Tuesday, July 04, 2006

24. அடியின்றி முடியவோ!

அடியைக் குறியாது அறியாமையினால்
முடியக் கெடவோ முறையோ முறையோ
வடி விக்ரம வேல் மகிபா குறமின்
கொடியைப் புணரும் குண பூதரனே

அருணகிரி முருகனைப் புகழ்ந்து, அவனது திருவடிச் சிறப்புகளைப் பற்றி மகிழ்ந்து முகிழ்ந்து தெவிட்டாத தீந்தமிழில் நிறையச் சொல்கிறாரே! அப்படி என்ன கண்டார்? எதைக் கண்டார்? எப்படிக் கொண்டார் என்று சிந்தித்தால், விடை கிடைக்கிறது கந்தரலங்காரத்தில். "மொய்தார் அணிகுழல் வள்ளியை வேட்டவன் முத்தமிழால் வைதாரையும் அங்கு வாழ வைப்போன்!" வண்டுகள் மொய்க்கும் பூந்தாரை (மாலை) அணிந்த வள்ளியை வேட்டுவன் உருவில் சென்று வென்றவனே! உன்னை ஒருவர் வைதாலும் அது தமிழில் என்றால் அவரை விரைந்து காப்பவனே! அதாவது முருகனுக்கு இருக்கும் தமிழ்க்காதல். தமிழில் வைதாரையும் வாழ வைக்கும் வள்ளலைப் புகழ்ந்து பாடினால், என்னென்ன கிடைக்கும்? வாழ்வு போகும். ஆம். இவ்வுலக வாழ்வு எனும் பற்று போய், இறைவன் திருவடி கிடைக்கும். அதனால்தான் அலுக்காமல் தமிழில் நிறைய பாடியிருக்கிறார் அருணகிரி. திருப்புகழ்களும், கந்தர் அநுபூதியும், கந்தர் அலங்காரமும், கந்தர் அந்தாதியும், வேல் விருந்தமும், மயில் விருத்தமும். சேவல் விருத்தமும் இன்னும் நிறையவும் பாடியிருக்கிறார்.

முருகனுடைய திருவடிகளை எப்பொழுதும் நினைக்க வேண்டும். இது இல்லறம் துறந்த வல்லவர்களுக்கு. நாளுக்கு ஒரு முறையேனும் நினைக்க வேண்டும். இது இல்லறம் போற்றும் நல்லவர்களுக்கு. அப்படி நினைக்காமல் இருக்க முடியுமா? இருந்தால் அது அறியாமை. அறியாமை இருந்தால் என்ன ஆகும்? எல்லாம் முடிந்து போகும். அறியாமை என்னும் இருள் சூழ்ந்த நிலத்தினிலே வெற்றி என்னும் பயிர் விளைவதில்லை. அறிவு என்னும் சூரியன் அதற்குத் தேவைப்படுகிறது. இறைவனுடைய திருவடிகளை அறியாத பொழுது வாழ்க்கையின் முடிவு இருளில் மூழ்குகிறது. அதை அந்தம் என்பார்கள். அந்த அந்தத்தைச் செய்கிறவன் அந்தகன். அதாவது எமன். கரிய எருமை மேல் ஏறி வருவான். ஆகையால் யமன் வருகையில் இருளும் வரும். ஆனால் இறைவனுடைய அடியவர்களுக்கு அந்தத் துயரம் இல்லை. வேலோடும் மயிலோடும் சேவலோடும் முருகனே வந்தணைப்பான். ஆகையால் முடிவு கெடாது. இப்பொழுது புரிந்திருக்குமே "அடியைக் குறியாதறியாமையினால் முடியக் கெடவோ முறையோ முறையோ!"

முதலிரண்டு அடிகளுக்கு வேறு விதமாகவும் பொருள் கொள்ளலாம். அடியார்க்கு யாம் அடியார் என்பது ஈசன் வாக்கு. பெரியது எது என்ற கேள்விக்கு ஔவையும் "தொண்டர்தம் பெருமை சொல்லவும் பெரிதே" என்கிறார். இறைவனுக்கும் இவ்வுலக மக்களுக்கும் தொண்டு செய்து வாழ்ந்த (இன்றும் மக்கள் மனதில் வாழும்) அடியார்கள்து பெருமைகளை அறிந்து உணர வேண்டும். அவர்தம் வாழ்வில் பின்பற்றிய பொதுநலனில் நாமும் பாடம் கற்க வேண்டும். பெருஞ் சமயக் குரவர் திருநாவுக்கரசர். தேவாரம் பாடி ஈசன் அருளை உலகுக்குக் காட்டிய மகான். அப்படிப்பட்ட பெரியவர் சமயத் தொண்டோடு சமூகத் தொண்டும் செய்தார். ஆம். உழவாரப் பணி செய்து தொண்டாற்றினார். பலரும் நடக்கும் நிலம். அங்கே முட்செடிகள் இருந்தால் என்ன? அதை பெரும் சமயக் குரவரான அப்பரா செய்ய வேண்டும்? மடத்தில் இருக்கின்றவர்களைக் கொண்டு செய்யச் சொல்லலாமே! ஆனால் அவரே செய்தார். ஆகையால்தால் அவர் அப்பர். நாமெல்லாம் லோயர். காந்தியடிகள் தம்முடைய கழிப்பறையைத் தாமே செய்து வந்தார். அது பெரியவர்கள் செயல். அந்தச் செயல்களிலிருந்து நாமும் பாடம் கற்று வாழ்ந்தால் அன்றி, நம்முடைய வாழ்க்கையில் எந்த பயனும் இருக்காது. இல்லையென்றால் எல்லாரையும் போல நமது வாழ்வும் முடிந்து போகும். அடியார்கள் புகழ் போல நின்று நிலைக்காது.

வடிவிக்கிர வேல் மகிபா என்றால்? முருகனுடைய வேல் வடிவுடையது. அறிவுடையது. வெற்றி உடையது. அப்படிப்பட்ட வேலைத் தாங்கிய வீரர் தாங்குவது என்ன? கொடியானது கொம்பைச் சுற்றி வளரும். அங்கே கொடிக்கு கொம்பு ஆதாரம். கொம்பிற்கு கொடி ஆதாரம். ஒன்று இல்லையேல் மற்றொன்று இருக்க வேண்டியதில்லை. வேறுவேறாயினும் இரண்டும் ஒன்றே. இல்லறத்தில் கணவன் மனைவி உறவும் அவ்வாறே. பெரியவரும் இல்லை. சிறியவரும் இல்லை. இருவரும் ஒருவருக்கு ஒருவர் ஆதாரம். இதை எடுத்துக் காட்டத்தான் இறைவனுக்கும் இறைவிக்கும் திருமணம் செய்யும் வழக்கம் வந்தது. இதை வைத்துக் கொண்டு இறைவனுக்கு இல்லற உணர்ச்சிகள் இருப்பதாக தவறாகக் கருதக் கூடாது. எழுத்துக் கூட்டி எழுதச் சொல்லித் தரும் ஆசிரியருக்கு எல்லாம் தெரியும். இருந்தும் மாணவனுக்கான அவரும் எழுத்துக் கூட்டுவது போல இறைவன் இறைவியோடு சேர்ந்து காட்சி தருகிறான். சரி. செய்யுளுக்கு வருவோம். முருகன் கொம்பு. வள்ளி கொடி. அதைத்தான் குறமின் கொடியைப் புணரும் குணபூதரனே என்கிறார். வேலைத் தாங்கிய வீரர் தாங்குவது வள்ளிக் கொடியை.

குணபூதரன் என்றால் குணத்தில் பெரியவன். உருவத்தில் பெரியது பூதம். பூதரன் என்றால் பருத்தவன். குணபூதரன் என்றால் குணத்தில் பெரியவன். அப்படிப் பட்ட முருகப் பெருமானின் திருவடிகளை வணங்கி நாம் வாழ்வு பெற வேண்டும்.

பக்தியுடன்,
கோ.இராகவன்

21 comments:

said...

ராகவன்,

//ஆகையால்தால் அவர் அப்பர். நாமெல்லாம் லோயர்.//

இவ்வளவு பெரிய சீரியஸ் விசயம் சொல்லும் போதும் நகைச்சுவை உணர்வு ;-) குட்.

நிறையெ உங்கள் பதிவுகளை தவறவிட்டிருப்பேன் என்று நினைக்கிறேன். "தோண்டுதல்" வேணும் சீக்கிரம்.

said...

தமிழில் வைதாரையும் வாழவைக்கும் வள்ளல் புகழ் என்றென்றும் எம்மொழியிலும் சொல்லி மகிழவேண்டும். வைதால் அதனைத் தமிழில் வையலாம்; புகழ எந்த மொழியில் புகழ்ந்தால் என்ன? இல்லையா இராகவன்? :-)

தொண்டர் தம் பெருமையைத் தொட்டுச் சென்றிருக்கிறீர்கள். இன்னும் விரித்துக் கூறியிருக்கலாம்.

உழவாரப்பணி என்றால் சிவாலயங்களில் மட்டுமே அப்பர் பெருமான் முட்செடிகளையும் களைகளையும் களைந்தார் என்று எண்ணியிருந்தேன். இன்று தான் தெளிந்தேன் - அவர் சமூகப் பணியையும் உழவாரப்பணியாகச் செய்தார் என்று.

வேலனைக் கொம்பாகவும் வள்ளியைக் கொடியாகவும் கொண்டு அருமையான ஒரு உவமையை இந்தப் பாடலில் கொண்டுவந்துவிட்டீர்கள். நன்றாக இருக்கிறது.

said...

தமிழில் வைதாரையும் வாழவைக்கும் வள்ளல் புகழ் என்றென்றும் எம்மொழியிலும் சொல்லி மகிழவேண்டும். வைதால் அதனைத் தமிழில் வையலாம்; புகழ எந்த மொழியில் புகழ்ந்தால் என்ன? இல்லையா இராகவன்? :-)

தொண்டர் தம் பெருமையைத் தொட்டுச் சென்றிருக்கிறீர்கள். இன்னும் விரித்துக் கூறியிருக்கலாம்.

உழவாரப்பணி என்றால் சிவாலயங்களில் மட்டுமே அப்பர் பெருமான் முட்செடிகளையும் களைகளையும் களைந்தார் என்று எண்ணியிருந்தேன். இன்று தான் தெளிந்தேன் - அவர் சமூகப் பணியையும் உழவாரப்பணியாகச் செய்தார் என்று.

வேலனைக் கொம்பாகவும் வள்ளியைக் கொடியாகவும் கொண்டு அருமையான ஒரு உவமையை இந்தப் பாடலில் கொண்டுவந்துவிட்டீர்கள். நன்றாக இருக்கிறது.

said...

எங்கையா கத்துகிட்டீங்க இந்த சரக்கையெல்லாம்? (யாவை மரியாதை குறைவாக எண்ண வேண்டாம். அது ஆச்சரியத்தை குறிக்கிறது.)

said...

இராகவன், 'வேட்டவன்' என்றால் 'வேட்கை கொண்டவன்' என்று பொருள். கந்தன் வேடுவன் வடிவில் வந்ததை இங்கே பொருத்தமாக வேட்டவன் - வேட்டுவன் என்ற ஒலி ஒற்றுமையினால் கொண்டுவந்துவிட்டீர்கள். :-)

அதே போல் குற மின் கொடி என்று சொல்லியிருக்கிறார். வள்ளியெனும் குறமகளாகிய மின்னல் கொடியை என்று பொருள். அங்கே கொடி என்பதனை மட்டும் கொண்டு மிக அருமையாக வேல் தாங்கிய வீரனைக் கொம்பாக்கிவிட்டீர். :-)

பூதரன் என்றால் பூமியை ஆள்பவன் - அரசன் என்ற பொருள் வரும். இங்கே குண பூதரன் என்கிறார்; இதற்கு நற்குணங்கள் என்னும் நிலத்தைத் தாங்குபவனே; ஆள்பவனே என்றும் பொருள் சொல்லலாமா?

said...

இராகவன்,
அருமையான பதிவு.
நன்றி.

said...

// Thekkikattan said...
ராகவன்,

//ஆகையால்தால் அவர் அப்பர். நாமெல்லாம் லோயர்.//

இவ்வளவு பெரிய சீரியஸ் விசயம் சொல்லும் போதும் நகைச்சுவை உணர்வு ;-) குட். //

நன்றி நன்றி....அல்வா சாப்புடும் போது ரெண்டு காராபூந்தியக் கடிச்சிக்கிறதில்லையா...அப்படித்தான் இது.

// நிறையெ உங்கள் பதிவுகளை தவறவிட்டிருப்பேன் என்று நினைக்கிறேன். "தோண்டுதல்" வேணும் சீக்கிரம். //

தோண்டுங்க. தோண்டுங்க. எதுவும் பிடிச்சிருந்தாலும் பிடிக்கலைன்னாலும் வெளிப்படையாச் சொல்லுங்க.

said...

// குமரன் (Kumaran) said...
தமிழில் வைதாரையும் வாழவைக்கும் வள்ளல் புகழ் என்றென்றும் எம்மொழியிலும் சொல்லி மகிழவேண்டும். வைதால் அதனைத் தமிழில் வையலாம்; புகழ எந்த மொழியில் புகழ்ந்தால் என்ன? இல்லையா இராகவன்? :-) //

அதிலென்ன ஐயம் குமரன். நமக்குத் தமிழ் தெரிகிறது. கூறுகிறோம். ஆனால் இறைவன் அனைவருக்கும் பொதுவானவன். அவரவர் மொழியில் அவரவர்க்குப் பிடித்த வகையில் வணங்குவதில் தவறேயில்லை. மொழிப் பாகுபாடு நாம் பார்க்கலாம். அவன் பார்ப்பதில்லை. தமிழரிடம் தமிழில் பாடச் சொல்லிக் கேட்டவன், நிச்சயமாக ஒவ்வொரு மொழியிலும் பாடச் சொல்லிக் கேட்டிருப்பான். ஐயமில்லை.

// தொண்டர் தம் பெருமையைத் தொட்டுச் சென்றிருக்கிறீர்கள். இன்னும் விரித்துக் கூறியிருக்கலாம். //

கூறியிருக்கலாம்தான். கந்தரநுபூதியை விரித்துச் சொல்லச் சொல்ல சொல்லிக் கொண்டே போகலாம். நம்மறிவுக்கு எட்டிய அளவிற்குத்தானே சொல்லவும் முடியும்.

// உழவாரப்பணி என்றால் சிவாலயங்களில் மட்டுமே அப்பர் பெருமான் முட்செடிகளையும் களைகளையும் களைந்தார் என்று எண்ணியிருந்தேன். இன்று தான் தெளிந்தேன் - அவர் சமூகப் பணியையும் உழவாரப்பணியாகச் செய்தார் என்று. //

அது சமூகப்பணிதான் குமரன். அதில் சந்தேகமென்ன!

//வேலனைக் கொம்பாகவும் வள்ளியைக் கொடியாகவும் கொண்டு அருமையான ஒரு உவமையை இந்தப் பாடலில் கொண்டுவந்துவிட்டீர்கள். நன்றாக இருக்கிறது. //

நான் எங்க கொண்டு வந்தேன். அருணகிரி சொன்னதச் சொன்னேன். அவ்வளவ்வுதானே.

said...

//நன்றி நன்றி....அல்வா சாப்புடும் போது ரெண்டு காராபூந்தியக் கடிச்சிக்கிறதில்லையா...அப்படித்தான் இது.//

ஹா...ஹா... :-) வும்மை நினைத்தால் எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. நீவீர் கொடுக்கும் உதாரணம் அது சொல்லப்படும் விதம், அருமையிலும் அருமை...

said...

அருமையான ஆன்மீக மணம் கமழும் விளக்கங்கள்!

பூதரனுக்கு நீங்கள் சொன்ன பொருளும் நன்றாகவே இருப்பினும், குமரன் சொன்னது போல, "இப்பூவுலகையே தன் ஆளுகையில் வைத்திருப்பவன்" என்னும் பொருள்தான் பொருத்தமானது.
கங்காதரன், பரணீதரன், வித்யாதரன் போல போதரன்.

அதே சமயம், 'குற மின் கொடி' எனப் பிரிப்பதை விட நீங்கள் சொல்லிய வண்ணம் குறமின்[குறம்+இன்=குறவர் குலத்தின்] கொடி[தழைக்க வந்த கொடியாகிய வள்ளி] என்பது இன்னும் அழகாக இருக்கிறது.

ஒரு நவரச விருந்து இருக்கிறது இந்தப் பதிவில்.

said...

// பாலசந்தர் கணேசன். said...
எங்கையா கத்துகிட்டீங்க இந்த சரக்கையெல்லாம்? (யாவை மரியாதை குறைவாக எண்ண வேண்டாம். அது ஆச்சரியத்தை குறிக்கிறது.) //

நான் கத்துக்கிறதா.....எனக்குத் தெரிஞ்சதெல்லாம் அந்த ஆண்டவன் எனக்குக் கொடுத்தது. அவ்வளவுதான்.

said...

// குமரன் (Kumaran) said...
இராகவன், 'வேட்டவன்' என்றால் 'வேட்கை கொண்டவன்' என்று பொருள். கந்தன் வேடுவன் வடிவில் வந்ததை இங்கே பொருத்தமாக வேட்டவன் - வேட்டுவன் என்ற ஒலி ஒற்றுமையினால் கொண்டுவந்துவிட்டீர்கள். :-) //

வேட்கை கொண்டவன் வேட்டவனா!! ம்ம்ம்ம்....தெரியவில்லை. இந்தப் பொருள் எனக்குத் தோன்றவேயில்லை. வேட்டவன் என்றால் வேட்டை கொண்டவன் என்ற பொருளில் நான் கொண்டேன். வெறும் ஒலிக்குறிப்பினால் அல்ல.


// அதே போல் குற மின் கொடி என்று சொல்லியிருக்கிறார். வள்ளியெனும் குறமகளாகிய மின்னல் கொடியை என்று பொருள். அங்கே கொடி என்பதனை மட்டும் கொண்டு மிக அருமையாக வேல் தாங்கிய வீரனைக் கொம்பாக்கிவிட்டீர். :-) //

கொம்பும் கொடியும் சேர்ந்தால்தானே மலரும் மலரும். நமது வாழ்க்கையும் மலரும்.

// பூதரன் என்றால் பூமியை ஆள்பவன் - அரசன் என்ற பொருள் வரும். இங்கே குண பூதரன் என்கிறார்; இதற்கு நற்குணங்கள் என்னும் நிலத்தைத் தாங்குபவனே; ஆள்பவனே என்றும் பொருள் சொல்லலாமா? //

பூதரன்....பூமியை ஆள்பவன்....சொல்லலாம். நற்குணங்கள் என்னும் நிலம்...சரி....நற்குணங்களை ஏன் நிலம் என்று சொல்ல வேண்டும்? அதற்கு ஏதும் தொடுப்பு இல்லையே!

said...

// வெற்றி said...
இராகவன்,
அருமையான பதிவு.
நன்றி. //

நன்றி வெற்றி. அடிக்கடி இந்தப் பக்கம் வாங்க.

said...

// SK said...
அருமையான ஆன்மீக மணம் கமழும் விளக்கங்கள்!

பூதரனுக்கு நீங்கள் சொன்ன பொருளும் நன்றாகவே இருப்பினும், குமரன் சொன்னது போல, "இப்பூவுலகையே தன் ஆளுகையில் வைத்திருப்பவன்" என்னும் பொருள்தான் பொருத்தமானது.
கங்காதரன், பரணீதரன், வித்யாதரன் போல போதரன்.

அதே சமயம், 'குற மின் கொடி' எனப் பிரிப்பதை விட நீங்கள் சொல்லிய வண்ணம் குறமின்[குறம்+இன்=குறவர் குலத்தின்] கொடி[தழைக்க வந்த கொடியாகிய வள்ளி] என்பது இன்னும் அழகாக இருக்கிறது.

ஒரு நவரச விருந்து இருக்கிறது இந்தப் பதிவில். //

வாங்க SK. நீங்க இந்தப் பதிவைப் படித்து மகிழ்ந்தது பெருமகிழ்ச்சி அளிக்கிறது.

குணபூதரனுக்குக் குமரனிடம் ஒரு கேள்வி கேட்டிருக்கிறேன். நீங்களும் அதற்கு விடை சொல்லலாம்.

said...

//குணபூதரனுக்குக் குமரனிடம் ஒரு கேள்வி கேட்டிருக்கிறேன். நீங்களும் அதற்கு விடை சொல்லலாம்.//


அரசன், நல்லரசன்
சேகரன், குண சேகரன்
மங்கை, குணமங்கை
பாண்டியன், குணபாண்டியன், நற்குண பாண்டியன், சற்குண பாண்டியன்

இவை போல,
பூதரன், குணபூதரன்

மனிதர்களுக்குத்தான் நற்குணம், சற்குணம், தீக்குணம் என்றெல்லாம்.
இவன் நமக்கெல்லாம் மேலே என்பதால், குணபூதரன் மட்டுமே,
நல்லது, கெட்டது என்று பிரித்துப் பார்க்காமல்!

said...
This comment has been removed by a blog administrator.
said...

கோவி.கண்ணன், பெரிய பெரிய விஷயங்களைக் கேட்கின்றீர்கள். எனக்குத் தெரிந்தவைகளைச் சொல்கிறேன். உங்கள் மின்னஞ்சல் முகவரியைத் தாருங்களேன்.

said...

ஆனால் அவரே செய்தார். ஆகையால்தால் அவர் அப்பர். நாமெல்லாம் லோயர். காந்தியடிகள் தம்முடைய கழிப்பறையைத் தாமே செய்து வந்தார். அது பெரியவர்கள் செயல். அந்தச் செயல்களிலிருந்து நாமும் பாடம் கற்று வாழ்ந்தால் அன்றி, நம்முடைய வாழ்க்கையில் எந்த பயனும் இருக்காது. இல்லையென்றால் எல்லாரையும் போல நமது வாழ்வும் முடிந்து போகும். அடியார்கள் புகழ் போல நின்று நிலைக்காது.//

அருமை ராகவன்..

கை சரியாயிருச்சா..

said...
This comment has been removed by a blog administrator.
said...

இறைவனது திருவடிகளையே சதம் என்று நம்பி அதனை பற்றிகொள்ளும் எண்ணம் அறியாமையினால் இல்லாமல் தனது வாழ்வு முடிந்துவிடுமோ என்று கவலைப் படத்தேவையில்லாத அருணகிரியார் கவலைப்படுகிறார். கவலைப்படவேண்டிய நான் (நாம்) அதைப்பற்றி கவலைப்படாமல் இருக்கிறேன்(றோம்) தி ரா ச

said...

//தமிழில் வைதாரையும் வாழவைக்கும் வள்ளல் புகழ் என்றென்றும் எம்மொழியிலும் சொல்லி மகிழவேண்டும். //

எவ்வளவு சத்யமான உண்மை!
எல்லாமே அருமையான பதிவுகள்.