Monday, April 24, 2006

14. முருகன் காட்டும் ஒலியும் ஒளியும்

ஆசானுடைய அருளிருந்தாலன்றி சீடன் கற்க முடியாது. முருகனுடைய அருளின்றி முருகனைப் பற்றித் தெரியவும் புரியவும் முடியாது. புரிந்தும் புரியாதது போல இருக்கிறதல்லவா. இதை இன்னமும் எளிமையாகப் பார்ப்போம். மிகவும் சாதுவான விலங்கு பசு. ஆகையால் அது சிறந்த வீட்டு விலங்காக இருக்கிறது. பசுவின் பால் உடல் நலத்திற்கு மிகவும் நன்று. பசுவின் மடியிலிருந்து பாலைப் பெற வேண்டும். அதற்குப் பசுவின் அருள் வேண்டும். வேண்டாதவர் தீண்ட முடியுமா? பிறகு பற்களைத் தேடத்தான் வேண்டும். ஆக எந்த ஒன்றிலிருந்தும் ஒன்றைப் பெற அந்த ஒன்றின் அருள் வேண்டும்.

முருகன் தனிவேல் முனிநம் குருவென்று
அருள் கொண்டறியார் அறியும் தரமோ
உருவன் றருவன் றுளதல் றிலதன்
றிருளன் றொளியன் றெனநின்றதுவே
(உருவன்று இருளன்று உளதன்று இலதன்று
இருளன்று ஒளியன்று என நின்றதுவே)


இந்த உலகத்தின் இயக்கத்திற்கு முருகனே (இறைவனே) விளக்கம். அப்படிப்பட்ட உலகிலே எதையும் அறிவதற்கு முருகனின் அருள் வேண்டும். முருகனை ஆசானாகக் கொண்டு அறிந்தாலொழிய எதுவும் அறிந்து கொள்ள முடியாது. முருகனைத் தனிவேல்முனி என்கிறார். வேல் தனியானது. ஆம். போர்க்களத்தில் வேல் நின்றால் யாரும் போரிட வர மாட்டார்கள். வேல் தனியாகத்தான் நிற்க வேண்டும். கதிர்வேலுக்கு எதிர்வேல் ஏது?

உருவமும் அருவமும் இல்லாதவர் முருகன். உருவம் இல்லையென்றால் அருவம்தானே. ஆனால் இங்கே உருவமும் அருவமும் இல்லாதவர் என்று கூறுகிறார். இருப்பது இல்லாதது என அனைத்தையும் கடந்த கடவுள் கந்தன். பகலிலே ஒளி. இரவிலே இருள். இந்த இரண்டிற்கும் அப்பாற்பட்டவம் இறைவன். இதுதான் கடைசி இரண்டடிகளுக்கான விளக்கம். எவ்வளவு எளிமையான கருத்து. இதை இப்படியே பொருள் கொண்டாலும் சரிதான். வாரியார் சுவாமிகள் இந்தப் பொருளையும் உடைத்து உட்பொருள் கண்டு சொல்லியிருக்கிறார். தமிழ்க்கடலல்லவா அவர்! அவரது விளக்கத்தைப் பார்ப்போம்.

"நாத விந்து கலாதி நமோநம" என்கிறது திருப்புகழ். நாதம் என்பது சேவல். ஓங்காரத்தைக் கொக்கரித்து உரைக்கும். மயில் ஓங்காரத்தை வடிவில் காட்டும். மயிற்பீலி விந்தின் வடிவம். நாதமும் விந்துவும் கூடியது உலக இயக்கம். முன்பே சொன்னது போல உலக இயக்கம் என்பது முருகனின் விளக்கம். அதனால்தான் "நாத விந்து கலாதி நமோநம" என்கிறது பழநி திருப்புகழ்.

விந்துவின் வடிவமான மயிலின் தோகை உருவம். நாதத்தின் வடிவமான சேவலின் ஒலி அருவம். (உருவன்று அருவன்று). விந்து உள்ளது. நாதம் இல்லாதது. (உளதன்று இலதன்று). இருண்ட மேகத்தைக் கண்டு மகிழ்ந்து ஓங்கார வடிவில் ஆடும் மயில். இருள் தீர்ந்து பகலவன் ஒளி பெருக்கும் வேளையில் ஓங்கார நாதமாகக் கூவுகது சேவல். (இருளன்று ஒளியன்று). உருவுக்கும் அருவுக்கும், இருப்பதிற்கும் இல்லாததிற்கும், இருளுக்கும் ஒளிக்கும் இடையில் நின்று வேலால் காப்பவன் முருகன். அவனை ஆசானாகப் பெற்று கற்றாலொழிய வேறு உய்வில்லை.

இந்தக் கருத்தைத்தான் கந்தரலங்காரத்தில் சொல்கிறார். கோழிக்கொடியனுடைய அடி பணியாமல் குவலயத்தில் (உலகத்தில்) வாழக் கருதுகின்ற மதியற்றவர்களே, ஊழ் எனப்படும் விதியின் கொடுமையிலிருந்து தப்பிப்பது வேறு எப்படி!
கோழிக் கொடியனடி பணியாமற் குவலயத்தே
வாழக்கருதும் மதியிலிகாள் உங்கள் வல்வினைநோய்
ஊழிற் பெருவலியுண்ணவொட்டாது!


பக்தியுடன்,
கோ.இராகவன்

Monday, April 17, 2006

13. செம்மான் மகளைத் திருடிய பெம்மான்

கற்பு மணம் தெய்வயானை. களவு மணம் வள்ளி. பெற்றோர் பார்த்து, உற்றோர் சூழ, கற்றோர் புகழச் செய்து கொண்ட திருமணம் தெய்வயானையுடன். காட்டிற்குச் சென்று, வம்பு செய்து, கையைப் பிடித்து இழுத்து, கிண்டல் பேசி, மயக்கி, ஓடிச்சென்று பிறகு நம்பிராஜன் சம்மதத்துடன் செய்து கொண்ட திருமணம் வள்ளியுடன். அதனால்தான் திருடும் முருகன் என்கிறார். இரவோடிரவாக வீட்டிலுள்ளதை பிறரறியாமல் கொண்டு செல்வது திருட்டுதானே? ஆகையால் திருடும் திருடன் என்கிறார்.

செம்மான் மகளைத் திருடும் திருடன்
பெம்மான் முருகன் பிறவான் இறவான்
சும்மா இரு சொல்லற என்றலுமே
அம்மா பொருளொன்றும் அறிந்திலனே


செம்மான் மகள் என்றால்......செழுமையான மானின் வயிற்றில் பிறந்த வள்ளி என்று பொருள். திருமால் தவம் செய்கையில் இலக்குமி மான் வடிவில் வந்து நிற்க, மாலின் கருணையால் மானின் வயிற்றில் பிறந்த குழந்தை வள்ளி என்று கந்த புராணம் கூறுகிறது. வள்ளிக் கிழங்கு தோண்டிய மெத்தென்ற குழியில் மான் ஈன்ற குழந்தையை நம்பிராஜன் வளர்த்தான். இதென்னடா! புள்ளிமானும் பக்திமானும் கூடிக் குழந்தை வந்ததா என்று அருவெறுப்புடன் கேட்கலாம். வீம்புக்குக் கேட்டாலும் இதற்கும் விடை சொல்லலாம். பொதுவாகவே எந்த மதத்தை எடுத்துக் கொண்டாலும் இறைவனின் பிறப்பு அல்லது அவதாரம் என்பது மானிடப் பிறப்பிலிருந்து மாறுபட்டதாகவே கூறப்பட்டுள்ளது. கன்னி மேரி கணவனுடன் கூடாமல் ஏசுநாதர் அவதரித்தார் என்று நம்புகிறது கிருத்துவ மதம். புத்த மதத்திலும் மற்ற மதங்களிலும் இந்த வகையான நிகழ்வுகள் உண்டு. ஆகவே இந்த விஷயங்களை பெரிது படுத்தி விளக்கம் கொள்வதை விட கருத்தை மட்டும் கொள்வது நன்று. "நாடோறும் மேதோறும் நவிமகள் சேர் வேடுவன்" என்று இராமச்சந்திரக் கவிராயர் கூறுகிறார். மான் நாள்தோறும் ஓரிடத்தில் இராமல் ஓடியோடிச் சென்று நுனிப்புல் மேய்ந்து ஆராச்சி செய்து கொண்டிருக்கும். அதுதான் "நாடோறு மேதோறும்". நவி என்றால் மான். நவிமகள் - மானின் மகள்.

சரி. இப்படியெல்லாம் உள்ள இயற்கைக்குப் புறம்பான விஷயங்களை நீக்கிவிட்டும் இந்தப் பாடலுக்குப் பொருள் சொல்லலாம். பெம்மான் என்றால் பெரும் ஆள். அல்லவா. அதுபோல செம்மான் என்பதை செம்மையான ஆள் என்றும் கொள்ளலாம். வேட்டுவனாகப் பிறந்த நம்பி செம்மையான வாழ்வே வாழ்ந்தான். குலத்தால் வருவதல்ல குணம். ஆனால் குலத்தால் போற்றப்படலாம். நல்ல குணத்தை எல்லாக் குலமும் ஒரு குலமாக நின்று போற்ற வேண்டும். குலத் தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்.

செம்மையான நம்பிராஜனுடைய மகளைத் திருடிக்கொண்டு போன முருகனுக்கு என்ன? பெம்மான் முருகன் பிறவான் இறவான். முருகனுக்கு பிறப்பும் இறப்பும் கிடையாது. நெற்றிக் கண்ணில் தோன்றியது? "உலகம் உய்ய ஒரு திரு முருகன் உதித்தனன்" என்கிறார் கச்சியப்பர் கந்த புராணத்தில். தோன்றினான் என்றோ பிறந்தான் என்றோ கூறவில்லை. உதித்தனன் என்கிறார். இன்று உதிக்கும் சூரியன் நேற்றும் இருந்தது போல, என்றுமுள்ள முருகன் உதித்தான். பிறந்தால்தான் இறப்பு. இராமரும் கிருஷ்ணரும் பிறந்தார்கள். ஆகையால் முடிவில் இறந்தார்கள். சரயு ஆற்றில் தன்னுயிரை விடுத்து பாற்கடல் புகுந்தார் இராமாவதாரத்தில். வேடுவன் விட்ட அம்பு காலில் பாய மண்ணுலகு நீத்தார் கிருஷ்ணாவதாரத்தில். இது புராணங்களில் சொல்லும் வழக்கு. மீனாட்சியாக மதுரையை ஆண்ட உமையம்மை இறக்கவில்லை. மாறாக தாமாகவே கயிலை சென்றார். காரணம் அவரது பிறப்பு மானிடப் பிறப்பாக இருக்கவில்லை. வேள்வியில் தோன்றிய வேதநாயகியாக வந்தார் தமிழர்களுக்காக. ஒவ்வொரு புராணங்களும் ஒன்றையொன்று பார்த்து எழுதப்பட்டதல்ல. ஏதோ ஒரு பொது விதியின் பால் எழுந்ததாகவே உள்ளன. ஏசுநாதரும் சிலுவையில் இறந்து, பிறகு உயிர்த்தெழுந்தார். கிரேக்கக் கடவுளாகக் கருதப்படும் ஹெர்குலில் இறக்கவில்லை. மாறாக மண்ணுலகிலிருந்து தெய்வமாகவே ஒலிம்பஸ் மலைக்குச் சென்றான். காரணம் அவனது பிறப்பும் தெய்வாதீனமானது.

சரி. கருத்துக்கு வருவோம். பிறப்பு ஒழிய வேண்டும். அதற்குச் செய்ய வேண்டியது? இறைவனை வேண்டுவது. ஏற்கனவே கடன் வைத்திருப்பவனிடம் நாம் கடன் கேட்டுச் செல்ல முடியாது. ஆக பிறவா இறவாப் பெம்மான் யாரோ அவரிடமே கேட்க முடியும். அந்தத் தன்மையை உடைய முருகப் பெருமானிடம் பிறவித் துயரை நீக்குமாறு வேண்டுகிறார் அருணகிரி.

இதுவரை இரண்டு வரிகளுக்குத்தான் விளக்கம் சொல்லியிருக்கிறது. எவ்வளவு சொல்ல வேண்டியிருக்கிறது பாருங்கள். சின்ன அணுவிற்குள் ஒளிந்துள்ள பெரிய ஆற்றலைப் போலத்தான் இதுவும். சரி அடுத்த இரண்டடிகளைப் பார்க்கலாம்.

சும்மா இரு சொல்லற. இது முருகன் அருணகிரிக்கு உபதேசித்தது. தொழுநோயின் கொடுமை வாட்ட, துயர் தாங்காமல் தற்கொலை முடிவெடுத்தார் அருணகிரி. ஆற்றுக்கும் மலைக்கும் ஓடாமல், தாம்புக்கயிறைத் தேடாமல், கொடிய நஞ்சை நாடாமல், திருவண்ணாமலைக் கோபுரத்தை நாடினார். உச்சிக்கு ஏறினார். முருகாவென அழைத்து அங்கிருந்து கீழே குதித்தார். பசித்து குழந்தை அழுகின்ற போதே தாய்க்கு பால் சுரப்பது போல, ஓடி வந்தார் வேலவர். தாங்கி நின்றார் அருணகிரியை. அப்பொழுது செய்த உபதேசம்தான் "சும்மா இரு சொல்லற!" மிகவும் கடினமான உபதேசம். ஒன்றும் செய்யாமல் எப்படி இருப்பது. மனத்தின் கடிவாளம் எங்கெங்கோ போகிறதே. கையைக் காலைக் கூட ஓரிடத்தில் சும்மா வைத்திருக்க முடியவில்லை. ஒவ்வொரு புலனும் ஒவ்வொரு விதத்தில் எப்படியாவது எதையாவது தூண்டுகின்றனவே! அப்புறம் எப்படி சும்மாயிருப்பது? முயற்சித்துப் பாருங்களேன். அருணகிரி முயன்றார். வெற்றியும் பெற்றார். மனம், வாக்கு, காயம் ஆகிய மூன்றாலும் சும்மா இருந்தார். முருகனே சொன்ன பிறகு அதற்கு மறுபேச்சேது.

சரி. சும்மா இருந்ததின் விளைவுகள் என்ன? சும்மா இரு சொல்லற என்று சொன்னதுமே அம் மாபொருள் ஒன்றும் அறிந்திலனே என்கிறார். சிற்றின்ப வாழ்வில் நீந்தித் திளைத்தவர் அருணகிரி. பார்க்கும் ஒவ்வொரு பொருளிலும் ஒவ்வொரு இன்பத்தை அனுபவித்தார். நாமும் அனுபவிக்கிறோம். அப்படி அனுபவிக்கும் பொழுது இன்பமாகத் தோன்றினாலும் முடிவு துன்பமாகவே இருக்கிறது. தொலைக்காட்டியைப் பார்க்கிறோம். பார்க்கையில் அந்த நிகழ்ச்சிகள் இன்பத்தைக் கொடுக்கின்றன. ஆனால் நாளடைவில் கண்பார்வைக் கோளாறு வருகிறது. இது போலத்தான் ஒவ்வொன்றும். அப்படிப் பட்ட பொருட்களே நமக்கு மிகவும் முக்கியமானதாகத் தோன்றுகின்றன. அருணகிரிக்கும் அப்படித்தான் இருந்தது முருகனிடம் உபதேசம் கேட்பதற்கு முன்பு. பாடம் கேட்ட பிறகு அம் மாபொருட்கள் ஒன்றுமற்றவைகளாகின. பார்ப்பதெல்லாம் பரமன் மகன். கேட்பதெல்லாம் கந்தன் புகழ். வாசித்ததெல்லாம் வள்ளிமணாளன் பற்றி. நினைத்ததெல்லாம் அந்த நித்தியானந்தனைப் பற்றி. நோக்குமிடமெல்லாம் நீக்கமற நின்ற இறைவன் என்று பாரதி சொன்னது போன்ற நிலையை அடைந்தார் அருணகிரி.

பக்தியுடன்,
கோ.இராகவன்

Tuesday, April 11, 2006

12. திருச்செங்கோட்டின் சிறப்பு

எளிதில் விளக்கம் சொல்லக் கூடிய பாடலிது.

கூகாவென என்கிளை கூடியழப்
போகாவகை மெய்ப்பொருள் பேசியவா
நாகாசல வேலவ நாலுகவித்
தியாகா சுரலோக சிகாமணியே


சிகாமணி என்றால் என்ன? சிகை என்றால் முடி. அந்த முடியில் சூடக்கூடிய மணிதான் சிகாமணி. ஒருவர் எத்தனைதான் அணிமணி புனைந்தாலும் முடியில் சூடக்கூடிய மணிதான் உயர்ந்து தோன்றும். ஆகையால்தான் மணிமுடி என்பது சிறந்தது. மன்னர்களுக்கு பட்டம் கட்டுகையில் கையணி பூட்டுவதில்லை. காலணி பூட்டுவதில்லை. மாறாக மணிமுடி பூட்டுகிறார்கள். அந்த நிகழ்ச்சியையும் முடிசூட்டு விழா என்றே அழைக்கிறார்கள். இதிலிருந்தே மணிமுடியின் பெருமையை அறிந்து கொள்ளலாம். சுரலோகம் என்றால் தேவலோகம். அந்த தேவலோகங்களுக்கு எல்லாம் மணிமுடி புணைந்து கொண்டவரே முருகா! தேவசேனாபதியல்லவா!

தமிழ்க்கவிதைகளில் நான்கு விதமுண்டு. அவை ஆசு, மதுரம், சித்திரம் மற்றும் வித்தாரம். இந்த நான்கிலும் சிறப்புடையவரே சங்கப் புலவராகத் தகுதி பெற்றவர். இந்த நான்கு கவிதைகளிலும் ஒருவர் சிறந்து விளங்க வேண்டுமானால் முருகப் பெருமானின் தனிக்கருணை வேண்டும். தமிழ்த் தெய்வமல்லவா!
"சிகராத்ரி கூறிட்ட வேலும் செஞ்சேவலும்
செந்தமிழால் பகர் ஆர்வம் ஈ
" என்று அருணகிரிநாதர் திருப்புகழில் வேண்டுகிறார். வேலையும் சேவலையும் போற்றிப் புகழ வேண்டும். அதுவும் தீந்தமிழில். அப்படிப் புகழ்ந்து பாட வேண்டுன்ற ஆவலைத் தருவீர் வேலவரே என்று வேண்டுகிறார். இறைவனைப் பாடுகின்ற ஆர்வம் கூட இறையருளால்தான் தோன்றும். அப்படியிருக்க தமிழறிவு வாய்ப்பது என்பது......இறைவனின் பரிபூரணக் கருணையைக் காட்டுகிறது. அதனால்தான் நாலுகவித் தியாகா என்று புகழ்கிறார்.

நாகாசல வேலவா! நாகாசலம் என்ற மலை மீதமர்ந்து வேலைப் பிடித்த பெருமானே! நாகசலம் என்பது திருச்செங்கோடு என்றும் திருப்பதியென்றும் இரண்டுவிதமாகக் கூறுவார்கள். கந்தபுராணத்தில் "பண்டு தான் தங்கியிருந்த வேங்கடமலை" என்ற வரிகளிலிருந்து திருவேங்கடமலையில் முருகன் இருந்ததாகக் கூறுவார்கள். திருப்பதியில் இருக்கும் ஏழுமலைகளில் நாகாச்சலமும் ஒன்று. திருப்பதி சைவப்பதியா வைணவப்பதியா என்ற சர்ச்சை பல நூற்றாண்டுகளாகவே இருந்து வந்தது. பதினொன்று மற்றும் பன்னிரண்டாம் நூற்றாண்டுகளில் மிகப்பெரிய சர்ச்சைகள் நிகழ்ந்தன. ஆனால் அந்தச் சர்ச்சைகளும் அவற்றின் முடிவுகளும் சரித்திரச் சான்றுகளின் படியில்லாமல் வெறும் வாதத்தின் அடிப்படையில் நிகழ்ந்ததாகக் கூறுவார்கள். எது எப்படியோ! எல்லாத் தெய்வமும் ஒன்றே! ஆகையால் மதநல்லிணக்கத்திற்காக இங்கே நாம் திருச்செங்கோடு என்றே எடுத்துக் கொள்ளலாம். திருச்செங்கோடும் சிறப்பில் குறைந்ததல்ல. இளங்கோவடிகள் சிலப்பதிகாரத்தில் விளக்கமாகக் குறிப்பிடுகிறார்.
"சீர்கெழு செந்திலும் செங்கோடும் வெண்குன்றும்
ஏரகமும் நீங்கா இறைவன் கை வேலன்றே
" என்ற சிலப்பதிகார வரிகளிலிருந்து திருச்செங்கோட்டின் சிறப்பு விளங்கும்.

கூகா எனக் கிளை கூடியழும். எப்பொழுது? உடலென்னும் கூட்டிலிருந்து உயிரென்னும் பறவை தப்பித்துப் பறந்த பிறகு, உற்றாரும் உறவினரும் கடன் கொடுத்தோரும் கேட்டோரும் கூடிக் கதறி அழும். அப்படிப்பட்ட வகையில் இறப்பு நேராமல் காக்க அருணகிரிக்கு மெய்ப்பொருள் பேசினான் முருகன். மெய்ப்பொருள் என்றால் என்ன? உண்மையான பொருள். பொய் அழிந்து போகும். ஆனால் உண்மை அழிவில்லாதது. அப்படிப்பட்ட அழிவில்லாத பொருளைப் பற்றி முருகன் அருணகிரிக்கு உபதேசம் செய்திருக்கிறார். ஏற்கனவே "பிமரங்கெட மெய்ப்பொருள் பேசியவா" என்று கூறியிருக்கிறார். இங்கே போகா வகைக்கு அதே மெய்ப்பொருள் பயன்படுகிறது. அனைத்திற்கும் ஆகும் அந்த மெய்ப்பொருள். பரமசிவனுக்கும் அகத்தியருக்கும் அடுத்து முருகனிடம் உபதேசம் பெற்றது அருணகிரிதான். திருப்புகழில் சொல்கிறார்.
"சிவனார் மனம் குளிர உபதேச மந்த்ரமிரு
செவி மீதிலும் பகர் செய் குருநாதா!
"
இரு செவி மீதிலும் பகர் செய்யும் குருநாதன் என்று முருகனைப் புகழ்கிறார். இரண்டு காதுகளிலும் சொல்ல வேண்டிய காரணம் என்ன? முருகனுடைய உபதேசம் கேட்கத் திகட்டாதது. மருந்தானாலும் விருந்து போனது. ஒரு முறை கேட்டதும் போதவில்லை சிவனுக்கு. மற்றொரு காதையும் காட்டுகிறார். என்ன கொடுப்பினை!

பக்தியுடன்,
கோ.இராகவன்

Monday, April 03, 2006

11. எருமையும் மயிலும்

அச்சம் போக்கும் பாடல் இது. உள்ளத்தில் அச்சம் தோன்றுகையில் உச்சரிக்க அச்சமும் போய் அச்சத்திற்கான காரணமும் போகும்.

கார்மாமிசை காலன் வரிற் கலபத்
தேர்மாமிசை வந்தெதிரப் படுவாய்
தார்மார்ப வலாரி தலாரி எனும்
சூர்மா மடியத் தொடு வேலவனே


தார் மார்பா! தார் என்றால் மாலை. ஆண்கள் அணியும் மாலைக்குத் தார் என்று பெயர். வட்டம் முழுமை பெற்றிருக்காது. தோளில் போடப்பட்டு இருபுறமும் தொங்கும். "கார்கடம்பத் தார் எம் கடவுள்" என்று இளங்கோவடிகள் சிலப்பதிகாரத்தில் முருகனைக் குறிப்பிடுகிறார். குளிர்ந்த கடம்ப மலர்களால் ஆன மாலையை அணிந்த கடவுள் என்று பொருள். தோளின் இருபுறமும் பூக்களால் கட்டித் தொங்கினால் பூந்தார். வாழை மரத்தில் காய்த்துப் பூவோடு தொங்கினால் வாழைத்தார். இன்னமும் தமிழில் பழஞ்சொற்கள் நிறைய பயன்பாட்டில் உள்ளன. ஆனால் அருமை பெருமை தெரியாமலேயே நாம் பயன்படுத்துகிறோம். தார் அணிந்து காட்சி தரும் ஒரே பெண் தெய்வம் ஆண்டாள். கண்ணனுக்கான மாலையை அணிந்து கொண்டதால் ஆண்டாளுக்கும் தாரே சாற்றப்படுகிறது. ஆனால் நாளாவட்டத்தில் எல்லாம் மாலைகள் என்றே அழைக்கப்பட்டன.

வலன் என்ற அசுரனை அழித்தவன் இந்திரன். அதனால் அவன் வலாரி. தலத்தை அழிப்பவன் தலாரி. வலாரி தலாரி என்றால் வலாரியின் தலத்தை அழித்தவன். அதாவது இந்திரனுடைய அமராவதியைப் போரிட்டு அழித்தவன் சூரபதுமன். அந்தச் சூரன் முருகப் பெருமானுடன் போரிட்டான். ஆனால் முருகன் சூரனுடன் போரிட்டான் என்பது தவறு. சூரன் மீது முருகன் கருணை காட்டினார். ஆகையினால் அவனைத் தேடிச் சென்று ஆட்கொண்டார். இதையுணராத சூரன் ஆணவம் கொண்டு முருகனுடன் போரிட்டான். முடிவில் எல்லா போர்க்கருவிகளையும் இழந்து கடலடியில் ஒளிந்தான். கடலை வற்றச் செய்தார் வேலவர். விண்ணுக்கும் மண்ணுக்குமாய் பெரிய மாமரமாய் எழுந்தான் சூரன். வேலானது மரத்தைப் பிளந்தது. சேவலும் மயிலுமாய் சூரன் முருகனடி பணிந்தான். சூர்+மா மடியத் தொடு வேலவனே! புரிகிறதல்லவா! இதைத்தான் இளங்கோவும் "சூர்மா தடித்த சுடரனைய வெள்வேலே" என்று சிலப்பதிகாரத்தில் புகழ்கிறார்.

இப்படியெல்லாம் அருணகிரி எதற்கு அழைக்கிறார் முருகனை? காரணம் நமக்கிருக்கும் அச்சம்தான். இந்த உலகத்தில் ஒவ்வொருக்கும் ஒவ்வொரு அச்சமிருக்கும். எல்லோருக்கும் இருக்கும் பொதுவான அச்சம் இறப்பு. அந்த இறப்பு என்ற பெயரில் உடலையும் உயிரையும் கூறிட்டுப் பிரிப்பவன் கூற்றுவன். அதாவது எமதர்மன். கூற்றுவனுக்கு காலன் என்று பெயரும் உண்டு. கால் என்றால் காற்று என்று முன்னமே சொல்லியிருக்கிறேன். காற்று விரைந்து வருவதைப் போல வேளை வரும்போது விரைந்து வருகிறவன் காலன். அவனுடைய வாகனம் எருமை. அதற்குத் தெரிந்தது பொறுமை. காக்கும் கடவுளர்களுக்கு விரைந்து செல்லும் வாகனங்கள். உயிரெடுக்கும் கடவுளுக்கு மெதுவாகச் செல்லும் வாகனம். இல்லையென்றால் அழிவு நிறையும். அப்படி காலன் வந்து உயிரைக் கொண்டு போக வருகையில் நம்மால் ஒன்றும் செய்ய இயலாது. உரமேறிய உடலாக இருந்தாலும் ஒன்றும் செய்ய முடியாது. அப்படி காலன் கொண்டு போவதைக் காட்டிலும் ஆண்டவன் திருவடியில் வீழ்வது நன்றல்லவா!
"அடியேன் வதனம் அசைவுள நேரம்
கடுகவே வந்து கனகவேல் காக்க
" என்கிறார் தேவராய சுவாமிகள்.
"காலன் எனையணுகாமல் உனதிரு
தாளில் வழிபட அருள்வாயே
" என்கிறது திருப்புகழ்.

கலாபம் என்றால் மயிற்றோகை. கலபத் தேர் என்பது உருவகம். மயிலாகிய தேரில் என்று பொருள் கொள்ள வேண்டும். காரெருமை மீதேறி காலன் வரும்பொழுது, கந்தவேளே, மயிலாகிய தேர் மீதேறி வந்து எதிர்கொள்க! மயிலேறி வருக என்று சொல்லியாயிற்று. அந்த மயில் எது? சூரனே மயிலானன் என்பதைத்தான் அடுத்த இரண்டு வரிகளில் "சூர்மா மடியத் தொடு வேலவனே" என்று இணைத்திருக்கிறார் அருணகிரி.

பக்தியுடன்,
கோ.இராகவன்