Friday, January 06, 2006

பாவை - இருபத்து மூன்று

மாரி மலை முழைஞ்சில் மன்னிக் கிடந்து உறங்கும்
சீரிய சிங்கம் அறிவுற்றுத் தீ விழித்து
வேரி மயிர் பொங்க எப்பாடும் பேர்ந்து உதறி
மூரி நிமிர்ந்து முழங்கிப் புறப்பட்டுப்
போதருமாப் போலே நீ பூவைப் பூ வண்ணா உன்
கோயில் நின்று இங்ஙனே போந்தருளிக் கோப்புடைய
சீரிய சிங்காசனத்து இருந்து யாம் வந்த
காரியம் ஆராய்ந்து அருளேலோர் எம்பாவாய்

மாதவா! உன்னை நாடி உன்னைத் தேடி உன்னைப் பாடி வந்துள்ளோம். இது மார்கழி மாதம். பாவை நோன்பு செய்கின்றோம். எங்களுக்கு வேண்டியதெல்லாம் உன் அருள். அதைத் தருவாயா! இத்தனை பொழுது நீ உறங்கிக் கொண்டிருந்தாய். அல்லது உறங்குவது போல நடித்துக் கொண்டிருந்தாய். இப்பொழுது விழித்து எழுத்துள்ளாய்! வெளியே வந்து அருள் காட்டுவாய்!

நீர் தெளித்துக் குளிர்விக்கும் மழைக்காலங்களில் மலைகளின் குகைகளில் துஞ்சியிருக்கும் ஆண் சிங்கமானது கடமையை உணர்ந்து வெளியே வரும். அப்பொழுது அதன் கண்கள் தனலெனச் சொலிக்கும். பொன்னிறத்துப் பிடரி மயிர்கள் பொங்கிப் பெருகும் வகையில் கழுத்தை உதறிக் கொள்ளும். இத்தனைகாலம் உடனிருந்த சோம்பலைச் சாம்பலாக்க பலபக்கமும் நெளித்து வளைத்து சோம்பல் முரித்துக் கொண்டு புறப்பட்டு வெளியே வரும்.

(தமிழில் சிங்கத்தை ஏறு என்பார்கள். அடலேறு என்றால் ஆண்சிங்கம். மனிதஏறு என்றால் நரசிங்கம். அதற்கு ஏன் ஏறு என்று பெயரென்றால் அதன் ஆணை காட்டில் எங்கும் ஏறும் என்பதால். பொதுவாகவே பெண்சிங்கங்கள் வேட்டையாடும். ஆனால் மழைக்காலங்களில் அனைத்தும் சோம்பிக் கிடக்கும் பொழுது பெண்சிங்கத்திற்கு இரை கிடைப்பது அரிதாகும். அந்த பொழுதுகளில் ஆண்சிங்கம் வெளியே வந்து காடே அதிரும்படி உறுமும். அந்த உறுமலுக்குப் பயந்து விலங்குகள் ஓடும். அந்த சமயத்தைப் பயன்படுத்திப் பெண்சிங்கங்கள் வேட்டையாடும்.)

நரசிங்கமே! நீயும் வீறு கொண்டு எழுந்து வருக! கருநாவல் பூக்களின் நிறத்தை உடையவனே மைவண்ணா! உன்னுடைய திருக்கோயிலில் நாங்கள் நிற்கின்றோம். அந்தத் திருக்கோயிலில் உனக்காகவே பொன்னாலும் பூக்களாலும் அலங்கரிக்கப்பட்ட மிகச் சீரிய சிங்காதனம் அமைக்கப்பட்டுள்ளது.

அந்தச் சிங்காதனத்தில் அமர்ந்து கொள்! உலகிற்கெல்லாம் அரசன் என்று உணர்த்தும் வகையில் இருக்கை கொள்! அந்த அரசுரிமையில் உனது திருவடி தேடி வந்த எங்கள் காரியங்கள் எல்லாம் ஆராய்ந்து அருள் செய்வாய் எம்பாவாய்!

அன்புடன்,
கோ.இராகவன்

9 comments:

said...

சிங்கம் வயிறு நிறைந்தால் தான் கர்ச்சிக்கும் அவ்வாறு கர்ச்சிக்கும் போது மற்ற விளங்குகள் வெளியே வரும் என நான் கேள்விப்பட்டேன். ஆனால் இறை தேடுவதெல்லாம் பெண்சிங்கம் தான். வயறு நிறைந்து விட்டால் பிறகு எதையும் உண்ணாதாம் ஆனால் புலி அப்படி இல்லை. பராவாயில் நன்றாக போகிறது வாழ்த்துக்கள்

said...

ராகவன்,
அருமையான விளக்கத்துக்கு பாராட்டுக்கள், தொடரட்டும் உங்கள் பணி.

said...

பாராட்டுகளுக்கு நன்றி என்னார் மற்றும் பாலா.

said...

மிக நல்ல விளக்கம் இராகவன். ரசித்துப் படித்தேன்.

said...

நல்ல கருத்து. ஓன்று கவனீத்தீர்களா ஆண்டவனை அவர்கள் ஒன்றும் கேட்கவில்லை. அவனே அவர்களூக்க்கு வேண்டியதை கவனித்து அளிக்கவெண்டுமாம், என்ன திட நம்பிக்கை அவர்களு.க்கு. இந்தபாடல் நரசிம்மரை ப்ற்றி பாடியது அன்பன் தி. ர.ச.

said...

பாராட்டுக்கு நன்றி குமரன்.

// இந்தபாடல் நரசிம்மரை ப்ற்றி பாடியது //

தி.ர.ச, எனக்கும் இந்தக் கருத்து தோன்றியது. ஆகையால்தான் கீழேயிருக்கும் வரியைச் செய்யுளில் நேரடியாக் காணாவிடினும் விளக்கத்தில் சேர்த்தேன்.
நரசிங்கமே! நீயும் வீறு கொண்டு எழுந்து வருக!

said...

வனசிங்கத்தை பற்றியும் நரசிங்கத்தை பற்றியும் விளக்கம் அருமை. நன்றி ராகவன்.

said...

thangal pulamaiku thalai vanankukereen. mika nanru
johan paris

said...

Thankal pulamaiku thalai vanankkureen; Mika nanru

Johan-paris