Monday, February 27, 2006

6. எது வந்தால் எது போகும்

உலகத்தில் எத்தனை நல்லவர்கள் இருந்திருக்கின்றார்கள். இன்னமும் இருக்கின்றார்கள். அவர்களாலன்றோ இன்றும் மழை பெய்கிறது. கடலானது கரைக்குக் கட்டுப்படுகிறது. பூமியும் சுற்றிக் கொண்டிருக்கிறது. அடுத்தவர் குற்றங்களையும் தம்மேல் ஏற்றிக் கொண்டு அதற்கு வழி தேடுகின்ற அந்த நல்லவர்களால்தான் நாம் இன்னமும் மூச்சு விட்டுக்கொண்டிருக்கின்றோம். அருணகிரிநாதரும் அப்படிப்பட்ட நல்லவரே. உலகத்தில் மக்கள் எந்தத் தவறுகளைச் செய்கிறார்களோ அவைகளைத் தன் மேல் ஏற்றி, அவைகளிலிருந்து காக்கும்படி முருகனை வேண்டுகிறார். எப்படி வேண்டுகிறார்? அதுதான் இந்தப் பாடல்.

மகமாயை களைந்திட வல்ல பிரான்
முகமாறும் மொழிந்து மொழிந்திலனே
அகமாடை மடந்தைய ரென்றயரும்
செகமாயையில் நின்று தயங்குவதே

கடைசி இரண்டு அடிகளைப் பாருங்கள். அகம் மாடு மடந்தையர் என்று அயரச் செய்யும் ஜெக(உலக) மாயையில் நின்று தயங்குவதோ! அகம் என்றால் வீடு. மாடு என்றால் செல்வம். மடந்தையர் என்றால் மனைவி மக்கள். வீடு மனைவி மக்கள் போன்றவைகள் அயர்ச்சியைக் கொடுக்கும் மாயைகள். அம்மாயைகளில் உழன்று அவைகளிலேயே வீழ்ந்து போகவேண்டுமோ என்று வேதனைப் படுகிறார். பாரதியாரும் கூட சிவசக்தியைப் பாடுகையில் "நிலச் சுமையென வாழ்ந்திடப் புரிகுவையோ" என்று கதறுகிறார்.

மாயை அறிவை மயக்கக் கூடியது. சைவ சித்தாந்தம் சொல்லும் மும்மலங்கள் கருமம், ஆணவம் மற்றும் மாயை. இவற்றில் மாயைதான் மற்ற மலங்கள் தோன்ற ஆதாரம். மாயை விலகினால் அறிவு பெருகும். அறிவு பெருகினால் வீடு மனைவி மக்கள் எல்லாம் அயர்ச்சியைத் தரா! அதற்குத்தான் ஆண்டவனை வேண்டுகிறார் அருணகிரி. அவருக்காக அல்ல. என்றும் அநுபூதியைப் படிக்கும் அன்பர்களுக்காக. அருணகிரிக்கு யாதும் ஊரே யாவரும் கேளிர். அவர் இங்கு பாடுவது இல்லறத்தை நல்லறமாக்காமல் துன்பத்தில் உழல்கின்றவர்களுக்கு.

மாயை களைய வல்லவர் யார்? ஒளி வந்தால் இருள் போகும். வளி (காற்று) வந்தால் வெக்கை போகும். தளி (உணவு) வந்தால் பசி போகும். அறிவு வந்தால் மாயை போகும். அறிவு மயமான கடவுள் யார்? வேல் ஞானத்தில் வடிவம். வேலவன் ஞான மயமானவன். மகமாயை களைந்திட வல்ல பிரான் என்று முருகனை அழைக்கிறார் அருணகிரி. அப்படி அன்போடு ஆறுமுகத்தை அழைத்ததும் மாயை விலகுமாம். வெளிச்சம் வருகையிலேயே இருள் விலகுவது போல இறைவனின் பெயரை உச்சரித்த மாத்திரத்தில் மாயை விலகுமாம்.

முகம் ஆறும் மொழிந்தும் ஒழிந்தது மாயை. இங்கே ஆறுமுகம் என்ற பெயரை பயன்படுத்துவதில்தான் சிறப்பு. ஆறுபக்கங்கள் கொண்ட கனசதுரம்(cuboid) எல்லாத் திசைகளையும் பார்க்க முடியுமல்லவா. அதுபோல ஆறு திசைகளிலும் மாயை சூழாமல் காக்க ஆறுமுகனே என்று அழைக்கின்றார். எத்தனை நுண்ணிய கருத்து பாருங்கள். முகம் ஆறும் நம்மைப் பார்க்க நமது துயர்களெல்லாம் ஆறும். ஆகவே எல்லோரும் ஆறுமுகனைத் தொழுது மாயை நீங்கப் பெற்று அறிவுமயமான வாழ்வு பெற்று உய்க.

பக்தியுடன்,
கோ.இராகவன்

Monday, February 20, 2006

5. வீழ வைப்பதும் வாழ வைப்பதும்

என்றைக்குமே நல்ல வழியில் செல்லும் பொழுதுதான் இடைஞ்சல் வரும். நல்ல சாலையில்தால் வேகத்தடை இருக்கும். மோசமான சாலையே வேகத்தடைதானே! தானம் செய்கிற இடத்தில்தான் அடிதடி நடக்கும். குழப்பமான இடத்திற்கு ஒருவரும் போகார். ஆகக்கூடி தெரிவதென்னவென்றால் நல்லது செய்கையில் இடர் வரும். அந்த இடரும் தொலைய முயன்றால் சுடர் வரும்.

வளை பட்டகை மாதொடு மக்களெனுந்
தளை பட்டழியத் தகுமோ தகுமோ
கிளை பட்டெழுசூட் உரமும் கிரியும்
தொளை பட்டுருவத் தொடு வேலவனே


"தானோ பொருளாவது சண்முகனே" என்று சரணடைய எண்ணுகையில் எத்தனையோ இடர்கள் வரும். அந்த இடர்கள் எப்படிப் பட்டவை? அதைத்தான் இந்தப் பாடலில் அருணகிரி நாதர் விளக்குகிறார். விறகுக்குள் நெருப்பு ஒளிந்திருப்பது போல இந்தப் பாடலில் பெரும் பொருள் ஒளிந்திருக்கிறது. அழுத்தித் தேய்க்கப்படும் விறகில் நெருப்பு வருவது போல, மனதை அழுத்திப் படித்தால் பொருள் விளங்கும்.

முருகனின் திருவடிகளை அடையத் தடைக்கற்களாக எவையெவை இருக்கின்றன? வளைபட்ட கை மாது முதலில் வருகிறாள். மாது என்றால் பொதுவாக பெண். ஆனால் வளைபட்ட கை மாதென்றால்? வளையல் அணிந்த கையுள்ள பெண்ணா? அப்படியும் வைத்துக்கொள்ளலாம். ஆனால் அருணகிரியார் இங்கு குறிப்பிடுவது இல்லறத் துணைவியாம் மனைவியை. கணவனின் அன்புக் கைகளில் வளைபட்ட மாது மனைவிதானே!
பிறகு வருகின்ற தடை மக்களால். மனைவி வழி வந்த மக்கள். பிள்ளையைப் பெற்றால் கண்ணீர் என்பது எத்தனை உண்மையான பேச்சு! தளை பட்டழியத் தகுமோ! தளை என்றால் விலங்கு. அடிமைத்தளை என்ற சொற்றொடரை நினைவிற் கொள்க. சில சொற்களை நேரடியாக பயன்படுத்தினால் தமிழர்களுக்கு விளக்கம் தெரியாது. ஆனால் அடைமொழியோடு பயன்படுத்த புரிந்து விடும். வளி என்றால் விழிப்பார்கள். சூறாவளி என்றால் தெரிந்து கொள்வார்கள். வளி என்றால் காற்று. அதுபோலத்தான் இங்கும். தளை என்றால் விலங்கு. அடிமைத்தளை என்றால் அடிமை விலங்கு.

மனைவி மக்கள் என்னும் அடிமை விலங்குகளால், முருகா, உன்னுடைய திருவடிகளை அடைய முடியாமல் நான் அழியத் தகுமோ என்று கதறுகிறார். அதுவும் தகுமோ தகுமோ என்று இரண்டு முறை இறைஞ்சுகிறார். அதிலிருந்தே அந்தத் தளைகளின் கொடுமைகளைத் தெரிந்து கொள்ளலாம். மனைவி மக்கள் தடைகளா? இல்லையே. அப்படியானால் உலக இயக்கம் தொடர்வது எங்ஙனம்? இல்லறமல்லது நல்லறமன்று என்பது ஔவை வாக்கும். வள்ளூவரும் இல்லறத்தைச் சிறப்பிக்கின்றார். அப்படியிருக்க அருணகிரி இல்லறத்தைக் குறைத்துச் சொல்வாரா? மாட்டார். மனைவி மக்கள் மட்டுமே உயிர் என்று எண்ணும் எண்ணம்தான் தடை. அந்தத் தடைதான் அகல வேண்டும். இதைத்தான் வள்ளுவரும் "துறந்தார்க்கு துப்புரவு வேண்டி மறந்தார்கொள் மற்றையவர்கள் தவம்" என்கிறார்.

அடியவர்கள் பலரும் மனைவி மக்களோடு வாழ்ந்தவர்கள்தானே! இறைவனின் அருளைப் பெற்றவர்கள்தானே! அப்பூதியடிகள் மனைவி மக்களோடு நல்லறம் செய்தார். அதுதான் இல்லறம். தசரதனோ மனைவி மக்களோடு இல்லறம் செய்தானே தவிர நல்லறம் செய்யவில்லையாகையால் ஆண்டவனே மகனாகப் பிறந்ததாகக் கருதப்பட்டாலும் வீழ்ந்தான். ஆக மனைவி மக்கள் தளையல்ல. அந்த உறவுகளின் மேல் கொண்ட அன்பை மீறிய ஆசைதான் தளை. அன்பு தடையல்ல. ஆசைதான் தடை. அன்பிற்கு அடைக்கும் தாழில்லை. ஆசை என்பது விலங்கு. புத்தரும் ஆசையே துன்பத்திற்குக் காரணம் என்கிறார். அன்பு வாழ வைக்கும். ஆசை வீழ வைக்கும். முருகன் அருள் எதிலிருந்தும் மீள வைக்கும்.

இத்தகைய அழிவிலிருந்து காக்கும்படி முருகனை வேண்டுகிறார். அதுவும் "தொடு வேலவனே" என்று அழைத்து. எதனால் தொட்டார் என்று நேரடியாகக் கூறவில்லை. ஆனாலும் கூறியிருக்கிறார். வேலவன் என்று அழைத்து அதைச் சொல்கிறார். சரி வேலால் எப்படித் தொட்டார்? துளை பட்டு உருவத் தொட்டார். துளை விழுந்து ஊடுருவிச் செல்லும் வகையில் வேலால் தொட்டார். பாருங்கள் இதை! வேலை வீசி எறியவில்லை. வேலைக் கொண்டு குத்தவில்லை. மாறாக தொட்டே அழித்தாராம். ஒளி வந்ததும் இருள் தானாக விலகுவது போல ஒரு இலகுவான அழிப்பு. அப்படி எதை அழித்தார்? கிளைப்படு எழுசூர் உரமும் கிரியும் அழிந்தது. சூர் என்று குறிப்பிடுவது துன்பத்தை. சூரன் துன்பஞ் செய்ததால் துன்பத்தையே சூரம் என்கிறார். அந்தத் துன்பமும் கிளைகள் விட்டு படர்ந்து எழுந் துன்பமாம். அப்படி துன்பம் தரத்தக்க வகையில் உரமுடன் எழுந்த கிரி(மலை) கிரவுஞ்ச மலை. அந்த மலையை வேலால் தொட்டுத் துளைத்தழித்த வேலவனே, உன்னை அடைய விடாது தடுக்கும் தளைகளிலிருந்து காப்பாற்றுவாய்!

அன்புடன்,
கோ.இராகவன்

Monday, February 13, 2006

4. எங்கே எனச் சொல்வேன்

வானோ புனல்பார் கனல் மாருதமோ
ஞானோதயமோ நவில் நான்மறையோ
யானோ மனமோ எனை ஆண்டவிடம்
தானோ பொருளாவது சண்முகனே


இந்தப் பாடலும் சிறப்பான பாடலே! சென்ற பாடலின் தொடர்ச்சியும் கூட. சென்ற பாடலில் "நலம் சொல்லாய் முருகா சுர பூபதியே" என்று கேட்கிறார் அருணகிரி. அந்த நலம் எத்தகையது என்பதையும் பார்த்தோம். அப்படிச் சொன்ன நலத்தை எங்கே வைத்துச் சொன்னார் என்று இந்தப் பாடலில் பார்ப்போம்.

ஒன்றைச் சொல்ல வேண்டுமென்றால் அதை எங்கே சொல்ல வேண்டுமென்று கட்டுப்பாடு இருக்கிறது. வழக்கை வழக்காடு மன்றத்தில் சொல்ல வேண்டும். குற்றச்சாட்டை காவல் நிலையத்தில் சொல்ல வேண்டும். காதலைத் தனிமையில் சொல்ல வேண்டும். காமத்தைக் கட்டிலில் சொல்ல வேண்டும். தொழுகையை புனிதத் தலங்களில் சொல்ல வேண்டும். ஆனால் இங்கே சொல்ல வேண்டியவர் முருகன். சொல்லப் பட வேண்டியதோ "என்னை இழந்த நலம்". எங்கே சொல்வது? முருகனுக்கான இடமெது? அதைத்தான் இந்தப் பாடலில் சொல்கிறார் அருணகிரி.

"வானோ? புனலோ (நீர்நிலை)? மண்ணோ? நெருப்போ? தென்றலோ (காற்று)? பஞ்ச பூதங்களாலும் ஆனது உலகம். பஞ்சபூதங்களையும் குறிப்பிட்டாயிற்று. அவற்றைப் படைத்தவன் இறைவன். ஆகையால் பஞ்ச பூதங்களுக்கும் அப்பாற்பட்டவன். சரி. வேறு எங்கு? ஞானம் என்று எல்லோராலும் கொண்டாடப் படும் அறிவு உதயமாகும் இடமா? மண்ணோரும் விண்ணோரும் மற்றும் எல்லோரும் போற்றும் நான்கு மறைகளிலுமா (வேதம்)? என்னிடமா? என் மனதிலா? இல்லை என்னை அட்கொண்ட இடத்திலா? (அருணகிரியை முருகப் பெருமான் அட்கொண்ட இடம் திருவண்ணாமலை.) இல்லை. இல்லை. இறைவா நீ அனைத்தையும் கடந்தவன்." ஆக அருணகிரியால் முடிவு செய்ய முடியவில்லை. ஆகையால் ஆறுமுகனிடமே அந்தப் பொறுப்பை விட்டு விடுகிறார்.

இதைத்தான் "விண்டவர் கண்டிலர். கண்டவர் விண்டிலர்" என்று சொல்வார்கள். காரணம். சொல்லைப் படைத்த இறைவன் சொல்லில் அடங்குவானா? சொல்லில் அடங்குவானாயின் சொல்லைப் படைத்திருப்பானா? இருந்தும் ஏன் அறிஞர் பெருமக்கள் செய்யுள்களிலும் உரைநடைகளிலும் அவனைப் பற்றி எழுதுகிறார்கள்? அது நமக்காக! பெரியாரைத் துணைக்கோடல் என்று வள்ளுவர் சொல்வது போல, அந்தப் பெரியவர்களின் எழுத்தைப் பற்றி நாமும் முன்னேற வேண்டும். அதற்காகத்தான்.

பெரியவர்கள் என்றும் அடுத்தவர்கள் நலனைத்தான் நினைப்பார்கள். திருமுருகாற்றுப்படையைத் தொடங்கும் பொழுது நக்கீரர் "உலகம் உவப்ப" என்றுதான் தொடங்குகிறார். கந்த புராணத்திலும் கச்சியப்பர் "உலகம் உய்ய ஒரு திரு முருகன் உதித்தனன்" என்று கூறுகிறார். கம்பரும் ராமயணத்தை "உலகம் யாவையும் தாமுளவாக்கலும்" என்றே துவக்குகிறார். சேக்கிழாரும் "உலகெலாம் உணர்ந்து ஓத" என்றுதான் பெரிய புராணத்தைத் தொடங்கினார்.

அருணகிரியும் அப்படித்தான் அனைத்தையும் கடந்த இறைவனை நாம் அறியத்தக்க வகையில் சொல்லில் காண்பிக்கிறார். அதுவும் ஒரு கட்டத்தில் முடியாமல் போய் "பொருளாவது சண்முகமே" என்று முடிக்கிறார்.
இந்தப் பாடலைப் பற்றிச் சொல்கையில் ஒரு கந்தலரங்காரப் பாடலைப் பற்றியும் சொல்ல வேண்டும். அதுவும் அருணகிரி எழுதியதே!

தேனென்று பாகென்று உவமிக் கொணாமொழித் தெய்வவள்ளிக்
கொனென்று எனக்கு உபதேசித்தது ஒன்று உண்டு
வானன்று காலன்று தீயன்று நீரன்று மண்ணுமன்று
தானன்று நானன்று அசரீரியன்று சரீரியன்றே!


இந்தப் பாடலுக்கு விளக்கம் சொன்னால் அதுவும் பெரிதாகப் போகும். ஆகையால் வேண்டியதை மட்டும் எடுத்துக் கொள்வோம். வானன்று. காலன்று. அப்படியென்றால்? கால் என்றால் காற்று. காலதர் என்றால் ஜன்னல். இந்த காலதர் என்ற சொல்லைச் சிலப்பதிகாரத்தில் காணலாம். பல தமிழ் நூல்களில் காற்றுக்கு மாற்றாக காலைப் பயன்படுத்தியுள்ளார்கள். தீயன்று. நீரன்று. மண்ணுமன்று. ஐந்து பூதங்களும் முடிந்து விட்டன. வேறென்ன இருக்கின்றன. தானும் நானும். இந்த இரண்டும் கிடையாது. வேறு எவையெவை?

இருப்பவைகளை எல்லாம் இரண்டு வகைகளில் அடக்கி விடலாம். ஒன்று சரீரி. மற்றொன்று அசரீரி. சரீரி என்றால் உருவம் உள்ளவை. அசரீரி என்றால் உருவமில்லாதவை. எதையும் இந்த இரண்டையும் அடக்கி விடலாம். ஆனால் இறைவனை? அவன் அனைத்தும் கடந்தவன் அல்லவா. இதே கருத்தைத்தான் கந்தர் அநுபூதியிலும் கூறியுள்ளார் அருணகிரி. என்னடா ஒரே விஷயத்தைத்தானெ பல பெயர்களில் தருகிறார் இந்த அருணகிரி என்று நினைக்க வேண்டாம். ஒவ்வொன்றும் ஒவ்வொரு தனித்தன்மை வாய்ந்தவை. படிக்கப் படிக்க புரியும். எளிமையாச் சொல்கிறேன். எல்லாம் புளிக் குழம்புதான். ஆனால் வெண்டைக்காய், கத்தரிக்காய், சேனக்கிழங்கு, வெங்காயம் என்று சேர்க்கின்ற பொருளுக்குத் தக்க புளிக்குழம்பு மாறுவது போலத்தான் இங்கும். எல்லாம் முருகனின் புகழ்தான் பாடும். ஒன்று அலங்காரம் செய்யும். ஒன்று அநுபூதி கொடுக்கும். ஒன்று கவசமாகும். அவ்வளவே!

அன்புடன்,
கோ.இராகவன்

Monday, February 06, 2006

3. பற்றை வைத்துப் பற்றைப் போக்க

உல்லாச நிராகுல யோக விதச்
சல்லாப விநோதனும் நீ அலையோ
எல்லாம் அற என்னை இழந்த நலம்
சொல்லாய் முருகா சுர பூபதியே


இந்தச் செய்யுள் மிகவும் சிறப்பான செய்யுள். உரிக்க உரிக்க தாள் தரும் வெங்காயம் போல, படிக்கப் படிக்க பல பொருள் தரும் அருமையான செய்யுள் இது. கற்றறிந்த பெரியவர்களிடம் கேட்டால் சுகமாகச் சொல்வார்கள். நான் படித்தவைகளை வைத்துப் பொருள் கூறுகிறேன். இந்தச் செய்யுளில் கீழிருந்து மேலாகச் செல்லலாம்.

சுர பூபதியே! வடமொழியில் எதிர்ப்பதச் சொல் வேண்டுமெனில் அகரத்தை முதலெழுத்தாகச் சேர்த்துவிடுவார்கள். ஞானம். அஞ்ஞானம். பாக்யம். அபாக்யம். சுரர். அசுரர். என்றெல்லாம் வரும். காலப் போக்கில் தமிழிலும் அதன் தாக்கம் வந்தது. நீதி. அநீதி. கிரமம். அக்கிரமம். என்றெல்லாம் சொல்லிக் கொள்ளத் தொடங்கினோம். இவைகளும் தமிழ்ச் சொற்கள் அன்று.

அசுரர்களுக்கு எதிர்ப்பதம் சுரர். அதாவது தேவர்கள். அவர்களுக்குத் தலைவனே என்று அழைக்கிறார். சுரபதியே என்று சொன்னாலே போதும். பதி என்றால் தலைவன். பூ(மி) என்றால் உலகம். பூபதியே என்றால் உலகத் தலைவன். அனைத்து உலகங்களும் தேவர்கள் ஆட்சிக்கு உட்பட்டவை. அப்படிப் பட்ட தேவர்களின் உலகங்களுக்கே தலைவனாக விளங்குகின்றவனே என்று அழைக்கிறார் அருணகிரி. அதாவது தேவர்களுக்கு மட்டுமல்ல. அவர்கள் சார்ந்த அனைத்திற்கும் தலைவன் அவனே என்பது கருத்து.

இதற்கு ஒரு எடுத்துக்காட்டு சொல்கின்றேன் கேளுங்கள். மேலதிகாரி இருக்கின்றார். அவருக்குக் கீழே பல கிளையதிகாரிகள். கிளையதிகாரியின் நிர்வாகத்தைப் பார்வையிடக் கிளையலுவலகத்திற்குச் செல்கிறார். அங்கே மேலதிகாரிக்குத் தனி நாற்காலி கிடையாது. ஆனால் கிளையதிகாரி தனது நாற்காலியைத் தருவார். கிளையதிகாரி பயன்படுத்திய மேசையை மேலதிகாரி பயன்படுத்துவார். கிளையதிகாரிக்குக் கீழே பணிபுரிகின்றவர்களும் இப்பொழுது மேலதிகாரிக்குக் கட்டுப் பட்டவர்கள். அது போலத்தான் தேவர்கள் மட்டுமல்ல அவர்கள் ஆட்சிக்கு உட்பட்ட அனைத்துமே முருகப் பெருமானின் சொத்து.

சுர பூபதியே என்று அழைத்து என்ன கேட்கிறார்? நலம் சொல்லாய் முருகா என்று கேட்கிறார். அதாவது நலம் கொடுக்க வேண்டுகிறார். அதுவும் எப்படிப் பட்ட நலம்! எல்லாம் அற என்னை இழந்த நலம். மிகவும் செறிவுள்ள சொற்றொடர் இது. ஆழ்ந்து படித்தால் புரியும்.

பற்று நீங்கினால் பற்றற்றவனின் காலைப் பற்றலாம். புறப்பற்று அகப்பற்று என்று பற்றுகள் இரண்டு. எல்லாம் என்பது புறப்பற்று. என்னை என்பது அகப்பற்று. எல்லாம் அற என்றால் அனைத்துப் புறப்பற்றுகளும் அறுக்கப்பட வேண்டும் என்கிறார். என்னை என்பது அகங்காரம். நான் என்பது அது. அதை இழக்க வேண்டும். அப்படிப் பற்றுகளை நீக்க நல்வாக்கு தருவாய் முருகா என்கிறார்.
"பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்
பற்றுக பற்று விடற்கு
" என்கிறார் வள்ளுவர்.
அதாவது, பற்றுகளை விட வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே பற்றுகளை ஒழித்துவிடாது. அதற்கு பற்றுகளே இல்லாத ஒருவரைப் பற்ற வேண்டும். முள்ளை முள்ளால் எடுப்பது போல. இதே கருத்தைத்தான் அருணகிரியும் அநுபூதியில் கையாண்டுள்ளார். "எல்லாம் அற என்னை இழந்த நலம்" என்ற வரியை இப்போது சொல்லிப் பாருங்கள் பொருள் விளங்கும்.

இதில் மற்றொரு மறைபொருள் உள்ளது. புறம் என்றால் வெளியே. அகம் என்றால் உள்ளே. கடவுள் என்றால் என்ன? நம்மையெல்லாம் கடந்து எல்லாவற்றிலும் (எல்லாம்-புறம்) நிறைந்து, நமக்குள்ளும் (நான்,நமது-அகம்) உறைந்தவன். கட(ந்து) உள்(ளே உறைந்தவன்) கடவுள். உள்ளேயும் வெளியேயும் உள்ள பற்று போக வேண்டும். ஆற்றலை அளிக்க முடியாது. Newton's law. மாறாக மாற்றலாம். ஆக இந்தப் பற்றுகளை நீக்குவதற்கு பதிலாக உள்ளும் புறமும் நிறைந்த கடவுளின் மீதுள்ள பற்றாக மாற்ற வேண்டும்.

முதலிரண்டு அடிகளை இப்போது பார்க்கலாம். உல்லாச நிராகுல யோக இத சல்லாபனும் நீ அலையோ! இது பாராட்டு. முருகனின் பல பண்புகளைப் பாராட்டுகிறார். ஒன்றைக் கேட்கும் முன்னம், கொடுப்பவரைப் புகழ்ந்து கூறி, இதைக் கொடு என்று கேட்பதுதானே வழக்கம். பற்றுகளை ஒழிக்கும் படி கேட்குமுன்னர், முருகனைப் பாராட்டுகிறார் அருணகிரி.

உல்லாசம் என்றால் நிலையில் மாறுபாடில்லாதவன் என்று பொருள். எந்நிலையிலும் எந்த மாற்றமும் இல்லாதவன் இறைவன். அவனால் எல்லாம் மாற்றப்படும். ஆனால் அவனுக்கு எந்த மாற்றமும் இல்லை. நிராகுலன் என்றால் துன்பமில்லாதவன் என்று பொருள். நல்ல அருமையான வடமொழிப் பெயர். குழந்தைகளுக்கும் வைக்கலாம். யோகம். யோக வடிவானவன் என்று பொருள். இதமானவன். சல்லாபம் என்றால் பேசுதல். விநோதமென்றால் செய்தல். யோகமாகிய இதத்தைப் பற்றிப் பேசவும் செய்யவும் கூடியவன் முருகன் அல்லவா! இந்த இரண்டு அடிகளுக்கு இன்னும் பல பொருட்கள் உள்ளன. சொல்லக் குறைவிலாதவை. இப்போது நான்கு அடிகளையும் சேர்த்துப் படியுங்கள். எல்லாம் புரியும்.

அன்புடன்,
கோ.இராகவன்