Tuesday, September 26, 2006

35. மங்குவதெல்லாம் எவை?

மங்குவது எது? தங்கம் மங்கும். வெள்ளி மங்கும். பட்டை தீட்டாத வைரமும் மங்கும். புழங்காமல் ஓரத்திலே வைத்திருந்தால் வெங்கலப் பாத்திரமும் மங்கும். அவற்றைத் துலக்கினால் ஒளி வீசிப் பிரகாசிக்கும். ஒவ்வொன்றைத் துலக்கவும் ஒவ்வொரு பொருள். வெங்கலப் பாத்திரத்திற்குப் புளியும் சாம்பலும். வைரத்திற்கு இரும்பு அல்லது வைர அரம். வெள்ளிக்கு தூயவெண் திருநீறு. தங்கத்திற்கு பன்னீரில் நனைத்த பட்டு அல்லது பருத்தித் துணி. இவைகள் எல்லாம் உயிரற்ற பொருட்கள். உயிருள்ள மனிதர்களுக்கு எவையெல்லாம் மங்கும். எவையெல்லாம் மனிதனிடத்தில் தங்குமோ, அவையெல்லாம் மங்கும். அறிவு மங்கலாம். புகழ் மங்கலாம். செல்வம் மங்கலாம். நற்பண்புகள் மங்கலாம். குலப் பெருமை மங்கலாம்.

இவையெல்லாம் மங்குவதற்கு பல காரணங்கள் உண்டு. ஆனால் அருணகிரிக்கு இருந்தது ஒரே காரணம்தான். அதைக் கந்தரலங்காரத்தில் இப்படிச் சொல்கிறார்.
"கண்டுண்ண சொல்லியர் மெல்லியர் காமக் கலவிக்கள்ளை
மொண்டுண்டு அயர்கினும்!
".
"கற்கண்டுச் சுவையொடு சொல்லி அழைக்கும் மெல்லிய பூவையரின் காமக் கலவிக் கள்ளினை மொண்டு உண்டு அயர்ந்தேன்," என்று நயமாக இயம்புகிறார். கலவிக் கள்ளைப் பருகினேன் என்று சொல்ல வில்லை. அள்ளியள்ளி மொண்டு உண்டாராம். அடேயப்பா! எப்படி அநுபவித்திருக்கிறார். அதன் பலன் என்ன? முதலில் அறிவு மங்கியது. கொண்டிருந்த புகழ் மங்கியது. பிறகு கையிலிருந்த செல்வமெல்லாம் மங்கியது. நற்பண்புகள் மங்கின. குலப் பெருமை மங்கியது.

அப்படி மங்கிய அனைத்தும் முன்னிலும் பிரகாசமாக சுடர் விட்டது எங்ஙனம்? முருகப் பெருமானின் திருவருளால். அந்த நன்றியை இங்கே மறக்காமல் சொல்கிறார் அருணகிரி. "முருகா, சிங்காரம் செய்து கொண்ட பெண்களோடு இன்பம் துய்க்கும் தீய வழக்கங்களால் புகழும் அருளும் மங்காமல் காத்தருள்வாய்!" ஏற்கனவே சொன்னதுதான். சிங்கார மடந்தையர் போக வேண்டும் என்று கேட்கவில்லை. சிங்கார மடந்தையர் தீநெறி போக வேண்டும் என்றுதான் அருணகிரி கேட்கிறார்.

சிங்கார மடந்தையர் தீநெறி போய்
மங்காமல் எனக்கு வரம் தருவாய்
சங்க்ராம சிகாவல சண்முகனே
கங்கா நதி பால கிருபாகரணே

சங்க்ராம என்றால் போர்திறம் மிகுந்த என்று பொருள். "செருப்புக்கு வீரரை சென்று உழக்கும் வேலன்!" என்று விளையாட்டாக சொல்லியிருக்கின்றார் காளமேகம். செரு என்றால் போர்க்களம். செருவில் புகும் வீரர்களை வெல்லும் வேலன் என்பது பொருள். சிகாவல என்றால் மயிலேறி வலம் வருகின்ற என்று பொருள். சங்க்ராம சிகாவல சண்முகனே! பொருள் புரிகின்றதல்லவா. கங்காநதி பால கிருபாகரனே என்பது இறுதியடி. கங்கை இங்கே ஏன் வந்தது? மங்கியதெல்லாம் துலக்க நீர் வேண்டுமல்லவா! கங்கை இந்தியர்களால் புனிதமானதாகப் போற்றப்படும் நதி. வற்றாத ஜீவநதி. அதனால்தான் கங்கா நதி பால கிருபாகரனே என்று செய்யுளை முடிக்கிறார்.

பக்தியுடன்,
கோ.இராகவன்

15 comments:

said...

//பக்தியுடன்,
கோ.இராகவன் //

இடிக்குதே!!

said...

ஜிரா...!
ப்ரொபைல் புகைப்படத்தில் நடிகர் மாதவன் மாதிரி படு ஸ்மார்டாக இருகிங்க !
:))

பி.கு : இந்த கட்டுரையில் தலைப்பை தவிர வேறொன்றும் படிக்கவில்லை !
:)))

said...

// தம்பி said...
//பக்தியுடன்,
கோ.இராகவன் //

இடிக்குதே!! //

அடடே! பாக்கல தம்பி. கொஞ்சம் தள்ளி உக்காந்துக்கிருங்களேன். :-)

said...

// கோவி.கண்ணன் [GK] said...
ஜிரா...!
ப்ரொபைல் புகைப்படத்தில் நடிகர் மாதவன் மாதிரி படு ஸ்மார்டாக இருகிங்க !
:)) //

நன்றி கோவி. நல்ல வேளை மாதவன் இதப் படிக்கலை. இல்லைன்ன கோவிச்சுக்கிறப் போறாரு :-)

// பி.கு : இந்த கட்டுரையில் தலைப்பை தவிர வேறொன்றும் படிக்கவில்லை !
:))) //

ரொம்ப நன்றிங்க :-)

said...

இராகவன்,
நல்ல பதிவு. ஆனால் ஒரு சின்னக் குழப்பம். புரிய வைப்பீர்கள் என நம்புகிறேன்.

//
கலவிக் கள்ளைப் பருகினேன் என்று சொல்ல வில்லை. அள்ளியள்ளி மொண்டு உண்டாராம். அடேயப்பா! எப்படி அநுபவித்திருக்கிறார். அதன் பலன் என்ன? முதலில் அறிவு மங்கியது. கொண்டிருந்த புகழ் மங்கியது. பிறகு கையிலிருந்த செல்வமெல்லாம் மங்கியது. நற்பண்புகள் மங்கின. குலப் பெருமை மங்கியது.//

இக் கருத்தில்தான் எனக்குக் குழப்பம். அய்யன் வள்ளுவனோ எல்லா அறத்திலும் சிறந்த அறம் இல்லறம் என்கிறார்.
"இயல்பினான் இல்வாழ்க்கை வாழ்பவன் என்பான்
முயல்வாருள் எல்லாம் தலை"

ஆக கலவி என்பது இல்வாழ்க்கையில் ஓர் அங்கம். அப்படியிருக்க கலவியினால் அறிவு, புகழ் எல்லாம் மங்கும் என்பது குழப்பமாகவுள்ளதே. அருணகிரியார் தவறான கலவிக் கள்ளைப் பற்றிக் குறிப்பிடுகிறாரா?[பலருடன் கலவு இன்பம் பெறுதல்] அல்லது முற்றாகவே கலவி இன்பத்தைத் துறக்கச் சொல்கிறாரா?

"ஊடுதல் காமத்திற்கு இன்பம் அதற்கின்பம்
கூடி முயங்கப் பெறின்"
என்று அறிவுரை சொல்கிறாரே செந்நாப்போதர்.

பி.கு:- இராகவன், சொன்னால் நம்பமாட்டீங்கள். ஆனால் உண்மை. நண்பர் கோ.க சொன்னது போல் நானும் உங்கடை படத்தைப் பார்த்துவிட்டு நடிகர் மாதவன் சாயல் தெரிவதாகத்தான் நினைத்தேன். படத்தைப் பார்த்ததுமே பல குமரிப் பெண்கள் உங்களைத் தொடர்பு கொண்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

said...

சங்க்ராம சிகாவல சண்முகனே
கங்கா நதி பால கிருபாகரணே

அருமையாக பொருளுரைத்தீர்கள் ராகவன்.இந்த கோணத்திலும் பார்க்கலாம் என்று நினைக்கிறேன்
சூரபத்மனுடன் ஏற்ப்பட்ட போரில் அவன் பெற்ற வினோதமன வரத்தின் காரணமாக அவனை சம்ஹாரம் செய்த உடன் ஒருபாதியைசேவற்கொடியாகவும் மறு பாதியை மயிலாகவும் கொண்டு அண்ணன்னுடன் நடந்த போட்டியில் மயில் வாகனத்தில் ஏறிக்கொண்டு உலகை வலம் வந்தான் அந்த ஆறுமுகன்.வடமொழியில் சிகி என்றால் மயில்.கங்கை நதிக்கரையில் உள்ளவர்களால் பாலன் என்று அழைக்கப்படுகிறவன் கருணைக்கு இருப்பிடமானவன்

said...

இராகவன்.

நன்கு பொருள் சொல்லியிருக்கிறீர்கள். திராச இன்னும் சுவையைக் கூட்டியிருக்கிறார்.

கோவி.கண்ணன் ஐயாவும் வெற்றியும் நாங்கள் முன்பு சொன்னதையே சொல்லியிருக்கிறார்கள். உங்களைப் பார்க்கும் தோறும் 'மாதவன்' என்று அழைக்கும் பெண் இன்னும் உங்களுடன் வேலை செய்கிறாரா? இல்லை வேறு இடத்திற்கு மாற்றிவிட்டார்களா?

said...

// வெற்றி said...

இராகவன்,
நல்ல பதிவு. ஆனால் ஒரு சின்னக் குழப்பம். புரிய வைப்பீர்கள் என நம்புகிறேன்.

//
கண்டிப்பாக வெற்றி. எனக்குத் தெரிந்ததைச் சொல்கிறேன். இல்லையென்றால் குமரன், எஸ்.கே, தி.ரா.ச எல்லாரும் உதவிக்கு வருவார்கள்.

//// கலவிக் கள்ளைப் பருகினேன் என்று சொல்ல வில்லை. அள்ளியள்ளி மொண்டு உண்டாராம். அடேயப்பா! எப்படி அநுபவித்திருக்கிறார். அதன் பலன் என்ன? முதலில் அறிவு மங்கியது. கொண்டிருந்த புகழ் மங்கியது. பிறகு கையிலிருந்த செல்வமெல்லாம் மங்கியது. நற்பண்புகள் மங்கின. குலப் பெருமை மங்கியது.//

இக் கருத்தில்தான் எனக்குக் குழப்பம். அய்யன் வள்ளுவனோ எல்லா அறத்திலும் சிறந்த அறம் இல்லறம் என்கிறார்.
"இயல்பினான் இல்வாழ்க்கை வாழ்பவன் என்பான்
முயல்வாருள் எல்லாம் தலை"

ஆக கலவி என்பது இல்வாழ்க்கையில் ஓர் அங்கம். அப்படியிருக்க கலவியினால் அறிவு, புகழ் எல்லாம் மங்கும் என்பது குழப்பமாகவுள்ளதே. அருணகிரியார் தவறான கலவிக் கள்ளைப் பற்றிக் குறிப்பிடுகிறாரா?[பலருடன் கலவு இன்பம் பெறுதல்] அல்லது முற்றாகவே கலவி இன்பத்தைத் துறக்கச் சொல்கிறாரா?

"ஊடுதல் காமத்திற்கு இன்பம் அதற்கின்பம்
கூடி முயங்கப் பெறின்"
என்று அறிவுரை சொல்கிறாரே செந்நாப்போதர். //

வெற்றி, அருணகிரி கலவியைத் தவறு என்று சொல்லவில்லை. சிங்கார மடந்தையர் தீநெறி போய் என்றுதான் வேறொரு இடத்தில் சொல்கிறார். சிங்கார மடந்தையர் போக வேண்டும் என்று சொல்லவில்லை. சிங்கார மடந்தையரிடம் போய் எப்பொழுதும் கிறங்கிக் கிடக்கும் தன்னுடைய தீநெறி போக வேண்டும் என்று கேட்கிறார். அதாவது பட்டினி கிடப்பதல்ல நோன்பு என்று தெளிவாகப் புரிந்தவர் அவர். கண் முன்னே ஒன்றும் இல்லாமல் பட்டினி கிடப்பது பெருமை அல்ல. ஆனால் அனைத்தும் இருந்தும் அவைகளைத் தீண்டக்கூடாது என்ற மனவுறுதி இருக்கிறதே....அதுதான் பெருமை. பெண்களின் உடையின் மீது பலர் குற்றம் சொல்வர். அது மனதைப் படுத்துகிறது என்று. ஆனால் அருணகிரி என்ன சொல்கிறார்? கண் முன்னே பொருள் காவலின்றிக் கிடந்தாலும் திருடா உள்ளமே தேவை என்ற கொள்கை உடையவர். எல்லாவற்றையும் மூடி மூடி வைத்து விட்டு தனது மனம் கட்டுப்பாட்டில் உள்ளது என்று ஏமாற்றிக் கொள்கிறவர் அல்ல அவர். உள்ளம் பண்பானால் கண் முன்னே கிடந்தாலும் உள்ளம் கெடாது என நினைப்பவர். அதைத்தான் வேண்டும் என்கிறார்.

காமத்தைத் தவறு என்று சொல்லவில்லை. ஆனால் காமமே அனைத்தும் என்ற எண்ணம்தான் தவறு என்கிறார்.

// பி.கு:- இராகவன், சொன்னால் நம்பமாட்டீங்கள். ஆனால் உண்மை. நண்பர் கோ.க சொன்னது போல் நானும் உங்கடை படத்தைப் பார்த்துவிட்டு நடிகர் மாதவன் சாயல் தெரிவதாகத்தான் நினைத்தேன். படத்தைப் பார்த்ததுமே பல குமரிப் பெண்கள் உங்களைத் தொடர்பு கொண்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. //

இதுவரைக்கும்.........ஆச்சரியப்படாமலிருக்க ஒன்றும் நடக்கவில்லை என்பதே ஆச்சரியமான உண்மை. :-)

said...

// தி. ரா. ச.(T.R.C.) said...

சங்க்ராம சிகாவல சண்முகனே
கங்கா நதி பால கிருபாகரணே

அருமையாக பொருளுரைத்தீர்கள் ராகவன்.இந்த கோணத்திலும் பார்க்கலாம் என்று நினைக்கிறேன்
சூரபத்மனுடன் ஏற்ப்பட்ட போரில் அவன் பெற்ற வினோதமன வரத்தின் காரணமாக அவனை சம்ஹாரம் செய்த உடன் ஒருபாதியைசேவற்கொடியாகவும் மறு பாதியை மயிலாகவும் கொண்டு அண்ணன்னுடன் நடந்த போட்டியில் மயில் வாகனத்தில் ஏறிக்கொண்டு உலகை வலம் வந்தான் அந்த ஆறுமுகன்.வடமொழியில் சிகி என்றால் மயில்.கங்கை நதிக்கரையில் உள்ளவர்களால் பாலன் என்று அழைக்கப்படுகிறவன் கருணைக்கு இருப்பிடமானவன் //

நல்ல விளக்கம் தி.ரா.ச. மேலே வெற்றி ஒரு கேள்வி கேட்டிருக்கிறார். அதற்கு உங்கள் கருத்து (மறுமொழி) என்ன? ஆவலாக இருக்கிறேன்.

said...

வெற்றி. பிறிதோரிடத்தில் அருணகிரியாரின் பாடல்களைப் பற்றிப் படித்த போது படித்ததைச் சொல்கிறேன். எங்கெல்லாம் பெண்களைப் பற்றி அருணகிரியார் பாடுகிறாரோ அங்கெல்லாம் பொது மகளிரைப் பற்றியே பாடுகிறார் என்று பொருள் கொள்ள வேண்டும். அப்படிப் பொருள் கொண்டால் எந்த முரண்பாடும் தோன்றாது. இங்கேயும் பொது மகளிரைத் தான் சிங்கார மடந்தையர் என்று சொல்லி அவர்கள் காட்டும் தீநெறி போய் நான் மங்காமல் எனக்கு அருள் புரிவாய் என்கிறார்.

said...

இராகவன், குமரன்!
நீங்கள் இருவரும செய்துவரும் பணி மிகவும் மேன்மையானது. தொடருங்கள்.
என் ஐயத்தை தெளிவுபடுத்தியமைக்கு மிக்க நன்றிகள்.

said...

"செருப்புக்கு வீரரை சென்று உழக்கும் வேலன்!"

களம் புகும் வீரரை அருமையான விளக்கம் ஆமாம் கெட்ட பின்தான் அதிகமானவர்களுக்கு புத்திவரும் போல் உள்ளது.

said...

ராகவன்!

தேவையான பாடல் அருமையான விளக்கம். மேலும் மெருகு சேர்ந்துள்ள குமரன், தி.ரா.ச ஐயா ஆகியோருக்கும் சேர்த்து, பாராட்டுக்களும், நன்றிகளும்.

உங்கள் படம் பற்றிய எனது அபிப்பிராயத்தை, எனது பதிவுக்கு தாங்கள் அளித்த பின்னூட்டத்திற்கான பதிலில் கூறியுள்ளேன்.:)))

நன்றி!

said...

// ENNAR said...
"செருப்புக்கு வீரரை சென்று உழக்கும் வேலன்!"

களம் புகும் வீரரை அருமையான விளக்கம் ஆமாம் கெட்ட பின்தான் அதிகமானவர்களுக்கு புத்திவரும் போல் உள்ளது. //

என்ன செய்வது என்னார். பட்டால்தானே நமக்கெல்லாம் புரிகிறது. பசிக்கும் பொழுதுதானே அழத்தெரிகிறது குழந்தைகளுக்கு!

said...

// மலைநாடான் said...
ராகவன்!

தேவையான பாடல் அருமையான விளக்கம். மேலும் மெருகு சேர்ந்துள்ள குமரன், தி.ரா.ச ஐயா ஆகியோருக்கும் சேர்த்து, பாராட்டுக்களும், நன்றிகளும். //

ஊர்கூடி இழுக்கும் தேர். நீங்களும் சேர்ந்துதான். உங்கள் கருத்துகளும் ரசிப்புகளும்தானே ஊக்கம் தருகிறவை.

// உங்கள் படம் பற்றிய எனது அபிப்பிராயத்தை, எனது பதிவுக்கு தாங்கள் அளித்த பின்னூட்டத்திற்கான பதிலில் கூறியுள்ளேன்.:))) //

:-) அங்கேயே வந்து பதில் சொல்கிறேன்.