Monday, May 01, 2006

15. கையில் வாய் இருக்கிறதா.....

அருணகிரியை ஓசைமுனி என்று சொல்லுவார் பாம்பன் சுவாமிகள். பாம்பன் சுவாமிகளே முத்தமிழ் வித்தகர். அவர் சொன்னால் பொய்யாகுமா. அருணகிரியார் தமிழில் விளையாடியிருக்கிறார் என்றால் பொய்யாகாது. இந்தப் பாடலிலும் அப்படியே. அதை விளக்கத்தோடு பார்ப்போம்.

கைவாய் கதிர்வேல் முருகன் கழல்பெற்று
உய்வாய் மனனே ஒழிவாய் ஒழிவாய்
மெய்வாய் விழிநாசியொடும் செவியாம்
ஐவாய் வழி செல்லும் அவாவினையே

உய்வது என்றால் என்ன? ஒரு குழப்பமான அல்லது துன்பமான நிலையிலிருந்து பிழைக்கும் வழி தேடுவது. அப்படி வாழ்வில் உய்ய வேண்டுமென்றால் என்ன செய்ய வேண்டும். கழல் பெற வேண்டும். திருவடியைச் சேர வேண்டுமாம். யாருடைய திருவடிகளை? முருகனுடைய திருவடிகளைச் சேராவிட்டால் உய்வில்லை. ஆகையால் கந்தன் காலடியை வணங்கச் சொல்கிறார்.

கந்தரலங்காரத்தில் இன்னமும் விளக்கமாகச் சொல்கிறார் அருணகிரி. குமரேசர் இருதாளும் தோன்றும் பொழுது நாளும் கோளும் வினையும் என்ன செய்ய முடியும் என்கிறார். அதாவது முருகனை நம்பியவர், காப்பாற்றப் பட வேறெதையும் நம்பவில்லை. வேறெதைப் பார்த்தும் அஞ்சவும் இல்லை. காரணம்? சரண் புகுந்த இடம் அப்படி. அப்பனுக்கே பாடம் சொன்னவன் அல்லவா!

எப்படிப்பட்ட முருகனாம்? கதிர்வேல் முருகன். ஒளி பொருந்திய அறிவுமயமான வேலைத் தாங்கிய முருகனாம். அதிலும் கைவாய் கதிர்வேல் என்கிறார். கைவாயா? அப்படியென்றால்? கையில் வாயிருக்கிறது. ஆம். அந்த வாய்தான் கதிர்வேல். கைபேசும் என்கிறார்கள் அல்லவா? அப்படிப் பேசும் முருகனுடைய கதிர்வேல். அடியார்களை நெறுக்கும் துன்பங்களை முருகனுடைய வேல் பேசிக் தீர்க்கும். அதனால்தான் கைவாய் கதிர்வேல். என்ன சொல்நயம். அடடா!

ஒருவர் உலக அனுபவங்களைப் பெறுவது அவரது ஐந்து புலன்கள். பார்ப்பது, கேட்பது, பேசுவது, உணர்வது, நுகர்வது என்ற ஐந்து செயல்களின் மூலமாகவே நமது உடம்பு நமக்கு செய்திகளைக் கொடுக்கிறது. இவற்றில் ஒரு புலன் குறைந்தாலும் பெரும் இழப்புதான். "கூன் குருடு செவிடு பேடு நீக்கிப் பிறத்தல் அரிது" என்கிறார் ஔவையார். அப்படிக் அரிதாகக் கிடைத்த ஐம்புலன்களையும் நெறியோடு பயன்படுத்த வேண்டும். நடக்கும் தீயவைகளைக் பார்க்கக்கூடாது என்று நினைக்கக்கூடாது. மாறாக நமது பார்வை தீய விளைவுகளை உண்டாக்கக் கூடாது. நாம் கேட்பதாலும் நுகர்வதாலும் உணர்வதாலும் சொல்வதாலும் எந்தத் தீயவைகளும் நேரக்கூடாது.

அப்படி ஐம்புலன்களையும் அடக்கி ஆள வேண்டும். "ஒருமையுள் ஆமைபோல் ஐந்தடக்கல் ஆற்றின் எழுமையும் ஏமாப்பு உடைத்து" என்பது வள்ளுவர் வாக்கு. இந்த ஒரு பிறவியில் ஐம்புலன்களும் நெறிப்பட வாழ்ந்தால் அது ஏழு பிறப்புகளிலும் பயனளிக்குமாம். தீய ஆசையே துன்பத்திற்குக் காரணம். அந்த ஆசைகள் நம்மைச் சேர்வதும் ஐம்புலன்களின் வழியாகத்தான். அப்படி ஐம்புலன்களின் வழியாகவும் வந்து தீவினைகள் செய்யும் ஆசைகளை ஒழிப்பாய் என்கிறார் அருணகிரி. அதிலும் இரண்டு முறை ஒழிவாய் என்று சொல்லி அதன் முக்கியத்துவத்தை உணர்த்துகிறார்.

இப்படி ஐம்புலன்களினாலும் நன்மையே சிந்தித்து கதிர்வேல் முருகனின் திருவடிகளைப் பணிந்து நாமனைவரும் கடைத்தேற வேண்டும்.

பக்தியுடன்,
கோ.இராகவன்

12 comments:

said...

ஒருவர் உலக அனுபவங்களைப் பெறுவது அவரது ஐந்து புலன்கள். பார்ப்பது, கேட்பது, பேசுவது, உணர்வது, நுகர்வது என்ற ஐந்து செயல்களின் மூலமாகவே நமது உடம்பு நமக்கு செய்திகளைக் கொடுக்கிறது. இவற்றில் ஒரு புலன் குறைந்தாலும் பெரும் இழப்புதான்.//

ரொம்ப சரி..

நம்மில் பலருக்கு இந்த கேட்பது.. அதாவது செவியில் விழுவதை மனதில் இருத்துவது.. வேலை செய்வதில்லை.. மேம்போக்காக கேட்டுவிட்டு வந்த வழியே விட்டுவிட்டு சென்றுவிடுகிறோம்..

said...

ஜோசப் சார்,

நீங்க சொல்லறது சரிதான். அப்படி இல்லைன்னா வேண்டாத விஷயங்களை காதில் வாங்கி மனதில் போட்டு குழப்பிக்கறங்களும் நாமதானே.

அதனாலதான் புலனடக்கம்ன்னு பெரியவங்க சொல்லித்தராங்க. அதாவது எதை எடுப்பது, எதை விடுப்பதுன்னு தெரிஞ்சுகிட்டு அதுக்கு ஏத்தா மாதிரி நடக்கணும்.

நம்ம நிறைய பண்ணற தப்பு - வேண்டாதது உள்ள போகுது. வேணும்கிறது போக மாட்டேங்குது.

said...

ராகவன், நல்ல இடுகைகள் என்றாலும் இப்பதிவை எப்போதாவது தான் படிப்பது வழக்கம். சிறு குறை கண்டதால் சொல்லத் தோன்றியது.

"அருணகிரியார் தமிழில் விளையாடியிருக்கிறார் என்றால் மெய்யாகாது"

=பொய்யாகாது?

said...

நல்ல விளக்கம் இராகவன். கைவாய் என்பதற்கு பொருள் தெரியாமல் இதுவரை இருந்தேன். பொருள் சொன்னதற்கு நன்றி.

இந்தப் பாட்டுல இன்னொரு உட்பொருளையும் வைத்திருக்கிறார். ஐம்புலங்களை அடக்கு என்று சொல்லாமல் மனதைப் பார்த்து ஒழிவாய் ஒழிவாய் என்கிறார் பாருங்கள். ஐம்புலங்களும் அவற்றின் தொழிலைச் செய்துக்கொண்டு இருக்கின்றன. அவற்றை நல்வழியில் திருப்புவதும் தீவழியில் செலுத்துவதும் மனத்தின் செயல். அதனால் புலன்களைப் பார்த்துச் சொல்லாமல் மனத்தைப் பார்த்துச் சொல்கிறார் - ஒழிவாய் ஒழிவாய் என்று.

said...

இன்னொரு விதமாகவும் சொல்லலாம். மனனே ஒழிவாய் என்றும் அவாவினையே ஒழிவாய் என்றும் கூட சொல்லலாம். :-)

said...

விளக்கம் நன்று ராகவன்.

//வாழ்வில் உய்ய வேண்டுமென்றால் என்ன செய்ய வேண்டும். கழல் பெற வேண்டும். திருவடியைச் சேர வேண்டுமாம். யாருடைய திருவடிகளை? முருகனுடைய திருவடிகளைச் //

உண்மை. TMS பாடுவாறே 'கந்தன் காலடியை வணங்கினால்' என்று.

கை வாய் விளக்கம் அருமை. நாம் கூட அடிக்கடி 'லே! இனி வாய் பேசாது. கை தான் பேசும்' என்று சொல்வோமே.

said...

// நம்மில் பலருக்கு இந்த கேட்பது.. அதாவது செவியில் விழுவதை மனதில் இருத்துவது.. வேலை செய்வதில்லை.. மேம்போக்காக கேட்டுவிட்டு வந்த வழியே விட்டுவிட்டு சென்றுவிடுகிறோம்.. //

உண்மைதான் ஜோசப் சார். பிரச்சனையே இங்குதான் தொடங்குகிறது. பல நல்லதுகளையும் இப்படியே விட்டு விடுவோம். ஒவ்வொரு புலனையும் நல்லபடியாகப் பயன்படுத்த வேண்டிய பொறுப்பு ஒவ்வொருவருக்கும் உள்ளது.

said...

// நம்ம நிறைய பண்ணற தப்பு - வேண்டாதது உள்ள போகுது. வேணும்கிறது போக மாட்டேங்குது. //

சரியாச் சொன்னீங்க கொத்ஸ். உருளைக்கிழங்கு வறுவல் பிடிச்ச அளவுக்குக் கீரையச் சாப்பிடறதில்லையே......

said...

// செல்வராஜ் (R. Selvaraj) said...
ராகவன், நல்ல இடுகைகள் என்றாலும் இப்பதிவை எப்போதாவது தான் படிப்பது வழக்கம். சிறு குறை கண்டதால் சொல்லத் தோன்றியது.

"அருணகிரியார் தமிழில் விளையாடியிருக்கிறார் என்றால் மெய்யாகாது"

=பொய்யாகாது? //

சரியான பொழுதில் கண்டுபிடித்தீர்கள். நன்றி செல்வராஜ். திருத்தி விட்டேன். இனிமேல் இப்படி ஏதாவது தவறு தென்பட்டால் உடனடியாகச் சொல்லிட வேண்டும்.

said...

// இந்தப் பாட்டுல இன்னொரு உட்பொருளையும் வைத்திருக்கிறார். ஐம்புலங்களை அடக்கு என்று சொல்லாமல் மனதைப் பார்த்து ஒழிவாய் ஒழிவாய் என்கிறார் பாருங்கள். ஐம்புலங்களும் அவற்றின் தொழிலைச் செய்துக்கொண்டு இருக்கின்றன. அவற்றை நல்வழியில் திருப்புவதும் தீவழியில் செலுத்துவதும் மனத்தின் செயல். அதனால் புலன்களைப் பார்த்துச் சொல்லாமல் மனத்தைப் பார்த்துச் சொல்கிறார் - ஒழிவாய் ஒழிவாய் என்று. //

அதே அதே குமரன். பஸ்சுல இருக்குற எல்லாரும் ஒழுங்காப் போகனும்னா...டிரைவர் ஒழுங்காப் போனா போதும். அப்படித்தான் இதுவும்.

said...

// இன்னொரு விதமாகவும் சொல்லலாம். மனனே ஒழிவாய் என்றும் அவாவினையே ஒழிவாய் என்றும் கூட சொல்லலாம். :-) //

புரியவில்லையே குமரன். விளக்கமாகச் சொல்லுங்களேன்.

said...

// சிவா said...
விளக்கம் நன்று ராகவன். //

நன்றி சிவா.

// //வாழ்வில் உய்ய வேண்டுமென்றால் என்ன செய்ய வேண்டும். கழல் பெற வேண்டும். திருவடியைச் சேர வேண்டுமாம். யாருடைய திருவடிகளை? முருகனுடைய திருவடிகளைச் //

உண்மை. TMS பாடுவாறே 'கந்தன் காலடியை வணங்கினால்' என்று. //

ஆகா சரியான சினிமாப் பாட்டையும் எடுத்துக் குடுத்திருக்கீரே....பிரமாதமான பாட்டு இது.

// கை வாய் விளக்கம் அருமை. நாம் கூட அடிக்கடி 'லே! இனி வாய் பேசாது. கை தான் பேசும்' என்று சொல்வோமே. //

அதத்தான் அருணகிரியும் சொல்லீருக்காரு. சரியாப் பிடிச்சீங்க....