Monday, February 13, 2006

4. எங்கே எனச் சொல்வேன்

வானோ புனல்பார் கனல் மாருதமோ
ஞானோதயமோ நவில் நான்மறையோ
யானோ மனமோ எனை ஆண்டவிடம்
தானோ பொருளாவது சண்முகனே


இந்தப் பாடலும் சிறப்பான பாடலே! சென்ற பாடலின் தொடர்ச்சியும் கூட. சென்ற பாடலில் "நலம் சொல்லாய் முருகா சுர பூபதியே" என்று கேட்கிறார் அருணகிரி. அந்த நலம் எத்தகையது என்பதையும் பார்த்தோம். அப்படிச் சொன்ன நலத்தை எங்கே வைத்துச் சொன்னார் என்று இந்தப் பாடலில் பார்ப்போம்.

ஒன்றைச் சொல்ல வேண்டுமென்றால் அதை எங்கே சொல்ல வேண்டுமென்று கட்டுப்பாடு இருக்கிறது. வழக்கை வழக்காடு மன்றத்தில் சொல்ல வேண்டும். குற்றச்சாட்டை காவல் நிலையத்தில் சொல்ல வேண்டும். காதலைத் தனிமையில் சொல்ல வேண்டும். காமத்தைக் கட்டிலில் சொல்ல வேண்டும். தொழுகையை புனிதத் தலங்களில் சொல்ல வேண்டும். ஆனால் இங்கே சொல்ல வேண்டியவர் முருகன். சொல்லப் பட வேண்டியதோ "என்னை இழந்த நலம்". எங்கே சொல்வது? முருகனுக்கான இடமெது? அதைத்தான் இந்தப் பாடலில் சொல்கிறார் அருணகிரி.

"வானோ? புனலோ (நீர்நிலை)? மண்ணோ? நெருப்போ? தென்றலோ (காற்று)? பஞ்ச பூதங்களாலும் ஆனது உலகம். பஞ்சபூதங்களையும் குறிப்பிட்டாயிற்று. அவற்றைப் படைத்தவன் இறைவன். ஆகையால் பஞ்ச பூதங்களுக்கும் அப்பாற்பட்டவன். சரி. வேறு எங்கு? ஞானம் என்று எல்லோராலும் கொண்டாடப் படும் அறிவு உதயமாகும் இடமா? மண்ணோரும் விண்ணோரும் மற்றும் எல்லோரும் போற்றும் நான்கு மறைகளிலுமா (வேதம்)? என்னிடமா? என் மனதிலா? இல்லை என்னை அட்கொண்ட இடத்திலா? (அருணகிரியை முருகப் பெருமான் அட்கொண்ட இடம் திருவண்ணாமலை.) இல்லை. இல்லை. இறைவா நீ அனைத்தையும் கடந்தவன்." ஆக அருணகிரியால் முடிவு செய்ய முடியவில்லை. ஆகையால் ஆறுமுகனிடமே அந்தப் பொறுப்பை விட்டு விடுகிறார்.

இதைத்தான் "விண்டவர் கண்டிலர். கண்டவர் விண்டிலர்" என்று சொல்வார்கள். காரணம். சொல்லைப் படைத்த இறைவன் சொல்லில் அடங்குவானா? சொல்லில் அடங்குவானாயின் சொல்லைப் படைத்திருப்பானா? இருந்தும் ஏன் அறிஞர் பெருமக்கள் செய்யுள்களிலும் உரைநடைகளிலும் அவனைப் பற்றி எழுதுகிறார்கள்? அது நமக்காக! பெரியாரைத் துணைக்கோடல் என்று வள்ளுவர் சொல்வது போல, அந்தப் பெரியவர்களின் எழுத்தைப் பற்றி நாமும் முன்னேற வேண்டும். அதற்காகத்தான்.

பெரியவர்கள் என்றும் அடுத்தவர்கள் நலனைத்தான் நினைப்பார்கள். திருமுருகாற்றுப்படையைத் தொடங்கும் பொழுது நக்கீரர் "உலகம் உவப்ப" என்றுதான் தொடங்குகிறார். கந்த புராணத்திலும் கச்சியப்பர் "உலகம் உய்ய ஒரு திரு முருகன் உதித்தனன்" என்று கூறுகிறார். கம்பரும் ராமயணத்தை "உலகம் யாவையும் தாமுளவாக்கலும்" என்றே துவக்குகிறார். சேக்கிழாரும் "உலகெலாம் உணர்ந்து ஓத" என்றுதான் பெரிய புராணத்தைத் தொடங்கினார்.

அருணகிரியும் அப்படித்தான் அனைத்தையும் கடந்த இறைவனை நாம் அறியத்தக்க வகையில் சொல்லில் காண்பிக்கிறார். அதுவும் ஒரு கட்டத்தில் முடியாமல் போய் "பொருளாவது சண்முகமே" என்று முடிக்கிறார்.
இந்தப் பாடலைப் பற்றிச் சொல்கையில் ஒரு கந்தலரங்காரப் பாடலைப் பற்றியும் சொல்ல வேண்டும். அதுவும் அருணகிரி எழுதியதே!

தேனென்று பாகென்று உவமிக் கொணாமொழித் தெய்வவள்ளிக்
கொனென்று எனக்கு உபதேசித்தது ஒன்று உண்டு
வானன்று காலன்று தீயன்று நீரன்று மண்ணுமன்று
தானன்று நானன்று அசரீரியன்று சரீரியன்றே!


இந்தப் பாடலுக்கு விளக்கம் சொன்னால் அதுவும் பெரிதாகப் போகும். ஆகையால் வேண்டியதை மட்டும் எடுத்துக் கொள்வோம். வானன்று. காலன்று. அப்படியென்றால்? கால் என்றால் காற்று. காலதர் என்றால் ஜன்னல். இந்த காலதர் என்ற சொல்லைச் சிலப்பதிகாரத்தில் காணலாம். பல தமிழ் நூல்களில் காற்றுக்கு மாற்றாக காலைப் பயன்படுத்தியுள்ளார்கள். தீயன்று. நீரன்று. மண்ணுமன்று. ஐந்து பூதங்களும் முடிந்து விட்டன. வேறென்ன இருக்கின்றன. தானும் நானும். இந்த இரண்டும் கிடையாது. வேறு எவையெவை?

இருப்பவைகளை எல்லாம் இரண்டு வகைகளில் அடக்கி விடலாம். ஒன்று சரீரி. மற்றொன்று அசரீரி. சரீரி என்றால் உருவம் உள்ளவை. அசரீரி என்றால் உருவமில்லாதவை. எதையும் இந்த இரண்டையும் அடக்கி விடலாம். ஆனால் இறைவனை? அவன் அனைத்தும் கடந்தவன் அல்லவா. இதே கருத்தைத்தான் கந்தர் அநுபூதியிலும் கூறியுள்ளார் அருணகிரி. என்னடா ஒரே விஷயத்தைத்தானெ பல பெயர்களில் தருகிறார் இந்த அருணகிரி என்று நினைக்க வேண்டாம். ஒவ்வொன்றும் ஒவ்வொரு தனித்தன்மை வாய்ந்தவை. படிக்கப் படிக்க புரியும். எளிமையாச் சொல்கிறேன். எல்லாம் புளிக் குழம்புதான். ஆனால் வெண்டைக்காய், கத்தரிக்காய், சேனக்கிழங்கு, வெங்காயம் என்று சேர்க்கின்ற பொருளுக்குத் தக்க புளிக்குழம்பு மாறுவது போலத்தான் இங்கும். எல்லாம் முருகனின் புகழ்தான் பாடும். ஒன்று அலங்காரம் செய்யும். ஒன்று அநுபூதி கொடுக்கும். ஒன்று கவசமாகும். அவ்வளவே!

அன்புடன்,
கோ.இராகவன்

17 comments:

said...

ராகவன்,
காதலர் தினமும் அதுவுமா லைட்டா சம்மந்தம் இல்லாம போட்டுருக்கியேப்பா! சும்மா ஸ்டிராங்கா கும்காவா எதாவது எழுதுப்பா! சும்மா நக்கலுக்கு...

said...

ஒன்றைச் சொல்ல வேண்டுமென்றால் அதை எங்கே சொல்ல வேண்டுமென்று கட்டுப்பாடு இருக்கிறது. வழக்கை வழக்காடு மன்றத்தில் சொல்ல வேண்டும். குற்றச்சாட்டை காவல் நிலையத்தில் சொல்ல வேண்டும். காதலைத் தனிமையில் சொல்ல வேண்டும். காமத்தைக் கட்டிலில் சொல்ல வேண்டும். //

ரொம்பச் சரி!

said...

இராகவன், இந்த அருமையான பாடலுக்கு உங்கள் அருமையான விளக்கத்தைப் பார்த்தேன். கொஞ்சம் அசை போட்டுவிட்டு பின்னர் வந்து இன்னொரு பின்னூட்டம் போடுகிறேன்.

said...

தப்பு நடந்து போச்சுங்கய்யா! உங்க பதிவு ஆன்மீகம்/இலக்கிய வகையரா என பார்க்காமலையே உள்ளே சென்று படித்து ஏமாந்ததினால் என்னுடைய முதல் பின்னுட்டத்தை தட்டிவிட்டேன்!

said...

ஒன்றைச் சொல்ல வேண்டுமென்றால் அதை எங்கே சொல்ல வேண்டுமென்று கட்டுப்பாடு இருக்கிறது. வழக்கை வழக்காடு மன்றத்தில் சொல்ல வேண்டும். குற்றச்சாட்டை காவல் நிலையத்தில் சொல்ல வேண்டும். காதலைத் தனிமையில் சொல்ல வேண்டும்.

கந்தர் அனுபூதியைப் பற்றிச் சொல்லவேண்டுமானல் அதை திரு.ராகவன் எழுத்தில்தான் சொல்லவேண்டும் தி.ரா.ச.

said...

//கந்தர் அனுபூதியைப் பற்றிச் சொல்லவேண்டுமானல் அதை திரு.ராகவன் எழுத்தில்தான் சொல்லவேண்டும் //

அடடா...என்ன தி.ரா.ச. இராமநாதன் பதிவுகளைப் படித்தப் பிறகும் இப்படிச் சொல்லிவிட்டீர்களே?!!! :-)

இராகவனும் இராமநாதனும் அனுபூதிக்குப் பொருள் சொல்லிக் கலக்குகிறார்களே.

said...

// ராகவன்,
காதலர் தினமும் அதுவுமா லைட்டா சம்மந்தம் இல்லாம போட்டுருக்கியேப்பா! சும்மா ஸ்டிராங்கா கும்காவா எதாவது எழுதுப்பா! சும்மா நக்கலுக்கு... //

// தப்பு நடந்து போச்சுங்கய்யா! உங்க பதிவு ஆன்மீகம்/இலக்கிய வகையரா என பார்க்காமலையே உள்ளே சென்று படித்து ஏமாந்ததினால் என்னுடைய முதல் பின்னுட்டத்தை தட்டிவிட்டேன்! //

ஆள்தோட்டபூபதி...அதனால் என்ன...இருக்கட்டும். பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம். :-)

said...

////ஒன்றைச் சொல்ல வேண்டுமென்றால் அதை எங்கே சொல்ல வேண்டுமென்று கட்டுப்பாடு இருக்கிறது. வழக்கை வழக்காடு மன்றத்தில் சொல்ல வேண்டும். குற்றச்சாட்டை காவல் நிலையத்தில் சொல்ல வேண்டும். காதலைத் தனிமையில் சொல்ல வேண்டும். காமத்தைக் கட்டிலில் சொல்ல வேண்டும். //

ரொம்பச் சரி! //

படிச்சு கருத்து சொன்னதுக்கு ரொம்ப நன்றி ஜோசப் சார்.

said...

// இராகவன், இந்த அருமையான பாடலுக்கு உங்கள் அருமையான விளக்கத்தைப் பார்த்தேன். கொஞ்சம் அசை போட்டுவிட்டு பின்னர் வந்து இன்னொரு பின்னூட்டம் போடுகிறேன். //

அதான பாத்தேன். குமரன் அலசல் இல்லாம பதிவு துலங்குமா? காத்திருக்கிறேன்.

said...

// கந்தர் அனுபூதியைப் பற்றிச் சொல்லவேண்டுமானல் அதை திரு.ராகவன் எழுத்தில்தான் சொல்லவேண்டும் தி.ரா.ச. //

உங்கள் அன்பும் அபிமானமும் என்னை ஊக்குவிக்கின்றன தி.ரா.ச. குமரன் சொன்னது போல, இராமநாதனும் கந்தர் அநுபூதிக்கு அருமையாக விளக்கம் சொல்கிறார். அதையும் சேர்த்துக் கொள்வோம். :-)

said...

ஜிரா,
மெய்ப்பொருள் கிடக்கட்டும். தமிழ் எங்கேர்ந்துப்பா வந்து இப்படி உங்ககிட்ட விளையாடுது? அத முதல்ல சொல்லுங்க.

பிரமாதம்.

ஆட்கொண்ட இடம் பத்தி எனக்கு வேற மாதிரி தோணுது. என் பதிவுல நாளைக்கு போடறேன். (பின்ன அட்வர்டைஸ்மெண்ட் இல்லாம வாழ்க்கை எப்படி ஓட்டறது?) :)))

said...

// ஜிரா,
மெய்ப்பொருள் கிடக்கட்டும். தமிழ் எங்கேர்ந்துப்பா வந்து இப்படி உங்ககிட்ட விளையாடுது? அத முதல்ல சொல்லுங்க. //

எல்லாம் தமிழ்க்கடவுள் முருகன் தந்தது. (நல்ல வேளை குமரன் கவனிக்கலை :-) )

// பிரமாதம். //

நன்றி இராமநாதன்.


// ஆட்கொண்ட இடம் பத்தி எனக்கு வேற மாதிரி தோணுது. என் பதிவுல நாளைக்கு போடறேன். (பின்ன அட்வர்டைஸ்மெண்ட் இல்லாம வாழ்க்கை எப்படி ஓட்டறது?) :))) //

போடுங்க. போடுங்க. காத்துக்கிட்டு இருக்கேன். விளம்பரம் எத்தனை வேணும்னாலும் செஞ்சுக்கோங்க.

said...

சிறு அலசல் இராகவன்.

வானோ புனல் பார் கனல் மாருதமோ?
ஞானோதயமோ நவில் நான்மறையோ?
யானோ? மனமோ? எனை ஆண்டவிடம்?
தானோ பொருள் ஆவது சண்முகமே...

இப்படிப் பிரிக்கத் தோன்றுகிறது எனக்கு.

எனை நீ ஆண்டவிடம் (ஆண்டவிதம்) ஆனது எங்கும் நிறைந்த வானமா? எதையும் குளிரச் செய்யும் புனலா? எதையும் தாங்கும் பூமியா? ஒளிதந்து வெம்மை தரும் கனலா? நறுமணம் வீசும் மந்தமாருதமா?

இல்லை இவையெல்லாம் உயிரும் அறிவும் அற்றவைகள். ஞானம் உதயம் ஆகும் போது தான் உன்னடியார் ஆகமுடியும் என்று பெரியோர் சொல்கிறார்களே. அப்படி ஞானம் உதயமான இடமா? ஞானம் உதயமான பொழுதா?

அந்த ஞானப் பெட்டகமாய் எல்லோரும் நவிலும் (எழுதப்படாத) நான் மறைகளோ?

'யான்' என்ற உணர்வாய் என்னுள் நிற்கும் இடமோ?

கட்டுக்கும் (பந்தத்திற்கும்) விடுதலைக்கும் (வீடுபேற்றுக்கும்) காரணமாய் நிற்கும் மனமோ? (மனமே கீழ்நிலைக்கு இட்டுச் செல்லும். அதன் உதவியினாலேயே மேல்நிலைக்குச் செல்லவும் முடியும். அதனால் தான் பெரியவர்கள் எல்லோரும் மனதிற்கு அறிவுரை சொல்வதாய்ப் பாடல்கள் பாடியிருக்கின்றனர்).

எனை நீ ஆண்டவிடம் இவற்றில் எது?

ஆஹா அறிந்து கொண்டேன். எல்லாவற்றிலும் அந்தந்தப் பொருளாய் நிற்பது நீயே சண்முகனே. நீ வானமாய் எங்கும் நிறைந்தாய். புனலாய் குளிரச் செய்தாய். பூமியாய் என் பிழை பொறுத்தாய். கனலாய் ஒளிதந்து வெம்மையும் தந்தாய். தென்றலாய் நறுமணமும் மன அமைதியும் தந்தாய். ஞானமாய் நின்றாய். ஞானப் பெட்டகமாம் வேதங்களாய் நின்றாய். 'நான்' எனும் உணர்வாய் நின்றாய். பந்தத்திற்கும் விடுதலைக்கும் காரணமான மனமாய் நின்றாய். இவ்வெல்லாப் பொருளிலுமே தானே பொருளாய் நின்றது நீயே சண்முகனே. அறிந்தேன் அதனை. அறிந்துகொண்டு செறிந்தேன் உன் திருவடிக்கே.

said...

ராகவன்! வழக்கம் போல நன்றாக உணர்ந்து ரசிக்கும் படி எழுதியுள்ளீர்கள். சில வார்த்தைகளுக்கும் பொருள் அறிந்து கொண்டேன் (அசரீரி, காலதர்).

கடைசி வரியை படிக்கும் போது எனக்கு சந்தேகம் வந்துவிட்டது..நம்ம ராகவனோட 'இனியது கேட்கின்' படிக்கிறோமா..இல்லை 'சுவைக்கச் சுவைக்க' படிக்கிறோமா என்று..ஹி..ஹி..ஹி.

அன்புடன்.
சிவா

said...

// இவ்வெல்லாப் பொருளிலுமே தானே பொருளாய் நின்றது நீயே சண்முகனே. அறிந்தேன் அதனை. அறிந்துகொண்டு செறிந்தேன் உன் திருவடிக்கே. //

குமரன், மிகவும் நல்ல அலசல்....புதுமையான கோணத்தில். கொஞ்சம் திகைத்தும் போய் விட்டேன்.

இப்படியும் இலக்கணப்படி பொருள் கொள்ளலாம். தவறில்லை. இதுதானே அநுபூதி நிலை.

ஆனால் இப்பொழுதுதான் அநுபூதிச் செய்யுள் தொடங்கியிருக்கிறது. அதற்குள் அநுபூதி இதுதான் என்று முடித்து விடுவாரா அருணகிரி. கொஞ்சம் கொஞ்சமாக அறிமுகம் செய்து கடைசியில்தான் அநுபூதியைச் சொல்கிறார். பாலைக் கிண்டிக் கிண்டிக் கடைசிப் பதத்தில் சர்க்கரையைச் சேர்ப்பது போல. இல்லையா?

said...

// ராகவன்! வழக்கம் போல நன்றாக உணர்ந்து ரசிக்கும் படி எழுதியுள்ளீர்கள். சில வார்த்தைகளுக்கும் பொருள் அறிந்து கொண்டேன் (அசரீரி, காலதர்). //

நன்றி சிவா. இன்னும் நிறைய அழகிய தமிழ்ச்சொற்கள் கந்தரநுபூதியில் கிடைக்கின்றன. முடிந்தவரை ஒவ்வொன்றையும் எடுத்துச் சொல்கிறேன்.

// கடைசி வரியை படிக்கும் போது எனக்கு சந்தேகம் வந்துவிட்டது..நம்ம ராகவனோட 'இனியது கேட்கின்' படிக்கிறோமா..இல்லை 'சுவைக்கச் சுவைக்க' படிக்கிறோமா என்று..ஹி..ஹி..ஹி. //

இதை நான் கற்றது வாரியாரிடம். தெரிந்ததைச் சொல்லி தெரியாததை விளக்குவது. இது தமிழர்களுக்குப் புதிதல்ல. ஆனால் இந்த எடுத்துக்காட்டு வாரியார் எடுத்துக்காட்டியது அல்ல. :-)

said...

குமரன், நான் சொல்லாத விஷயத்தை நீங்கள் எடுத்துச் சொல்லியிருக்கிறீர்கள். நவில் நான்மறைகளைத்தான் சொல்கிறேன். :-)