Monday, May 29, 2006

19. அப்பன் சேர்த்தது வட்டியோடு மகனுக்கு

இந்தப் பாடல் சென்ற பாடலின் தொடர்ச்சி. முருகனைப் பாடி மகிழ வேண்டும் என்று கூறிய அருணகிரி முருகப் பெருமானின் சில பண்புகளை, அதாவது நம்மால் புரிந்து கொள்ள முடிகின்றவைகளை நமக்குக் கூறுகிறார்.

உதியா மரியா உணரா மறவா
விதிமால் அறியா விமலன் புதல்வா
அதிகா அநகா அபயா அமரா
வதிகா வலசூர பயங் கரனே


ஒருவர் இன்னாருடைய மகன் என்று சொல்லும் பொழுதே பெருமையும் சிறுமையும் அதோடு வந்து விடுகிறது. உத்தமனுடைய பிள்ளைக்கு நல்ல பெயர் கிடைக்கும். தந்தை செய்த புண்ணியம் மகனுக்கோ மகளுக்கோ செல்லும் இடமெல்லாம் வாழ்வளிக்கும். தீயவனுடைய பிள்ளை நல்லவனாக இருந்தாலும் போகின்ற இடத்தில்லெல்லாம் பிரச்சனைகள் வந்து நிற்கும். பெற்றவர்கள் நல்ல பெயரைச் சேர்த்து வைக்க வேண்டும். பிள்ளைகளுக்குச் சேர்க்கும் மிகப் பெரிய சொத்து அது. "சான்றோனாக்குதல் தந்தைக்குக் கடனே" என்று சொல்கிறார் ஔவையார்.

பாடி மகிழப்பட வேண்டிய முருகப் பெருமானின் தந்தையும் பெருமை மிக்கவர்தான். அந்த பரமசிவனின் பெருமைகள் யாவை? உதியா மரியா உணரா மறவா விதிமால் அறியா விமலன் அந்த ஈசன். உதியா - பிறப்பில்லாத. மரியா - இறப்பில்லாத. உணரா - நினைப்பில்லாத. மறவா - மறதியில்லாத. பிறப்பும் இறப்பும் இல்லா ஆதி நாயகன் சிவபெருமான். நினைப்பு இல்லாதவர். இது பெருமையா என்றால் ஆம் என்பதே விடை. விடையேறு நாயகன் மறவாதவன். ஆகையால் மறந்ததை நினைக்க வேண்டிய வகையில்லாதவன். தொலைத்தால்தானே தேட வேண்டும். மறந்தால்தானே நினைக்க வேண்டும்.

விதிமால் அறியாத விமலன் என்றால்? விதியை எழுதுகிறவன் நான்முகன். ஆகையால் அவன் விதி. மால் என்றால் திருமால். அயனும் (பிரம்மன்) அரியும் கூடித் தேடியும் அடி முடி காணக்கிடைக்காத பெருமான் எம்பெருமான். கந்த குரு கவசத்தில் "அடி முடி அறிய ஒண்ணா அண்ணாமலையோனோ" என்று புகழப்படுகிறது. முருகக் கடவுள் யார்? "பாதிமதி நதி போதும் மணிச்சடை நாதர் அருளிய குமரேசா" என்கிறது திருப்புகழ். பாதிமதி என்றால் பிறைச் சந்திரன். என்ன அழகான பெயர்! நதி கங்கை. இப்படி மதியும் நதியும் போதும் சடையரின் நெற்றிக் கண்ணிலே அறுவராகத் தோன்றி அம்மையால் ஒருவரானவன் கந்தன். அவனுக்கு தந்தை தாயின் புகழும் உண்டு. அதற்கு மேல் சேர்த்த சுயப்புகழும் உண்டு. ஆக இந்தப் பாடலின் முதலிரண்டு வரிகளில் சிவபெருமானைப் புகழ்ந்தாலும் அத்தனையும் முருகனுக்கும் உண்டு. அப்பன் வங்கியில் சேர்த்து வைத்த பணம் வட்டியோடு மகனைச் சேர்வதைப் போல.

அந்த விமலனின் புதல்வனை அதிகா அநகா அபயா என்று இறைஞ்சுகிறார் அருணகிரி. அதிகா என்றால் எல்லாருக்கும் தலைவர். தேவர்களுக்கும் தெய்வங்களுக்கும் தலைவர் எம்பெருமான். அவருக்கும் தேவர் முருகன். தேவாதி தேவன் சிவன். தேவ தேவாதி தேவன் முருகன். ஆகையால் அப்பனுக்கே பாடஞ் சொல்ல முடிந்தது சுப்பனால். அஞ்செழுத்து அப்பனுக்கு. ஆறெழுத்து மகனுக்கு. பழமுதிர்ச்சோலை திருப்புகழ் சொல்கிறது இப்படி. "அயனெனவாகி அரியெனவாகி அரனெனவாகி அவர் மேலாய்!" அயன் என்றால் பிரமன். அரி என்றால் திருமால். அரன் என்றால் சிவன். இவர்கள் மூவரும் ஆகி, அவர்களுக்கும் மேலானவனே என்று திருப்புகழ் செப்புகிறது. அதனால்தான் கந்தரலங்காரத்தில் "பின்னை ஒருவரை யான் பின் செல்கேன்" என்கிறார்.

அநகா என்றால் குற்றமற்றவன் என்று பொருள். அபயா என்றால் அச்சமற்றவன் என்று பொருள். அதைத்தான் அடுக்கடுக்காக அதிகா அநகா அபயா என்று கூறுகிறார்.

அமராவதி காவலனே! சூர பயங்கரனே! போர்க்களத்திலே சூரனை அச்சப்படுத்திய முருகன் அவனை அழிக்கவில்லை. ஆகையால்தான் அவனுக்குச் சூர பயங்கரன் என்றும் ஒரு பெயர். அப்படி சூரனிடமிருந்து அமராவதியைக் காத்து இந்திரனிடம் ஒப்படைத்ததால் அமராவதி காவலனாகவும் ஆயினான் முருகன்.

முருகா! உன்னுடைய தந்தையின் சிறப்புப் பண்புகள் யாவும் பெற்று அவைகளுக்கு மேலேயும் பெற்று மும்மூர்த்திகளுக்கும் மேலாய் விளங்கும் வேலவனே! நீ தேவதேவாதி தேவன். குற்றமற்றவன். அச்சமற்றவன். சூரனுக்கு அச்சமூட்டியவன். அதனால் அமராவதியைக் காத்தவன். உன்னுடைய புகழை என்றும் மனதால் நினைத்து நாவால் பாடவேண்டும். அதற்கும் நீயே அருள வேண்டும்.

பக்தியுடன்,
கோ.இராகவன்

4 comments:

said...

முருகன் பெருமைகளை பற்றிக்கூறி மேலும் அவன் எவ்வாறு முத்தொழில் புரியும் மும்மூர்திகளைவிட சிறந்தவன் என்பதை பதம் பதமக பொருள் கூறியதற்கு நன்றி.நம்பிக்கையுடன் 19து பதிவுகல் சிறப்பாக போட்டாலும் இதற்கெல்லாம் முருகன் அருள்தான் காரணம் என்று மேலும் இடப்போகிற பதிவுகளுக்கும் அவனருளை வேண்டி
உன்னுடைய புகழை என்றும் மனதால் நினைத்து நாவால் பாடவேண்டும். அதற்கும் நீயே அருள வேண்டும்என்று முருகார்ப்பணம் செய்து விட்டீர்கள்.அருணகிரியாரும் ''எதிரிலாத பத்திதனைமேவி இனிய தாள் நினைப்பை இருபோதும் இதயவாரிதிக்குளுறவாகி எனதுளே சிறக்க அருள்வாயே" என்கிறார். தி. ரா. ச

said...

அருமை இராகவன். மிக மிகத் தெளிவாக இருக்கிறது விளக்கம்.

said...

பாதிமதி என்றால் பிறைச் சந்திரன். என்ன அழகான பெயர்! நதி கங்கை. இப்படி மதியும் நதியும் போதும் சடையரின் நெற்றிக் கண்ணிலே அறுவராகத் தோன்றி அம்மையால் ஒருவரானவன் கந்தன். அவனுக்கு தந்தை தாயின் புகழும் உண்டு. அதற்கு மேல் சேர்த்த சுயப்புகழும் உண்டு. ஆக இந்தப் பாடலின் முதலிரண்டு வரிகளில் சிவபெருமானைப் புகழ்ந்தாலும் அத்தனையும் முருகனுக்கும் உண்டு. அப்பன் வங்கியில் சேர்த்து வைத்த பணம் வட்டியோடு மகனைச் சேர்வதைப் போல.
ஒரு முறை திரு.பரலி. சு . நெல்லையப்பரை பார்க்கச்சென்று இருந்தேன்(1958)அவர் மகாகவி பாரதியாரின் நண்பர் அவருடன் வாழ்ந்தவர். உனது பெயர் என்னவென்று கேட்டார். நான் வணங்கி என் பெயர் சந்திரசேகரன் என்றேன். அதைக்கேட்ட அவர் உன்னை நான் பிறைசூடி என்றுதான் அழைப்பேன் என்று கூறினார்.நல்ல தமிழ்ப்பெயர் அதையே வைத்துக்கொள் என்றார் பதிமதிக்கு நீங்கள் பிறைச்சந்திரன் என்று கூறியதும் அந்த நிகழ்ச்சி ஞாபகம் வந்தது.
அதேமாதிரிசிவபெருமானை பாடும் போது பராத் பரா பமேஸ்வரா என்ற பாட்டில் திரு. பாபநாசம்சிவன் அவர்கள் "அரிஅயணும்காணா அரிய ஜோதி ஆதி அந்தமில்லா பழாமநாதி
முப்புரம் எரிச்செய்த முகட்கரும்பே எந்தன் புண்யமூர்த்தி சுப்பிரமண்யன் தந்தையே பராத் பரா.....தனயனால் தந்தைக்கு வந்த புகழைக்கூறுகிறார். தி.ரா.ச

said...

raghavan avargale..
unga padhivu romba romba azhaagaa thelivaa irukku.. mikka nandri..
ivlo azhagaana vilakkam thandhadhukku mikka nandri..unga pathivugalaip padikka mikka aavaludan ullen..

and ivlo nulgalil irundhu 'quotes' kuduthu irukeenga... unga pulamaiyai ninaithaal romba viyappa irukku..
melum ungal sevai thodarattum!!