Monday, March 06, 2006

7. கல்லில் பதியுமா பாதம்

மிகவும் எளிமையான பாடல். ஆனால் மறைவான பொருள் கொண்டது. கல் போன்ற எனது மனதில் உனது தாமரைப் பாதங்கள் அரும்ப வேண்டுமே முருகா! பணி என்னவென்று வள்ளியின் பதம் பணியும் முருகனே! மோகம் குறையாத தயாபரனே!

திணியான மனோசிலை மீதுனதாள்
அணியார் அரவிந்தம் அரும்புமதோ
பணியா என வள்ளி பதம் பணியும்
தனியா அதி மோக தயாபரனே


திணியான மனோசிலை என்றால் கடினமான கல் போன்ற மனம். சிலை என்பது கல்லைக் குறிக்கிறது இங்கே. மனோசிலை என்றால் மனமாகிய கல். எப்பேற்பட்ட சொல் நயம். அப்படிப்பட்ட கடினமான மனமாகிய கல்லின் மீது உனது தாமரைப் பாதங்கள் பதிவது என்று என்று கேட்கிறார் அருணகிரி. இந்த இடத்தில்தான் நன்றாகக் கவனிக்க வேண்டும். கல்லில் பூச்செடி முளைக்குமா? மண்ணில் முளைக்கும். சேற்றில் முளைக்கும். கல்லில் முளைக்குமா? கல்லில் செடி முளைத்தால் என்ன ஆகும்? கல் உடைந்து போகும். மனம் உடைந்து போகலாமா? அப்புறம் ஏன் அருணகிரி இப்படிக் கேட்கிறார்?

இளகிய கல்லில் செடி முளைக்கலாம்தானே! தங்கமும் வெள்ளியும் இருக்கிறது. அது அவ்வாறே இருந்தால் மணிகளைப் பொருத்துவது எங்ஙனம்? உலோகம் இளகினால் மணிகளையும் கற்களையும் பதிக்கலாம். அது போல தாமரை மலர் போன்ற சிவந்த பாதங்கள் பதிய வேண்டுமென்றால் மனம் இளக வேண்டும். இளகிய மனமே பாசத்தின் பாசறை. அந்தப் பாசறையே இறைவனின் கோயில். விளங்கியதா! தாமரை மலர் போன்ற திருவடிகள் என்று குறுந்தொகையும் கூறுகிறது. செந்திலாண்டர் செம்மையானவர். ஆகையால் அவரைச் சார்ந்ததெல்லாமே செம்மையானவை. பாரதம் பாடிய பெருந்தேவனார் குறுந்தொகைக்குக் கடவுள் வாழ்த்து எழுதும் பொழுது குறிப்பிடுகிறார் "தாமரை புரையும் காமர் சேவடி" என்று.

இந்தப் பாடலில் மற்றொரு அழகும் உள்ளது. கல் மனம் இளக வேண்டும் என்று கேட்கவில்லை. நேராகவே பாதம் பதிய வேண்டும் என்று கேட்கிறார். கல் இளகவும் இறைவன் மனம் வைக்க வேண்டுமே! அதை எப்போது கேட்பது? அருணகிரி அறிவுகிரி அல்லவா! ஆகையால்தால் கந்தர் அநுபூதி தொடங்கும் பொழுதே நெஞ்சக் கன கல்லும் நெகிழ்ந்து உருக என்று பாடுகிறார். அங்கேயே கல்லாகிய நெஞ்சம் நெகிழ்ந்து விட்டது. ஆகையால் இங்கே பதிந்தால் போதும். என்ன அற்புதமான வரிகள் இவை. நினைத்தாலே கண்ணீர் பெருகும் அருள் வரிகள்.

பாதம் பதிய வேண்டுமென்று யாரைக் கேட்கிறார் அருணகிரி? தயாபரனிடம். தயாபரன் என்றால் உதவும் உள்ளமுடையன் என்று பொருள். அதுவும் தணியா அதி மோக தயாபரனிடம் கேட்கிறார். தணியாத அதி மோகம். அடேங்கப்பா! எவ்வளவு உயர்வு நவிற்சி. மோகம் என்பது அளப்பறிய நாட்டம். அது எதன் மீதிலும் இருக்கலாம். மோகன், மோகினி என்றெல்லாம் பெயரிடுகிறார்களே குழந்தைகளுக்கு. அது காமம் மட்டும் என்ற பொருளைத் தருமானால் வைப்பார்களா? இந்த இடத்தில் அது கருணை அல்லது நாட்டம் என்று பொருள் படுகிறது.

பணியா என வள்ளி பதம் பணியும் தணியாத அதி மோக தயாபரனிடம் வேண்டுகிறார் அருணகிரி. வள்ளியம்மையிடம் பணி என்ன என்று தணியாத நாட்டத்தோடு முருகன் பணிந்தாரா? அனைவரும் பணியும் இறைவன் பணிவாரா? பணியா என்று வள்ளியம்மையானவள் பதம் பணியும் முருகனே என்று பொருள். கொல்லி மலை வாழும் முருகா என்றால் கொல்லி மலை முருகனோடு வாழ்கிறது என்றா பொருள்? முருகன் வாழும் கொல்லி மலை என்று மாற்றிப் பொருள் கொள்ள வேண்டும். தணியாத நாட்டத்தோடு உதவும் உள்ளத்தோடு இருக்கும் இறைவனை அனைவரும் பணிவார்கள். அவ்விதத்தில் வள்ளியம்மையும் பணியும் அந்தப் பதமானது இளகிய கல் மனதில் பதிய வேண்டும் என்று வேண்டுகிறார் அருணகிரிநாதர்.

பக்தியுடன்,
கோ.இராகவன்

17 comments:

said...

நன்றாய் பொருள் சொல்லியிருக்கிறீர்கள் இராகவன். உட்பொருளையும் நன்றாய் சொல்லியிருக்கிறீர்கள்.

திணியான மனோசிலை மீது உன(து) தாள்
அணியார் அரவிந்தம் அரும்புமதோ?
பணி யா(து) என வள்ளி பதம் பணியும்
தணியா அதிமோக தயாபரனே.

அற்புதமாய் இருப்பதால் ஒரு முறை சொல்லிப் பார்த்துக் கொண்டேன். :-)

said...

வள்ளியின் பதத்தை முருகன் பணிந்தான் என்று கூட பொருள் சொல்லலாம் இந்த வரிகளுக்கு. அப்படி சொன்னதையும் படித்திருக்கிறேன். அதில் தவறு இல்லை என்று தான் நினைக்கிறேன். ஆண்டவன் அடியார்க்கும் அடியவன் அல்லவா? அதனால் வள்ளியின் பாதத்தை வள்ளிநாயகன் பணிந்தான் என்றால் அதில் என்ன தவறு? அந்த பொருள் வரவேண்டும் என்பதற்காகவே 'தணியா அதி மோக தயாபரனே' என்று எழுதினாரோ அறிவுகிரி என்று தோன்றுகிறது. :-)

கருணையே உருவானவன் ஆதலால் அடியவர் பணிகளை பதம் பணிந்து செய்பவன். அதனால் தானே அவன் தயாபரன் ஆகிறான்? :-)

said...

ராகவன்! அருமை. அருமை. மனோசிலை விளக்கம் அருமை. என் தமிழ் அறிவு கொஞ்சமாவது உங்கள் எழுத்துக்களை படித்தால் வளர்கிறது. நன்றி ராகவன்.

பக்தியை சொல்லவும் திறமை வேண்டும். அது உங்களுக்கு அந்த செந்தூர் முருகன் கொடுத்திருக்கிறான். (ஆமாம்! நானெல்லாம் கடவுளை ஒருமையில் சொல்லலாமா :-). எல்லோருமே 'நீ' என்று ஒருமையில் தானே கடவுளை அழைக்கிறோம். அது சரியா? அதற்கு ஒரு பதிவு.
போடுங்களேன்.

உங்கள் பதிவுகளை ஊருக்குப் போகும் போது எடுத்துச்செல்ல போகிறேன். என் அப்பாவுக்கு ரொம்ப புடிக்கும்.
வெறும் எழுத்து மட்டும் தான?. இல்லை சொற்பொழிவு செய்வது உண்டா?.

said...

// ராகவன்! அருமை. அருமை. மனோசிலை விளக்கம் அருமை. என் தமிழ் அறிவு கொஞ்சமாவது உங்கள் எழுத்துக்களை படித்தால் வளர்கிறது. நன்றி ராகவன். //

சிவா.....என்னுடைய எழுத்தைப் படித்தான் தமிழறிவு வளர்கிறதா.....அப்படியானால் எனக்குப் பெருமைதான்.

// பக்தியை சொல்லவும் திறமை வேண்டும். அது உங்களுக்கு அந்த செந்தூர் முருகன் கொடுத்திருக்கிறான். //
உண்மைதான். பெரிய பெரிய அடிய்வர்களெல்லாம் நான் சொல்வது என்பது என்னுள் இருந்து நாதன் சொல்வதுன்னு சொல்லும் போது....நான் மட்டும் தானாய்ச் சொல்ல முடியுமா. இது தொடர்பாக நான் வழக்கமாக என்ன சொல்வேன் என்று குமரனுக்குத் தெரியும். இராமநாதனுக்கும் தெரியும். அதுவும் கந்தரநுபூதியின் வரிகள்தான். :-) சொல்கிறார்களா என்று பார்க்கலாம்.

//(ஆமாம்! நானெல்லாம் கடவுளை ஒருமையில் சொல்லலாமா :-). எல்லோருமே 'நீ' என்று ஒருமையில் தானே கடவுளை அழைக்கிறோம். அது சரியா? அதற்கு ஒரு பதிவு.
போடுங்களேன். //

அப்படி அழைப்பதில் தவறில்லை. அதுதான் நெருக்கத்தைக் கொடுக்கும். உறவைக் கொடுக்கும். கண்டிப்பாக பதிவு போடலாம். கொஞ்சம் அவகாசம் கொடுங்கள்.

// உங்கள் பதிவுகளை ஊருக்குப் போகும் போது எடுத்துச்செல்ல போகிறேன். என் அப்பாவுக்கு ரொம்ப புடிக்கும். //

இது எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி. பதநி நழுவி ஓலைல விழுந்து...அது நழுவி வாயில விழுந்த கதைதான். :-) அப்பாவைக் கேட்டதாகச் சொல்லவும். அம்மாவையும்தான்.

// வெறும் எழுத்து மட்டும் தான?. இல்லை சொற்பொழிவு செய்வது உண்டா?. //
ஒரு முறை பெங்களூர் தமிழ்ச் சங்கத்தில் நடந்த பட்டிமன்றத்தில் நடுவராக இருந்திருக்கிறேன். பெங்களூர் டவுண்ஹாலில் பாரதியார் விழா பட்டிமன்றத்தில் அணித்தலைவராக இருந்திருக்கிறேன். இது மூன்று ஆண்டுகளுக்கு முன்னர். அதற்குப் பிறகு இல்லை. தொடர்புகள் அறுந்து விட்டன.

சொற்பொழிவு செய்யும் ஆவல் மிகவும் உண்டு. உங்களூர்க் கோயிலேயே ஒரு வாரக்கடைசியில் நல்ல நாளில் சொற்பொழிவுக்கு ஏற்பாடு செய்யுங்களேன். பொழிந்து விடுகிறேன். :-)))

said...

// நன்றாய் பொருள் சொல்லியிருக்கிறீர்கள் இராகவன். உட்பொருளையும் நன்றாய் சொல்லியிருக்கிறீர்கள். //

நன்றி குமரன். அடுத்து எழுத வேண்டியதை நான் சொல்லட்டுமா? நீங்கள் சொல்கின்றீர்களா? :-)

// திணியான மனோசிலை மீது உன(து) தாள்
அணியார் அரவிந்தம் அரும்புமதோ?
பணி யா(து) என வள்ளி பதம் பணியும்
தணியா அதிமோக தயாபரனே.

அற்புதமாய் இருப்பதால் ஒரு முறை சொல்லிப் பார்த்துக் கொண்டேன். :-) //

எனக்கும் இந்தப் பாடல் மிகவும் பிடிக்கும். சொல்லச் சொல்ல இனிக்குதடா வகை. இன்னும் சில பாடல்கள் அப்படித்தான். அநுபூதி பாயாசம் என்றால் இந்தப் பாடல் முந்திரிப் பருப்பு.

said...

// வள்ளியின் பதத்தை முருகன் பணிந்தான் என்று கூட பொருள் சொல்லலாம் இந்த வரிகளுக்கு. அப்படி சொன்னதையும் படித்திருக்கிறேன். அதில் தவறு இல்லை என்று தான் நினைக்கிறேன். ஆண்டவன் அடியார்க்கும் அடியவன் அல்லவா? அதனால் வள்ளியின் பாதத்தை வள்ளிநாயகன் பணிந்தான் என்றால் அதில் என்ன தவறு? அந்த பொருள் வரவேண்டும் என்பதற்காகவே 'தணியா அதி மோக தயாபரனே' என்று எழுதினாரோ அறிவுகிரி என்று தோன்றுகிறது. :-)

கருணையே உருவானவன் ஆதலால் அடியவர் பணிகளை பதம் பணிந்து செய்பவன். அதனால் தானே அவன் தயாபரன் ஆகிறான்? :-) //

குமரன். உங்களுடைய கருத்தோடு நான் முழுவதும் ஒத்துப் போகிறேன். ஏற்கனவே இது குறித்து ஒருமுறை உங்கள் பதிவில் பேசியிருக்கிறோமே. நினைவில் வைத்திருக்கச் சொன்னதும் நினைவிருக்கிறது. ஆனால்.........அதை இன்னொரு செய்யுளுக்காக நிறுத்தி வைத்திருக்கிறேன். கொஞ்சம் பொறுங்கள். :-)

said...

//இது தொடர்பாக நான் வழக்கமாக என்ன சொல்வேன் என்று குமரனுக்குத் தெரியும். //

யாம் ஓதிய கல்வியும் எம் அறிவும்
தாமே பெற வேலவர் தந்ததனால்!

said...

ஹும். சிவாவுக்கு இராகவன் பதிவுகளை தொடர்ந்து படிக்க நேரம் கிடைக்கிறது. ஆனால் என் பதிவுகள் பக்கம் தான் வருவதே இல்லை. ஒரு வேளை இராகவன் போல் இல்லாமல் நிறைய வலைப்பூ வைத்திருப்பதாலோ என்னவோ? :-(

said...

அருமையான பாடல். கல்லில் தாமரை மலர்வதற்கு நீங்கள் கூறிய பொருள் அருமை.இதுவரை இந்த கோணத்தில் யோசித்ததில்லை.
கந்தர் அனுபூதி அருணகிரியார் கந்தனின் அருளைப்பெற்ற பின் பாடியது. எனவே அதில் மகிழ்ச்சியும், பெருமிதமுமே மேலொங்கி நிற்கின்றன. கல்லில் தாமரை பூப்பது என்பது அரிதான ஒன்றல்ல, நடக்க இயலாத ஒன்று. அதைப்போலவே என் கல் போன்ற மனத்திலும் உன் அருளாகிய தாமரையை பூக்கச் செய்தாயே, இது அற்புதமல்லவா, அதிசயமல்லவா என்று மகிழ்வதாகக் கொள்ளலாம். திருப்புக்கழில் வரும்

"கன்னார் உரித்த என் மன்னா எனக்கு நல்
கர்ணா மிர்தப் பதம் ...... தந்த கோவே "

என்ற வரிகளும் இங்கு ஒப்பு நோக்கத்தக்கவை.

"கல்நார் உரித்த என் மன்னா " - கல்லில் நார் உரிப்பது எவ்வளவு கடினமோ அவ்வளவு கடினம் நம் மனத்தில் உள்ள கசடுகளை நீக்கி அதில் ஞான ஒளி வீசச்செய்வது. (அதுவும் அவன் அருளின்றி நடவாது) என் மனமாகிய கல்லில் நார் உரித்த என் தெய்வமே என்கிறார் அருணகிரியார் .

said...

கல் மனம் இளக வேண்டும் என்று கேட்கவில்லை. நேராகவே பாதம் பதிய வேண்டும் என்று கேட்கிறார். கல் இளகவும் இறைவன் மனம் வைக்க வேண்டுமே! அதை எப்போது கேட்பது? அருணகிரி அறிவுகிரி அல்லவா! ஆகையால்தால் கந்தர் அநுபூதி தொடங்கும் பொழுதே நெஞ்சக் கன கல்லும் நெகிழ்ந்து உருக என்று பாடுகிறார். அங்கேயே கல்லாகிய நெஞ்சம் நெகிழ்ந்து விட்டது. ஆகையால் இங்கே பதிந்தால் போதும். என்ன அற்புதமான வரிகள் இவை. நினைத்தாலே கண்ணீர் பெருகும் அருள் வரிகள்.
என்ன அருமையான வரிகள். அருணகிரி அறிவுகிரி ஆஹா அற்புதம் இந்த வரிகள் மற்றும் தமிழ் எல்லாம் வேலவர் தாமே தர வந்ததால்தான். படித்து முடிப்பதற்குள் பல தடவை கண்களை துடைத்துக்கெண்டுதான் படிக்கவேண்டியதாயிற்று.அவ்வளவு பக்திச்சுவை.வயதில் பெரியவன் என்பதால் உரிமையேடு சொல்கிறேன் சதமானம் பவதி(நூறாண்டு காலம் வாழ்க)

வள்ளி பதம் பணிவது ஒன்றும் புதிதல்ல. அண்ணாமலை ரெட்டியார் கவடிசிந்துவில்" வள்ளி பதம் பணி தசன்" என்கிறார்.
இது இப்படியே விடக்கூடாது. புத்தகமாக வரவேண்டும். என்ன குமரன் எனக்கு உங்கள் பக்கபலம் உண்டா? தி. ரா. ச

said...

////இது தொடர்பாக நான் வழக்கமாக என்ன சொல்வேன் என்று குமரனுக்குத் தெரியும். //

யாம் ஓதிய கல்வியும் எம் அறிவும்
தாமே பெற வேலவர் தந்ததனால்! //

அதே அதே....அனைத்தும் முருகன் அருள்.

said...

// அருமையான பாடல். கல்லில் தாமரை மலர்வதற்கு நீங்கள் கூறிய பொருள் அருமை.இதுவரை இந்த கோணத்தில் யோசித்ததில்லை.
கந்தர் அனுபூதி அருணகிரியார் கந்தனின் அருளைப்பெற்ற பின் பாடியது. எனவே அதில் மகிழ்ச்சியும், பெருமிதமுமே மேலொங்கி நிற்கின்றன. கல்லில் தாமரை பூப்பது என்பது அரிதான ஒன்றல்ல, நடக்க இயலாத ஒன்று. அதைப்போலவே என் கல் போன்ற மனத்திலும் உன் அருளாகிய தாமரையை பூக்கச் செய்தாயே, இது அற்புதமல்லவா, அதிசயமல்லவா என்று மகிழ்வதாகக் கொள்ளலாம். //

நிச்சயம் கொள்ளலாம். அருமையாகச் சொன்னீர்கள் ஜெயஸ்ரீ.

// திருப்புக்கழில் வரும்

"கன்னார் உரித்த என் மன்னா எனக்கு நல்
கர்ணா மிர்தப் பதம் ...... தந்த கோவே "

என்ற வரிகளும் இங்கு ஒப்பு நோக்கத்தக்கவை.

"கல்நார் உரித்த என் மன்னா " - கல்லில் நார் உரிப்பது எவ்வளவு கடினமோ அவ்வளவு கடினம் நம் மனத்தில் உள்ள கசடுகளை நீக்கி அதில் ஞான ஒளி வீசச்செய்வது. (அதுவும் அவன் அருளின்றி நடவாது) என் மனமாகிய கல்லில் நார் உரித்த என் தெய்வமே என்கிறார் அருணகிரியார் . //

நிச்சயமாக. கல் நார் உரித்த என் மன்னா போற்றி என்று தமிழ் அர்ச்சனைகளில் முருகனைக் கொண்டாடுவார்கள். நல்லபடியாக நினைவூட்டினீர்கள் ஜெயஸ்ரீ. நன்றி.

said...

// என்ன அருமையான வரிகள். அருணகிரி அறிவுகிரி ஆஹா அற்புதம் இந்த வரிகள் மற்றும் தமிழ் எல்லாம் வேலவர் தாமே தர வந்ததால்தான். படித்து முடிப்பதற்குள் பல தடவை கண்களை துடைத்துக்கெண்டுதான் படிக்கவேண்டியதாயிற்று.அவ்வளவு பக்திச்சுவை.வயதில் பெரியவன் என்பதால் உரிமையேடு சொல்கிறேன் சதமானம் பவதி(நூறாண்டு காலம் வாழ்க) //

மிக்க நன்றி தி.ரா.ச....வாழும் காலமெல்லாம் வேலும் மயிலும் போற்றிக் கொண்டிருக்க வேண்டும்.

// வள்ளி பதம் பணிவது ஒன்றும் புதிதல்ல. அண்ணாமலை ரெட்டியார் கவடிசிந்துவில்" வள்ளி பதம் பணி தசன்" என்கிறார்.
இது இப்படியே விடக்கூடாது. புத்தகமாக வரவேண்டும். என்ன குமரன் எனக்கு உங்கள் பக்கபலம் உண்டா? தி. ரா. ச //

உண்மைதான். நானும் அதையே சொல்ல நினைத்தேன். ஆனால் அதை வேறொரு அநுபூதிச் செய்யுளுக்காக ஒதுக்கி வைத்தேன்.

நீங்கள் சொல்லும் சென்னிக்குள நகர் வாசன் பாடல் எனக்கு மிகவும் பிடிக்கும். அருமையான காவடிச் சிந்து...கழுகுமலையில் பிறந்தவர் அண்ணாமலை ரெட்டியார். அந்தக் கழுகுமலைவாசனைத் திரிசிக்கும் பேறு எப்பொழுது கிட்டுமோ!

said...

// புத்தகமாக வரவேண்டும். என்ன குமரன் எனக்கு உங்கள் பக்கபலம் உண்டா? தி. ரா. ச//

தி.ரா.ச. என்னவிதமான பக்கபலம் வேண்டும் என்று சொல்லுங்கள். எல்லாவிதத்திலும் பக்கபலமாய் இருக்க எனக்கு என்ன கசக்கிறதா? :-)

said...

முன்பு ஒரு கேள்வி குமரனும்,ராகவனும் கேட்டிருந்தார்கள். மீனாக்ஷி அம்மைக்கு தந்தை தாய் யார் என்று. இரண்டு நாட்களுக்கு முன்பு மதுரை சென்றபோது பதில் கிடைத்தது. மலையத்துவஜன் தந்தை, தாய்-காஞ்சனமாலை. அன்னையின் இயற்பெயர் தடாதகை. தி.ரா.ச

said...

ராகவன்,
இந்த பதிவிலே
href="http://ukumar.blogspot.com/2006/03/blog-post_114213930274286589.html">"லக்க..லக்க...லக்க...லக்க...லக்க..லக்க......."

சில கேள்விகள்
உங்களுக்கு,பார்த்தீங்களா?
குமரன் உங்க கிட்ட
தள்ளிட்டாரே?

அன்புடன்,
வெளிகண்ட நாதர்

said...

அரும்புமதோ - its usually அரும்புவதோ any special reason to specify it as அரும்புமதோ