய்யா.

said...

முருகன் அருள் சேர்ப்போம். நமது துயர்களைத் தீர்ப்போம். பகையை நீர்ப்போம். இனி ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு செய்யுளாகப் பார்ப்போம்.//

பார்ப்போம் ராகவன்.

அதுசரி பரஞ்சோதி என்ன கைக்குழந்தையா.. என்னையும் அண்ணாங்கறார். உங்களையும் அண்ணாங்கறார்..

பரஞ்சோதி கோச்சுக்காதீங்கநீங்க மேஜர்தானா? ஒரு வேளை இது திருநெல்வேலி ஸ்டைல் அண்ணனோ?

ஆன்மீக பதிவில தமாஷ் பண்ணாதீங்க சார்ங்கறீங்களா? அதுவும் சரிதான். தப்பு, தப்பு. கன்னத்துல போட்டுக்கிட்டேன்.

said...

// வாழ்த்துகள் அண்ணா.

ஆன்மீக பதிவுகள் படிக்க ஆவலோடு இருக்கிறேன்.

அன்புடன்
பரஞ்சோதி //

நன்றி பரஞ்சோதி. என்னுடைய ஒவ்வொரு முயற்சியிலும் எப்படியாவது வந்து வாழ்த்துக் கூறுவது உனக்கு வழக்கமாக இருக்கிறது. அன்புக்கு நான் அடிமை. :-)

said...

// அடிக்கடி கேட்கும் சில பாக்களுக்கு அர்த்தம் புரிந்து கேட்கும் நாள் வெகு தூரத்தில் இல்லை! ஆவலோடு இருக்கிறோம்மைய்யா. //

என்னால் முடிந்த வரைக்கும் செய்கிறேன் இ.கொ. உங்கள் ஆவலைப் பூர்த்தி செய்வேன் என்ற நம்பிக்கை இருக்கிறது. ஏதேனும் சந்தேகம் இருந்தாலும் தயங்காமல் கேளுங்கள்.

said...

// பார்ப்போம் ராகவன். //

நன்றி ஜோசப் சார்.

// அதுசரி பரஞ்சோதி என்ன கைக்குழந்தையா.. என்னையும் அண்ணாங்கறார். உங்களையும் அண்ணாங்கறார்.. //

அது அப்படித்தான். உறவுகள் வயச வெச்சா வருது? ராம் படத்துல ஒரு வசனம் வரும். சரண்யா மனநிலை சரியில்லாதவன் என்று சொல்லப்படும் தனது மகனைப் பற்றிச் சொல்வார். "நானா அவனப் பாத்துக்கிறேன்னு நெனக்கிறீங்க. அவந்தான் என்னக் கொழந்த போல பாத்துக்கிறான்." அது மாதிரிதான் இதுவும்.

// பரஞ்சோதி கோச்சுக்காதீங்கநீங்க மேஜர்தானா? ஒரு வேளை இது திருநெல்வேலி ஸ்டைல் அண்ணனோ? //

இதுக்குப் பரஞ்சோதியே பதில் சொல்லட்டுமே.

// ஆன்மீக பதிவில தமாஷ் பண்ணாதீங்க சார்ங்கறீங்களா? அதுவும் சரிதான். தப்பு, தப்பு. கன்னத்துல போட்டுக்கிட்டேன். //

அதெல்லாம் பண்ணலாம் சார். இறைவனும் தமாஷ் பண்ணீருக்கார். அதுனால எல்லாம் சரிதான் சார்.

said...

ஆஹா இராகவன்,
சொன்ன மாதிரியே கந்தர் அனுபூதியும் ஆரமிச்சாச்சா? வாழ்த்துகள். கடவுள் வாழ்த்து விளக்கமே அருமை.

//நமது வறுமை நீக்கும் நிதிக்கை. நமது பகைமையை வதைக்கை.//

இப்படியும் சொல்லலாமா? முதல் தடவையாக கேள்விப்படுகிறேன். நான்கு கைகள் + துதிக்கை என்றல்லவா நினைத்திருந்தேன். ஆனால், இதுவும் நன்றாகத் தான் இருக்கிறது.


ஆவலுடன்,

said...

// ஆஹா இராகவன்,
சொன்ன மாதிரியே கந்தர் அனுபூதியும் ஆரமிச்சாச்சா? வாழ்த்துகள். கடவுள் வாழ்த்து விளக்கமே அருமை. //

நன்றி இராமநாதன். எல்லாம் அப்பன் முருகன் செயல்.

////நமது வறுமை நீக்கும் நிதிக்கை. நமது பகைமையை வதைக்கை.//
இப்படியும் சொல்லலாமா? முதல் தடவையாக கேள்விப்படுகிறேன். நான்கு கைகள் + துதிக்கை என்றல்லவா நினைத்திருந்தேன். ஆனால், இதுவும் நன்றாகத் தான் இருக்கிறது.
ஆவலுடன், //

ஆவலோட கேக்குறீங்க. அதுனால சொல்றேன். நான்கு கைகளும் துதிக்கையும் சேர்ந்து ஐந்து கைகள் என்று சொல்வதும் உண்டு.

ஆனால் இரண்டு கைகளைக் கொண்டு துதிக்கையில் அருள் தரும் நிதிக்கையும் பகை வெல்லும் வதைக்கையும் காட்டுவான் என்றும் பொருள் கொள்ள விரும்பினேன். தமிழ் இலக்கணப்படி தவறில்லை என்பதால் இந்தப் புதிய விளக்கம். தோன்றியது. எழுதியும் விட்டேன். உங்களுக்குத் தவறாகத் தெரிகிறதா?

said...

//நமது வறுமை நீக்கும் நிதிக்கை. நமது பகைமையை வதைக்கை.//

நம்பிக்கை நாலவது கை நமது நெஞ்சத்தில் இருக்கை ஐந்தாவது கை என்றல்லவா நினைத்திருந்தேன். சரி ஆனைமுகனின் தம்பியின் தீவிர பக்தன் ராகவன் சொன்னால் சரியகத்தான்
இருக்கும்.இனியவை கேட்டாலே நன்றாக இருகிறதே நேரில் பார்த்தால் எப்படி இருக்கும். தி ரா ச

said...

இராகவன்,

வழக்கம் போல கலக்கிட்டீங்க. அருமையான விளக்கங்கள்.

நாம ஒரு போட்டி வச்சுக்கலாமா? :-) நீங்க வாராவாரம் இப்படி பதிவு போடுங்க. அதுல பின்னூட்டமா (சின்னதா) நானும் அதே பாட்டுக்கு எனக்குத் தோணுற விளக்கத்தைச் சொல்லிட்டுப் போறேன். என்னைக்காவது நீங்க சொன்ன விளக்கத்தை விட வேறு மாதிரியா தோணலைன்னா அதையும் பின்னூட்டத்துல சொல்லிடறேன்.

ஓகேயா?

மத்தவங்க என்ன சொல்றீங்க?

said...

தி.ரா.ச சார். என்ன சார். நம்ம வீட்டுப்பக்கம் ஆளைக் காணோம். நீங்க படிச்சு பின்னூட்டம் போடாட்டி எனக்கு எழுதுற ஊக்கமே குறைஞ்சு போயிடும் சார். ஆரம்பத்துல என்னை நல்லா அதட்டி வேலை வாங்குனீங்களே. மறந்துட்டீங்களா? :-)

said...

//உங்களுக்குத் தவறாகத் தெரிகிறதா?
//
தவறாகவெல்லாம் நினைக்கவில்லை இராகவன். //ஆனால், இதுவும் நன்றாகத் தான் இருக்கிறது.
// என்று எழுதியது தட்டுப்படவில்லையா?


தி.இரா.ச சொல்வது நன்றாகத்தான் இருக்கிறது?

அப்புறம் தி.இரா.ச, இராகவன் சொன்னா மாதிரி அநுபூதி தொடங்கிட்டாரு.இன்னும் பதிவு ஆரமிக்கலியே சொன்னா மாதிரி? :(

said...
This comment has been removed by a blog administrator.
said...

குமரன்,
இதுவும் நல்ல யோசனையாத்தான் இருக்கு. கண்டிப்பா செய்யுங்க. அப்படியே உங்க விளக்கத்தோட பெரும்பாலும் நீங்க வைஷ்ணவம் சார்ந்து எழுதறதால அதுல equivalent எதுனாச்சும் எடுத்துப்போடலாம். பழைய மாதிரி சண்டைக்கில்லப்பா. தெரிஞ்சிக்கத்தான். உடனே அடிக்க வரப்டாது! :)

said...

கல் போன்ற எத்தகைய இருகிய மனத்தையும் தம் அருளால் உருக்க வல்லான் முருகன்! ஆனால் நினைத்து சுய சிந்தனையுடன் முருகனைச் சரணடைந்தால்: வேண்டுமென்பதில்லை. கேட்காமலேயே அருளும் தயவும் தந்தருளவல்லான் நம் முருகன்.

அப்பேர்ப்பட்ட முருகனின் அண்ணன் இன்னும் எத்தகைய கருணையுடையவன்? அவனைப்பாடினாலும் அவனின் தம்பியைப்பாடினாலும் ஒன்றுதானே!!!!

அவன் இந்த என் எளிய பாக்கலாள் ஆன மாலையை சூடி, மேலும் இதற்கு புகழ் சேர்ப்பான்! அவனை கொண்டாடுவதன் மூலம் இப்பாக்களுக்கும் மென்மேலும் புகழ் கிடைக்குமென்று நினைக்க்கிறேன்!

இதே போல வெட்டி(குட்டி) விளக்கங்களை என் பதிவிலும் பதிப்பிக்கலாம் என்ற ஆர்வம் இராகவன். சரியெனில் ஆமென்றும், இல்லையெனில் போவென்றும் பதிக்க வேண்டுகிறேன். நன்றி.

அன்புடன்,
இராமநாதன்

said...

வெட்டி (குட்டி) விளக்கங்கள் நன்றாய் இருக்கின்றன இராமநாதன். போ. போய் உங்கள் பதிவில் போடுங்கள் என்று சொன்னேன். :-) தனி வலைப்பூவாய்த் தொடங்கிப் போட்டால் நல்லது. இல்லாவிட்டால் நீங்கள் போடும் மற்றப் பதிவுகளுடன் இதுவும் கலந்து குட்டி விளக்கமாய் இல்லாமல் குட்டிச்சுவர் விளக்கமாய்ப் போய்விடும். :-)

said...

எனக்கு இன்னொரு பதிவு தாங்காது. அதனால் இங்கேயே பின்னூட்டமாய்ப் போட்டுவிடுகிறேன், இராகவனும் மற்றவர்களும் அனுமதித்தால். :-)

said...

ஆகா என்ன நடை உன் தமிழ் நடை
அருமையினும் அருமை உன் பெருமையே பெருமை அதை படிக்க வைத்து என் நேரத்தை கெடுத் தனை.
உழக்கை கொண்டு கடலை அளக்க முடியுமா? பாற் கடலை பூனை தான் நக்குமா?
பிறவா யாக்கை பெரியோன் மகன் தனை
அருணகிரி (அருண் - சூரியன்;கிரி - மலை) பாடலை கேட்க ஆவலாக உள்ளேம். படையுங்கள் ராகவன்.

said...

// நம்பிக்கை நாலவது கை நமது நெஞ்சத்தில் இருக்கை ஐந்தாவது கை என்றல்லவா நினைத்திருந்தேன். சரி ஆனைமுகனின் தம்பியின் தீவிர பக்தன் ராகவன் சொன்னால் சரியகத்தான்
இருக்கும்.இனியவை கேட்டாலே நன்றாக இருகிறதே நேரில் பார்த்தால் எப்படி இருக்கும். தி ரா ச //

தி.ரா.ச, அப்படியும் சொல்லலாம். நல்ல விளக்கம்.

இனியதை நேரில் பார்த்தால் குண்டாக இருக்கும். கடந்த இரண்டு மாதத்தில் வெயிட் ரொம்பவும் ஏறி விட்டது. அம்மாவின் கைமணம்.

said...

// இராகவன்,
வழக்கம் போல கலக்கிட்டீங்க. அருமையான விளக்கங்கள். //

நன்றி குமரன்.

// நாம ஒரு போட்டி வச்சுக்கலாமா? :-) நீங்க வாராவாரம் இப்படி பதிவு போடுங்க. அதுல பின்னூட்டமா (சின்னதா) நானும் அதே பாட்டுக்கு எனக்குத் தோணுற விளக்கத்தைச் சொல்லிட்டுப் போறேன். என்னைக்காவது நீங்க சொன்ன விளக்கத்தை விட வேறு மாதிரியா தோணலைன்னா அதையும் பின்னூட்டத்துல சொல்லிடறேன்.

ஓகேயா? //

சரி. நாம இந்த விஷயத்துல ரெண்டு பட்டா முருகனுக்கும், தமிழன்னைக்கும், தமிழன்பர்களுக்கும் கொண்டாட்டமா இருக்குமுன்னு நெனைக்கிறேன். அதுனால ஒங்க போட்டியை ஏத்துக்கிறேன்.

// மத்தவங்க என்ன சொல்றீங்க? //

தெரியலையே...என்ன சொல்றீங்க நண்பர்களே?

said...

////ஆனால், இதுவும் நன்றாகத் தான் இருக்கிறது.
// என்று எழுதியது தட்டுப்படவில்லையா? .//

தட்டுப்பட்டது இராமநாதன். ஆனாலும் தெரிஞ்சக்கலாமுன்னுதான் கேட்டேன்.


// தி.இரா.ச சொல்வது நன்றாகத்தான் இருக்கிறது? //

அதுக்கு எதுக்கு கேள்விக் குறி? தி.ரா.ச சொல்வதும் மிகவும் நன்றாக இருக்கிறது. ரசித்தேன்.

// அப்புறம் தி.இரா.ச, இராகவன் சொன்னா மாதிரி அநுபூதி தொடங்கிட்டாரு.இன்னும் பதிவு ஆரமிக்கலியே சொன்னா மாதிரி? :( //

இதுக்கு தி.ரா.ச தான் விடை சொல்லனும். என்ன சொல்றீங்க தி.ரா.ச?

said...

// குமரன்,
இதுவும் நல்ல யோசனையாத்தான் இருக்கு. கண்டிப்பா செய்யுங்க. அப்படியே உங்க விளக்கத்தோட பெரும்பாலும் நீங்க வைஷ்ணவம் சார்ந்து எழுதறதால அதுல equivalent எதுனாச்சும் எடுத்துப்போடலாம். பழைய மாதிரி சண்டைக்கில்லப்பா. தெரிஞ்சிக்கத்தான். உடனே அடிக்க வரப்டாது! :) //

அதே அதே இராமநாதன் கருத்துதான் என்னோடதும். நான் எத எழுதுனாலும் அதுல லேசா சைவ வாடை வந்துருது. குமரன் நீங்க அசைவ வாடையோட எழுதப் போறீங்கதானே!!!!!!

said...

// இதே போல வெட்டி(குட்டி) விளக்கங்களை என் பதிவிலும் பதிப்பிக்கலாம் என்ற ஆர்வம் இராகவன். சரியெனில் ஆமென்றும், இல்லையெனில் போவென்றும் பதிக்க வேண்டுகிறேன். நன்றி. //

என்னது இது இராமநாதன்.....கண்டிப்பாக நீங்கள் பதியத்தான் வேண்டும். நாங்கள் படிக்கத்தான் வேண்டும். டும். டும். டும்.

said...

// போ. போய் உங்கள் பதிவில் போடுங்கள் என்று சொன்னேன். :-) தனி வலைப்பூவாய்த் தொடங்கிப் போட்டால் நல்லது. இல்லாவிட்டால் நீங்கள் போடும் மற்றப் பதிவுகளுடன் இதுவும் கலந்து குட்டி விளக்கமாய் இல்லாமல் குட்டிச்சுவர் விளக்கமாய்ப் போய்விடும். :-) //

சரியாகச் சொன்னீர்கள் குமரன். இராமநாதன் குமரன் சொல்ல வந்தது புரிந்ததுதானே....எப்பொழுது அடுத்த வலைப்பூ? என்ன பெயர்? என்ன தலைப்பூ?

said...

// எனக்கு இன்னொரு பதிவு தாங்காது. அதனால் இங்கேயே பின்னூட்டமாய்ப் போட்டுவிடுகிறேன், இராகவனும் மற்றவர்களும் அனுமதித்தால். :-) //

அநுபூதி பதிக்க அனுமதி கேட்கும் பெருமதியாருக்கு நான் கொடுப்பது எது? எடுப்பதுதான் உமக்கு உரியது. புரிந்ததா குமரன்?