Monday, January 30, 2006

2. பிள்ளையாரும் பிள்ளை ஆறும்

ஆடும் பரிவேல் அணி சேவலெனப்
பாடும் பணியே பணியா யருள்வாய்
தேடும் கயமா முகனைச் செருவில்
சாடும் தனியானை சகோதரனே


முருகா! தேடி வந்து போர் புரிந்த கஜமுகாசுரனை வீழ்த்திய விநாயகப் பெருமானின் சகோதரனே! ஆடும் மயிலும், வேலும், மற்றும் அழகு சேவலுஞ் சேரத் தோன்றும் இறைவனே என்று உன்னைப் பாடுகின்ற பணி ஒன்றையே எனக்குப் பணியாகத் தருவாய்!

ஆடும் பரி என்றால் என்ன? பரி என்றால் குதிரை. குதிரை ஆடுமா? திருவிழாக்களில் மேளத்திற்கு ஏற்ப குதிரை காலைத் தூக்கித் தூக்கி வைப்பதைப் பார்த்திருக்கலாம். அதையும் ஆட்டம் என்றே எடுத்துக் கொள்ளலாம். அதற்கும் முருகனுக்கும் என்ன தொடர்பு?

இங்கே பரி என்று அருணகிரியார் குறிப்பிடுவது மயிலை. பொதுவாக அந்தக் காலங்களில் குதிரைகளைத்தான் வாகனமாக பயன்படுத்தினார்கள். அதனால் வாகனம் என்ற சொல்லுக்கு மாற்றாக பரி என்ற சொல்லை பயன்படுத்தியுள்ளார். தமிழ் இலக்கணத்தில் இதை வினையாகுபெயர் என்பார்கள்.

கந்தரலங்காரத்தில் "கலாபத் திருமயிலேறும் ராவுத்தனே" என்கின்றார். அந்தக் காலத்தில் ராவுத்தர்கள் குதிரை வளர்ப்பில் கெட்டிக்காரர்களாக இருந்தார்கள். ஆகையால் மயிலைக் குதிரை என்று அழைத்த பிறகு முருகனை ராவுத்தன் என்று அழைக்கின்றார்.

முருகக் கடவுளோ மயிலை வாகனமாகக் கொண்டவர். ஆகையால் ஆடும் பரி என்கிறார். ஆடும் மயிலும் வேலும் அணி செய்யும் சேவலும் என்றெல்லாம் உனைப் பாடிப் புகழ்ந்து மகிழும் வேலை தருவாய் வேலைப் பிடித்தவனே.
"உனைப்பாடும் தொழிலின்றி வேறு இல்லை
எனைக் காக்க உனையின்றி யாருமில்லை
"
என்ற புகழ் பெற்ற பக்திப் பாடலையும் நினைவிற் கொள்க.

இந்த அடிகளில் மற்றொரு சிறப்பும் உள்ளது. ஆம். மயிலை ஆடும் பரி என்றார். சேவலை அணி சேவல் என்றார். ஆனால் வேலுக்கு எந்த அடைமொழியும் கொடுக்கவில்லை. ஏனென்றால் தேவையில்லை. வேல் என்பது ஞானத்தின் வடிவம். அறிவிற்கு அடைமொழி தேவையில்லை. ஆகையால் மயிலையும் சேவலையும் இடவலமாக வைத்து வேலை நடுவில் வைத்தார் அருணகிரி.

தேடும் கஜமாமுகன். எதைத் தேடினான்? எங்கே தேடினான்? தவம் பல செய்து வரம் பல பெற்ற வல்லரக்கன் கஜமுகாசுரன். ஆனை முகம் கொண்டவன். அந்த வல்லரக்கனோ நல்லரக்கனாக இல்லாமல், அடுத்தவரை கொல்லரக்கனாக இருந்தான். தன்னை வெல்லரக்கர் யாருமில்லை என்ற உண்மையை உணர்ந்து, தன்னோடு போரிட இணையானவர் யாரென்று தேடித் தேடி அலைந்தான்.

ஆனை முகம் கொண்டதால், விநாயகரே தனக்குத் தக்கவர் என்று பிழையாக நினைத்து போர் புரிந்தான். அவனது தலையெழுத்தை அறிந்த கனநாதனோ கஜமுகனின் தலையையும் அரிந்தான். மக்களைக் காத்து கருணையைச் சொரிந்தான். அப்படிப் பட்ட விநாயகப் பெருமானைத் தமையனாராகக் கருதக் கொண்டவரே! ஆறுமுகனே!

முருகனுக்கும் பிள்ளையாருக்கும் உள்ள இந்த சகோதர உணர்வு பல பிற்காலத்தைய தமிழ்ப் பாடல்களில் பாடப் படுகிறது. விநாயகரின் பதினாறு திருநாமங்களில் ஸ்கந்த பூர்வஜன் என்ற திருநாமமும் வழங்கப் படுகிறது. கந்தனுக்கு முந்தியர் இந்த உந்தியர். உந்தி என்றால் தொந்தி.

அக்குற மகளுடன் அச்சிறு முருகனை
அக்கண மணமருள் பெருமானே
, என்று திருப்புகழும் பிள்ளையாருக்கும் பிள்ளை ஆறுக்கும் உள்ள தொடர்பைச் சொல்கிறது. பிள்ளை ஆறு என்றால்? ஆறு பிள்ளைகள் தோன்றி, ஆறு கார்த்திகைப் பெண்களிடம் வளர்ந்து, அகிலாண்ட நாயகியின் அணைப்பில் அறுவர் ஒருவரானதால், அப்படியும் கூறலாம்தானே!

இறுதியடியில் தனியானை சகோதரனே என்று வந்துள்ளது. அதென்ன தனியானை? யாருக்கும் நிகரில்லாத என்று பொருள். அரசவையில் அமைச்சர்கள் எல்லாம் வரிசையாக கொலுவீற்றிருக்க அரசன் எல்லோருக்கும் முன்னால் மேடையில் தனியாக இருப்பான். அங்கே தனியாக இருப்பது இழுக்கா? இல்லை. அது பதவி. பெருமை. அரசனுக்கு இணையாக அரசி அமர்வாள். அப்போது அவன் தனிமை போகிறது அங்கு. ஆனால் அப்படி யாரும் இல்லாததால் தனியாக இருப்பவன் விநாயகன். அவனை வணங்கி அருள் பெறலாம்.

அன்புடன்,
கோ.இராகவன்

27 comments:

said...

Hi
When was the first time Pillayar mentioned in Tamil literature?
According to a politician he came from a neighboring state - is this true.
Was Avvaiyar the first one to sing about Pillayar?
Sam

said...

சாம், எல்லாக் கடவுளும் தமிழர்கள் வணக்கத்திலிருந்த கடவுள்கள் அல்லர். வெளியிலிருந்து வந்தவர்களும் உண்டு. பிள்ளையாரை எந்த நூலில் முதலில் கையாண்டிருக்கிறார்கள் என்பதே தெரியவில்லை. தேடிப் பார்க்க வேண்டும்.

கடைச்சங்க கால நூல்களில் எல்லாம் பிள்ளையாரைப் பற்றிச் செய்தியே இல்லை. பிற்கால ஔவையின் நூல்களில் பிள்ளையாரைப் பற்றி நிறைய உள்ளது. திருமுருகாற்றுப்படையிலோ, சிலப்பதிகாரத்திலோ, மற்ற சங்க நூல்களிலோ எந்தக் குறிப்பும் காணக்கிடைக்கவில்லை என்பதும் உண்மையே. முதல் நூல் எந்த நூல் என்று ஆராய்ச்சியாளர்களைத்தான் கேட்க வேண்டும்.

said...

அற்புதமான விளக்கம் இராகவன். தமிழார்வலர்களுக்கே உரிய சொல் விளையாட்டுகளும் அதிகமாய் வழக்கம் போல் உங்கள் விளக்கத்தில் இருக்கின்றன. :-) சில நேரங்களில் அந்த சொல் விளையாட்டுகளில் மனம் ஈடுபட்டு முக்கிய பொருளை மறந்துவிடுகிறது. :-)

ஆடும் பரி, வேல், அணி சேவல் என்று இருக்கும் இவை எல்லாமே அஃறிணைப் பொருட்கள் போல் தோன்றினாலும் அவை அஃறினையல்ல. அவையெல்லாம் முருகனின் அடியார்கள் அவனுக்கு என்றும் தொண்டு செய்து கொண்டிருக்க எடுத்த உருவங்கள். ஆடும் பரி வேல் அணி சேவலெனப் பாடும் பணியே பணியாய் அருள்வாய் என்று தான் சொன்னாரே ஒழிய ஆடும் பரி வேல் அணி சேவலுடை இறைவனே எனப் பாடும் பணியே பணியாய் அருள்வாய் என்று சொல்லவில்லை. இறைவனைப் பாடுதலை விட அவன் அடியாரைப் பாடுதல் அவனுக்கும் பிடிக்கும்; பாடுபவர்க்கும் பிடிக்கும் செயல். அந்த செயலைச் செய்வதே பணியாய்க் கொடுத்தருள்வாய் என்று சொல்வதாக அடியேனுக்குத் தோன்றுகிறது. (அதனால் அன்றோ நான் செல்லுமிடமெல்லாம் இராகவனின் புகழ் பாடுவது).

தனியானை என்பதற்கு நீங்கள் சொன்ன விளக்கம் ரொம்பப் பொருத்தம். விநாயகன் என்ற பெயருக்கே தனக்கு மேலாக ஒரு நாயகன் இல்லாதவன் என்றே பொருள். அதனால் அவன் தனி யானை தான்.

முருகனைச் தனியானைச் சகோதரன் என்கிறார். உலக வழக்கில் அவர் இருவரும் சகோதரர்களாய் இருப்பினும் ஒரே வயிற்றில் பிறந்தவர் அல்லர். சக உதரர் - ஒரே வயிற்றில் பிறந்தவர் என்ற சொல்லை இங்கே போட்டு அவர்கள் சகோதரராய் இல்லாவிட்டாலும் சகோதரரே என்று சொல்லாமல் சொல்கிறார்.

உண்மையில் அவர்கள் இருவருமே தாய் வயிற்றில் வளர்ந்து பிறந்தவர்கள் இல்லை. அது வேறு விஷயம்.

//அப்படிப் பட்ட விநாயகப் பெருமானின் தமையனாரே! ஆறுமுகனே!//

இந்த வரியைக் கொஞ்சம் சரி செய்யுங்கள்.

said...

Aimperum kappiyankal, samana matha kalakkaddathil eluthppaddathu, Pillayaraip parri eluthu avachiyam irunthirukkathu. antha araciyal vathigin koorru unmaiyakavum irukkalam; eninum THEN NADUDAIYA SIVANEE PORRI, ENNADDAVARUKKUM IRAIVA PORRI ennpom.
nanri
Johan-paris

said...

வழக்கமான இராகவன் விளக்கம். (அருமை அற்புதம் பிரமாதம்னே எழுதினா போரச்சிடுமே. அதனால் வழக்கமான சிறப்பான பதிவு என்று கொள்ளவும் :) )

என்னடா, இரண்டாவது பாட்டிலேயே மாட்டிக்கொண்டுவிட்டோமே. குமரன் மானத்தை வாங்கிவிடுவாரே என்று பயந்துகொண்டிருந்தேன். நல்ல வேளை வசதியாக பரி என்பதற்கு விளக்கம் அளித்து என்னை காப்பாற்றி விட்டீர்கள். இதுக்குத்தான் நீங்க பதிச்சப்புறமே நானும் பதிப்பேன்னு சொன்னேன். :P

தனியானைக்கும் பிரமாதமான விளக்கம்.

குமரன் சொல்லும் அடியார்களைப் பாடும் விளக்கமும் அருமை. நாளைக்கு நான் உளறி வைக்கிறேன்.

ஜிரா,
அப்புறம் இங்கே அவசியம் வந்து பார்க்கவேண்டும் நீங்கள். செல்வன் என்னெல்லாமோ சொல்றார்.

said...

அருமை ராகவன். படிப்பதற்க்கு இனிமையாக இருந்தது. அதற்கு மேல் விளக்கம் சொல்ல எனக்கு ஆன்மீக அறிவெல்லாம் கிடையாது. தொடர்ந்து எழுதுங்கள். படிக்க ஆவலாய் உள்ளேன்.

அன்புடன்,
சிவா

said...

வேல் என்பது ஞானத்தின் வடிவம். அறிவிற்கு அடைமொழி தேவையில்லை. ஆகையால் மயிலையும் சேவலையும் இடவலமாக வைத்து வேலை நடுவில் வைத்தார் அருணகிரி
அருமையான விளக்கம். புதிய பரிமாணம்.தி.ரா.ச

said...

Hi
Thank you for your response
Sam

said...

பிள்ளை ஆறு - கலக்கிட்டீங்க வாத்தியாரே

said...

// அற்புதமான விளக்கம் இராகவன். தமிழார்வலர்களுக்கே உரிய சொல் விளையாட்டுகளும் அதிகமாய் வழக்கம் போல் உங்கள் விளக்கத்தில் இருக்கின்றன. :-) சில நேரங்களில் அந்த சொல் விளையாட்டுகளில் மனம் ஈடுபட்டு முக்கிய பொருளை மறந்துவிடுகிறது. :-) //

அப்படியா....இதையெல்லாம் வேண்டுமென்று எழுதுவதில்லையே. வருவதை எழுதுகிறேன். அப்படிச் சொல் விளையாட்டுகள் வராமல் எழுத வேண்டும் என்றால் என்னுடைய எழுத்தின் இயல்பு மாறி விடும். ஆகையால் அவ்வப்பொழுது சொல்லாடிக் கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறேன். :-)

// ஆடும் பரி, வேல், அணி சேவல் என்று இருக்கும் இவை எல்லாமே அஃறிணைப் பொருட்கள் போல் தோன்றினாலும் அவை அஃறினையல்ல. //

ஆமாம். அதைத்தான் நானும் சொல்லியிருக்கிறேன்.

// அவையெல்லாம் முருகனின் அடியார்கள் அவனுக்கு என்றும் தொண்டு செய்து கொண்டிருக்க எடுத்த உருவங்கள். ஆடும் பரி வேல் அணி சேவலெனப் பாடும் பணியே பணியாய் அருள்வாய் என்று தான் சொன்னாரே ஒழிய ஆடும் பரி வேல் அணி சேவலுடை இறைவனே எனப் பாடும் பணியே பணியாய் அருள்வாய் என்று சொல்லவில்லை. இறைவனைப் பாடுதலை விட அவன் அடியாரைப் பாடுதல் அவனுக்கும் பிடிக்கும்; பாடுபவர்க்கும் பிடிக்கும் செயல். அந்த செயலைச் செய்வதே பணியாய்க் கொடுத்தருள்வாய் என்று சொல்வதாக அடியேனுக்குத் தோன்றுகிறது. (அதனால் அன்றோ நான் செல்லுமிடமெல்லாம் இராகவனின் புகழ் பாடுவது). //

இந்தக் கருத்து சற்றுப் புதுமையாக இருக்கிறது. தொண்டர் தம் பெருமை சொல்லவும் பெரிதே என்பது சைவ மரபுதான். ஆனால் இந்த இடத்தில் அதை ஒற்றி வைப்பது புதுமை.
(அது சரி. அடியர் புகழ் என்று சொல்லி விட்டு இந்தத் தடியர் புகழ் பாடுதல் முறையோ முறையோ!

// தனியானை என்பதற்கு நீங்கள் சொன்ன விளக்கம் ரொம்பப் பொருத்தம். விநாயகன் என்ற பெயருக்கே தனக்கு மேலாக ஒரு நாயகன் இல்லாதவன் என்றே பொருள். அதனால் அவன் தனி யானை தான். //

மிக்க நன்றி.

// முருகனைச் தனியானைச் சகோதரன் என்கிறார். உலக வழக்கில் அவர் இருவரும் சகோதரர்களாய் இருப்பினும் ஒரே வயிற்றில் பிறந்தவர் அல்லர். சக உதரர் - ஒரே வயிற்றில் பிறந்தவர் என்ற சொல்லை இங்கே போட்டு அவர்கள் சகோதரராய் இல்லாவிட்டாலும் சகோதரரே என்று சொல்லாமல் சொல்கிறார்.

உண்மையில் அவர்கள் இருவருமே தாய் வயிற்றில் வளர்ந்து பிறந்தவர்கள் இல்லை. அது வேறு விஷயம். //

உண்மைதான்.

////அப்படிப் பட்ட விநாயகப் பெருமானின் தமையனாரே! ஆறுமுகனே!//

இந்த வரியைக் கொஞ்சம் சரி செய்யுங்கள். //

என்ன சரி செய்ய வேண்டும் என்றும் சொல்லி விடுங்களேன். பிழைகளை வெளிப்படையாகச் சொல்லலாமே.

said...

// Aimperum kappiyankal, samana matha kalakkaddathil eluthppaddathu, Pillayaraip parri eluthu avachiyam irunthirukkathu. antha araciyal vathigin koorru unmaiyakavum irukkalam; eninum THEN NADUDAIYA SIVANEE PORRI, ENNADDAVARUKKUM IRAIVA PORRI ennpom.
nanri
Johan-paris //

ஜோஹன், ஐம்பெருங்காப்பியங்கள் அத்தனையும் சமணம் அல்ல. மூன்று சமணக்காப்பியங்கள். ஒரு பவுத்தக் காப்பியம் (மணிமேகலை). ஒன்று தூயதமிழ்க் காப்பியம் (சிலப்பதிகாரம்). தமிழகத்தையே சுற்றிச் சுற்றி வரும். ஆகையால்தான் சிலப்பதிகாரம் இன்றும் நிலைத்து நிற்கிறது. மற்ற காப்பியங்களின் நிலை காணாமல் போயிருக்கிறது.

சிலப்பதிகாரத்தில் மட்டுமல்ல...திருமுருகாற்றுப்படையிலோ ஏனைய எந்தச் சங்க நூல்களிலும் பிள்ளையாரின் குறிப்பு காணக்கிடைக்கவில்லை என்பதே உண்மை. பிற்கால நூல்களில்தான் காணக்கிடைக்கின்றன. ஆயினும் முதல் நூல் எது என்று தமிழறிஞர்களைத்தான் கேட்க வேண்டும்.

said...

If the Harappan civilizatian is Dravidian as claimed by many here, then Pillaiyar is surely Dravidian.
See for yourself:
http://www.harappa.com/figurines/44.html

said...

// வழக்கமான இராகவன் விளக்கம். (அருமை அற்புதம் பிரமாதம்னே எழுதினா போரச்சிடுமே. அதனால் வழக்கமான சிறப்பான பதிவு என்று கொள்ளவும் :) ) //

நன்றி நன்றி. எல்லாம் முருகனருள்.

// என்னடா, இரண்டாவது பாட்டிலேயே மாட்டிக்கொண்டுவிட்டோமே. குமரன் மானத்தை வாங்கிவிடுவாரே என்று பயந்துகொண்டிருந்தேன். நல்ல வேளை வசதியாக பரி என்பதற்கு விளக்கம் அளித்து என்னை காப்பாற்றி விட்டீர்கள். இதுக்குத்தான் நீங்க பதிச்சப்புறமே நானும் பதிப்பேன்னு சொன்னேன். :P //

இப்பப் பதிச்சிட்டீங்கள்ள. நல்லாவே வந்திருக்கு உங்க விளக்கமும். அங்கயே வந்து கமெண்ட் போடுறேன்.

// தனியானைக்கும் பிரமாதமான விளக்கம். //

நன்றி.

// குமரன் சொல்லும் அடியார்களைப் பாடும் விளக்கமும் அருமை. நாளைக்கு நான் உளறி வைக்கிறேன். //

ஆமாம். அதுவும் புதுமையாக இருந்தது. நல்ல விளக்கம்.

// ஜிரா,
அப்புறம் இங்கே அவசியம் வந்து பார்க்கவேண்டும் நீங்கள். செல்வன் என்னெல்லாமோ சொல்றார். //

வந்து பாத்தேன். அவரு என்னென்னவோ சொல்றாரு. நானும் என்னென்னவோ சொல்லீருக்கேன்.

said...

// அருமை ராகவன். படிப்பதற்க்கு இனிமையாக இருந்தது. அதற்கு மேல் விளக்கம் சொல்ல எனக்கு ஆன்மீக அறிவெல்லாம் கிடையாது. தொடர்ந்து எழுதுங்கள். படிக்க ஆவலாய் உள்ளேன்.

அன்புடன்,
சிவா //

சிவா, நல்ல சமையலைச் சாப்பிட சமையல் தெரிந்திருக்க வேண்டியதில்லை. உங்களுக்குப் படித்துப் பிடித்திருப்பதுதான் பெரிது. தொடர்ந்து ஒவ்வொரு செவ்வாய் தோறும் படித்துப் பின்னூட்டம் இடும்படி கேட்டுக் கொள்கிறேன்.

said...

// வேல் என்பது ஞானத்தின் வடிவம். அறிவிற்கு அடைமொழி தேவையில்லை. ஆகையால் மயிலையும் சேவலையும் இடவலமாக வைத்து வேலை நடுவில் வைத்தார் அருணகிரி
அருமையான விளக்கம். புதிய பரிமாணம்.தி.ரா.ச //

நன்றி தி.ரா.ச. அனேகமாக எல்லாரும் சொல்லும் விளக்கம் இதாகத்தான் இருக்கும் என்று நினைக்கிறேன்.

குமரன் ஒரு புதிய விளக்கம் சொல்லியிருக்கிறாரே படித்தீர்களா?

said...

// பிள்ளை ஆறு - கலக்கிட்டீங்க வாத்தியாரே //

என்ன இலவசம்....இவ்வளவுதான பின்னூட்டம். ஒருவேளை இலவசம் அப்படீங்குறதால கொஞ்சமா குடுக்குறீங்களா?

said...

அற்புதமான விளக்கம் இராகவன். தமிழார்வலர்களுக்கே உரிய சொல் விளையாட்டுகளும் அதிகமாய் வழக்கம் போல் உங்கள் விளக்கத்தில் இருக்கின்றன. //

குமரன் சொல்றதையேத்தான் நானும் சொல்றேன். அற்புதமான விளக்கவுரை. வாழ்த்துக்கள் ராகவன்.

said...

இராகவன், அருமையான இடுகை. ஒவ்வொரு செவ்வாயுமா ? இனியது கேட்க கடிது வருவேன்.
சிறுவயதில் கி.வா.ஜ அவர்கள் நாளொரு பாடலாக தி.நகர் அகத்தியர் கோவிலில் நிகழ்த்திய கந்தர் அனுபூதி சொற்பொழிவு கேட்ட நினைவு திரும்புகிறது. அனுபூதி எனக்கு மிகவும் பிடித்த தொகுப்பு.

said...

//அப்படிப் பட்ட விநாயகப் பெருமானின் தமையனாரே! ஆறுமுகனே//

இராகவன்,

தமையனார் என்றால் அண்ணன் அன்றோ? ஆறுமுகன் விநாயகப் பெருமானின் தம்பி அன்றோ? நீங்கள் தமையனார் என்றன்றோ சொல்லியிருக்கிறீர்கள்? அதைத் தான் சரி செய்யச் சொன்னேன்.

said...

//என்ன இலவசம்....இவ்வளவுதான பின்னூட்டம். ஒருவேளை இலவசம் அப்படீங்குறதால கொஞ்சமா குடுக்குறீங்களா?//

மத்ததெல்லாம் புதுசு. அதனால படிச்சி புரிந்துகொள்ள முயல்கிறேன். ஆனால் வார்த்தை விளையாட்டு நம்ம துறையாச்சே. அதான் அது பற்றி மறுமொழி.

அது மட்டுமில்லாம, மத்தவங்கதான் சன் டீவீ திரைவிமர்சனம் மாதிரி சூப்பர், நாலுவாட்டி பாக்கலாம்-ன்னு பின்னூட்டம் போடறாங்களே. எந்த பதிவிக்காவது கம்மியா வந்துதுனா, அப்போ நாம தாராளமா அள்ளி விடுவோம். OKவா?

said...

//அப்படிச் சொல் விளையாட்டுகள் வராமல் எழுத வேண்டும் என்றால் என்னுடைய எழுத்தின் இயல்பு மாறி விடும்.//

இராகவன். அப்படிச் சொல் விளையாட்டுகள் இல்லாமல் எழுதச் சொல்லவில்லையே. நான் முதன் முதலில் உங்கள் எழுத்தைப் பார்த்து ரசித்தது இந்தச் சொல் விளையாட்டில் தானே. அந்த சொல் விளையாட்டை ரசிப்பதனால் என் மனம் முக்கியப் பொருளையும் சில நேரம் மறந்து விடுகிறது என்று சொன்னேன். இது பாராட்டுதான். குறையாகச் சொல்லவில்லை.

said...

// மத்தவங்கதான் சன் டீவீ திரைவிமர்சனம் மாதிரி சூப்பர், நாலுவாட்டி பாக்கலாம்-ன்னு பின்னூட்டம் போடறாங்களே. எந்த பதிவிக்காவது கம்மியா வந்துதுனா, அப்போ நாம தாராளமா அள்ளி விடுவோம். OKவா? //

ok ok. double ok.

said...

// குமரன் சொல்றதையேத்தான் நானும் சொல்றேன். அற்புதமான விளக்கவுரை. வாழ்த்துக்கள் ராகவன். //

நன்றி ஜோசப் சார்.

said...

// இராகவன், அருமையான இடுகை. ஒவ்வொரு செவ்வாயுமா ? இனியது கேட்க கடிது வருவேன்.
சிறுவயதில் கி.வா.ஜ அவர்கள் நாளொரு பாடலாக தி.நகர் அகத்தியர் கோவிலில் நிகழ்த்திய கந்தர் அனுபூதி சொற்பொழிவு கேட்ட நினைவு திரும்புகிறது. அனுபூதி எனக்கு மிகவும் பிடித்த தொகுப்பு. //

நன்றி மணியன். கி.வா.ஜா ஒரு தமிழ் மலை. அவர் பேசினால் தமிழ் மழை. அவருடைய வழிகாட்டி என்ற புத்தகத்தை வாங்க வேண்டும் என்று இருக்கிறேன். அது திருமுருகாற்றுப்படைக்கு அவர் எழுதிய உரை. அடுத்த முறை சென்னை செல்கையில் வாங்க வேண்டும்.

said...

// தமையனார் என்றால் அண்ணன் அன்றோ? ஆறுமுகன் விநாயகப் பெருமானின் தம்பி அன்றோ? நீங்கள் தமையனார் என்றன்றோ சொல்லியிருக்கிறீர்கள்? அதைத் தான் சரி செய்யச் சொன்னேன். //

உண்மைதான் குமரன். ஆகையால்தான் இப்படி மாற்றியிருக்கிறேன்.

அப்படிப் பட்ட விநாயகப் பெருமானைத் தமையனாராகக் கருதக் கொண்டவரே! ஆறுமுகனே!

said...

// இராகவன். அப்படிச் சொல் விளையாட்டுகள் இல்லாமல் எழுதச் சொல்லவில்லையே. நான் முதன் முதலில் உங்கள் எழுத்தைப் பார்த்து ரசித்தது இந்தச் சொல் விளையாட்டில் தானே. அந்த சொல் விளையாட்டை ரசிப்பதனால் என் மனம் முக்கியப் பொருளையும் சில நேரம் மறந்து விடுகிறது என்று சொன்னேன். இது பாராட்டுதான். குறையாகச் சொல்லவில்லை. //

நன்றி குமரன். முக்கியப் பொருளை மறக்கடிக்கும் வகையில் சொல் விளையாடல் இருக்கக் கூடாதுதான். பின்னணி இசையென்றால் பின்னணியிலேயே இருக்க வேண்டும். படத்தை விட்டு விட்டு இசையில் கவனம் போகும் வகையில் இருக்கக் கூடாது என்பார்கள். போகப் போகச் சரியாகும் என்று நினைக்கிறேன்.

said...

Great Explanation