Monday, November 20, 2006

43. குறியைக் குறியாது

ஆத்திக-நாத்திக வாதங்கள் பல காலங்களாக இருந்து வருகிறது. எது தவறானது? எது சரியானது? இன்னமும் யாரும் பொது முடிவிற்கு வரமுடியவில்லை. நாத்திகர்கள் நாத்திகம் பேசுகின்றார்கள். ஆத்திகர்கள் ஆத்திகம் பேசுகிறார்கள். ஆனால் நமது தமிழ் மண்ணில் ஒரு பழுத்த ஆத்திகர் நாத்திகம் பேசியிருக்கிறார். அதுவும் நாத்திகர்கள் கூட பேச முடியாத அளவிற்கு.

அருணகிரியைத்தான் நான் சொல்கிறேன். மூச்சுக்கு முன்னூறு முறை முருகா முருகா என்று உருகிய அருணகிரிதான் முருகனைக் கும்பிட வேண்டியதில்லை என்று சொல்லியிருக்கிறார். அப்படியானால் எது மெய்?
"ஓல மறைகள் அறைகின்ற ஒன்றது
மேலை வெளியில் படருஞ் சுடர்
" என்கிறார்.

ஓல மறைகள்.....அதாவது இறைவனை ஓலமிட்டுத் தொழுகின்ற மறைகள். மறைகள் என்றால் வேதம். வேதம் என்றால் ரிக்கு, யஜூர், சாம மற்றும் அதர்வண வேதங்களா? அதை நான்மறைகள் என்று தெளிவாகக் குறிப்பிட்டிருப்பாரே!

உலகில் மறைநூல் என்று எவையனைத்தும் கொண்டாடப்படுகின்றனவோ அவையனைத்தையும் பொதுவாகச் சொல்கிறார் அருணகிரி. திருக்குறள், கீதை, பைபிள், குரான், கிரந்த சாகிப் என்று எதை வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளுங்கள். எல்லாம் மறைகள். ஒவ்வொன்றும் ஒவ்வொரு இறைவனைப் பற்றிச் சொல்கின்றன. அப்படி அனைத்து வேதங்களும் ஓலமிட்டுத் தொழுகின்ற இறையவன் யார்? "மேலை வெளியில் ஒளிரும் சுடர்". இதை எந்த மதத்தார் மறுப்பார்.

முருகன் என்றால் திருவரங்கத்தார் ஒப்பார். சரி. துயில்மால் என்றால் வாடிகனில் எடுபடுமா? ஏசு என்றால் அரபு நாடுகளில் ஏற்றுக் கொள்வார்களா? ஆனால் "மேலை வெளியில் ஒளிரும் சுடர்" என்று சொல்லுங்கள். யார் மறுப்பர்.

இதுதான் உண்மையான நாத்திகம். இதைத் தமிழ் என்றோ பேசி விட்டது. இப்படிச் சில நடப்புகளும் பண்புகளும் மதங்களுக்கு அப்பாற்பட்டு வழக்கிலுள்ளன. மதங்களில் தெய்வங்களைக் குறிக்கும் முறைகளும் மாறுபடுகின்றன. சிலை வைப்பர் சிலர். ஏடு வைப்பர் சிலர். சிலையில்லை ஏடில்லை திசையென்பர் சிலர். எல்லாம் சரிதான். ஆனால் அனைவரும் பொதுவாக ஏற்றுக் கொண்ட ஒன்று குறியீடு.

வேல் என்பது தமிழ்க் குறியீடு. வடக்கில் சூலாயுதமும் ஓங்காரமும். கிருத்துவர்களுக்குச் சிலுவைக் குறி. முகமதியர்களுக்கு பிறைச்சந்திரன். ஆக குறியீடு என்பது மதங்களுக்குப் பொதுவான பண்பாகக் காணப்படுகிறது.

தியானம் செய்கின்றவர்களைப் பார்த்தால் மனதில் அந்தக் குறியை நினைத்து மற்ற எண்ணங்களை ஒடுக்குவார்கள். அதாவது எல்லாவற்றையும் நினைப்பதை விட ஒன்றை மட்டும் நினைப்பது. இது இரண்டாம் நிலை. அப்படியானால் முதல் நிலை என்ன? எந்தக் குறியையும் நினைக்காமல் மனத்தை ஒடுக்குவது.

பத்து செங்கல் அடுக்கி வைத்திருக்கிறது. வலு இல்லாதவன் கையில் சுத்தியலை வைத்து உடைப்பான். வலு உள்ளவன் வெறுங்கையாலேயே உடைப்பான். ஆனால் எப்படி உடைத்தாலும் கல் உடையத்தான் செய்யும்.

குறியைக் குறியாது குறித்து அறியும்
நெறியைத் தனி வேலை நிகழ்த்திடலும்
செறிவற்று உலகோடு உரை சிந்தையும் அற்று
அறிவற்று அறியாமையும் அற்றதுவே


குறியை நினைத்துக் கொண்டு மனத்தை ஒடுக்குகின்றவர்கள் அந்தக் குறியை நினைத்துக் கொண்டிருக்கிறார்கள் அல்லவா. அது முழுமையான ஒடுக்கமாகாது. ஒன்றையும் நினைக்காமல் மனம் ஒடுங்குவதே சிறந்தது.

இப்பொழுது முதல் வரியைப் படியுங்கள். "குறியைக் குறியாது குறித்தறியும் நெறியை!" புரிகிறதா? எந்தக் குறியினையும் மனதில் குறியாது ஆனால் இறையருளைக் குறித்து அறியும் நெறியைத்தான் அருணகிரிநாதர் கேட்கிறார்.

அந்த நெறி எப்படிக் கிட்டும்? "குறியைக் குறியாது குறித்து அறியும் நெறியைத் தனி வேலை நிகழ்த்திடலும்!". முருகா! உனதருளால் அல்லவா அது கிட்டும்.

அப்படி ஒரு நெறி தெரிந்தபின் அருணகிரியின் அநுபவம் என்ன? "செறிவற்று உலகோடு உரை சிந்தையும் அற்று அறிவற்று அறியாமையும் அற்றதுவே!"

இருப்பவை அனைத்தும் அற்று போகும் நிலை. அது அனைத்தையும் கடந்த நிலை. சச்சிதானந்த நிலை. சத்து+சித்து+ஆனந்தம் = சச்சிதானந்தம். உலகம் மறந்து போயிற்று. பேச்சில்லை. எண்ணமில்லை. அறிவிற்கும் அறியாமைக்கும் கூட அங்கு இடமில்லை. எல்லாம் மறந்த ஆனந்த நிலை.

பக்தியுடன்,
கோ.இராகவன

18 comments:

said...

//ஆனால் "மேலை வெளியில் ஒளிரும் சுடர்" என்று சொல்லுங்கள். யார் மறுப்பர்.

இதுதான் உண்மையான நாத்திகம்.//

ஜிரா,

நாத்திகம் என்றால் கடவுள் இல்லை என்ற கொள்கை அல்லவா? "மேலை வெளியில் ஒளிரும் சுடர்" என்று சொல்லும் பொழுது, அது கடவுள் மறுப்பாக தோன்றவில்லையே. அது உருவகப் படுத்துதலைத்தானே எதிர்கின்ற மாதிரித் தெரிகிறது.

கொஞ்சம் அதிக விளக்கம் தேவை. ப்ளீஸ்.

said...

அன்பு இராகவன்,
இதையே திருமூலரும்:
"குறியறி யார்கள் குறிகாண மாட்டார்" என்றார்.
குறியாகிய சீவனாகிய உயிரை அறியாதார், நமக்குக் குறியாகிய (சிவத்தை) இறைவனைக் காணமாட்டார்கள்.

"குறியாக் குறியினிற் கூடாத கூட்டத்து
அறியா அறிவில் அவிழ்ந்தேக சித்தமாய்
நெறியாம் பராநந்தி நீடருள் ஒன்றுஞ்
செறியாச் செறிவே சிவமென லாமே."

என்றும் கூறுகிறார்.

said...

//முருகன் என்றால் திருவரங்கத்தார் ஒப்பார். .//

இதெல்லாம் பழையபுராணக்கதைகள்!

அரங்கத்தாரில் பலர் உறங்குவானையும் நினைப்பர் அவர் மருமகனையும் ஏற்றித்தொழுவர்.வானாகி மண்ணாகி வளியாகி ஒளியாகி .....தினமும் மனத்தில் ஊறும் வரிகள். சிவபெருமானை ஜோதி வடிவமாகப் பார்த்தல் தான் சொக்கப்பானை கொளுத்துவதின் நோக்கம் என்பார்கள். சொக்கன் சிவபெருமானின் பெயர்.பனைஓலை நட்டு நெடிய பந்தலாய் செய்து அவற்றிடையே வெடிகளை வைத்து சொக்கப்பனை என்று கொளுத்துவார்கள் எல்லா கோயில்களிலும். சொக்கனை எரி நெருப்பு ஜோதியில் பார்ப்பதே இதன் நோக்கம்.
தீப மங்கள ஜோதி நமோ நம!
அடுத்தவாரம்கார்த்திகை தீபம்! அதற்கு ஏற்ற கட்டுரை உங்களுடையது!

திருவரங்கப்ரியா(ஷைலஜா)

said...

நல்ல விளக்கம் இராகவன்.

கொத்ஸ். நாத்திகம் பல நிலைகளை உடையது. அதில் ஒரு நிலை சமயங்கள் சொல்லும் கடவுளர்களை அறிவென்றும் ஒளியென்றும் உருவருவாய் சொல்வது. கடவுளே இல்லை என்னும் இறை மறுப்பும் நாத்திகத்தில் அடக்கமே. இராகவனின் விளக்கமும் இதுவாகவே இருக்கும் என்று எண்ணுகிறேன். வேறுபட்டால் கற்றுகொள்கிறேன்.

ஆயிரம் தெய்வங்கள் உண்டென்று தேடி
அலையும் அறிவிலிகாள்
பல்லாயிரம் வேதம் அறிவொன்றே தெய்வம்
உண்டாம் எனல் கேளீரோ?

- பாட்டுக்கொரு புலவன்

said...

எத்தனை பெயர்கள் ஷைலஜா உங்களுக்கு? திருவரங்கப்ரியாவும் அதில் ஒன்றா? நல்லது. ;-)

said...

தியானம் செய்கின்றவர்களைப் பார்த்தால் மனதில் அந்தக் குறியை நினைத்து மற்ற எண்ணங்களை ஒடுக்குவார்கள். அதாவது எல்லாவற்றையும் நினைப்பதை விட ஒன்றை மட்டும் நினைப்பது. இது இரண்டாம் நிலை. அப்படியானால் முதல் நிலை என்ன? எந்தக் குறியையும் நினைக்காமல் மனத்தை ஒடுக்குவது

இதே மாதிரி நிலையை வள்ளலாரும் விவரிக்கின்றார்.

வானத்தின் மீது மயிலாடக் கண்டேன் மயில் குயில் ஆச்சுதடி. என்றும் பின்னர் சாதி சமய சருக்கை விட்டு ஒழித்தேன் அருள் ஜோதியைக் கண்டேனடி என்றும் கூறுகிறார்.
யோக்த்தால் இறைவனை அடைய விரும்பும் முனிவர்கள் முதலில் மயில் போன்ற அழகான பல வண்ணங்களைக் கொண்ட ஒரு உருவத்தை மனதில் உருவகப்படுத்திக் கொண்டு ஆரம்பிப்பார்கள்.
யோகனிலையின் மிக உயரிய நிலையை அடைந்தவுடன் அதுவே சிறியதாகி,பலவ்ண்ணங்கள்(பல உருவங்கள்)போய் ஒரு சிறிய கருமைக் குயிலாக மாறிவிடும்.பின்னர் அதுவே சாதி மற்றும் சமயத்தையும் விட்டு விட்டால் அருள் ஜோதியாகவே மாறிவிடும்

நல்ல விளக்கம் கொடுத்துள்ளீர்கள் ஜி.ரா அவர்களே அதுவும் உங்களுக்கே உரிய சொல் விளையட்டுடன்

said...

ஜிரா

நல்ல தமிழ் விளக்கம்!
"குறியைக் குறியாது குறித்து அறியும்
நெறி", அப்படியே வள்ளலார் சுவாமிகள் மற்றும் சித்தர்கள் நெறி!
"உளன் என இலன் என இவை குணம் உடைமையில்,
உளன் இரு தகைமையுடன் ஒழிவு இலன் பரந்தே" என்று நம்மாழ்வாரும் இந்த நெறி குறித்து தீந்தமிழில் பாடுகிறார்!

கொத்ஸ், குமரன் சொல்வது போல், நாத்திக வாதத்தில் பல வகை; கடவுள் இல்லை என்பது மட்டும் அல்ல; கடவுள் பற்றி எதுவுமே சொல்லாது, கர்மம், யாகம் மட்டுமே போதும் எனப்படும் பூர்வ மீமாம்சையைக் கூட நாத்திகத்தில் சேர்ப்பதுண்டு!

ஷைலஜா said...
//முருகன் என்றால் திருவரங்கத்தார் ஒப்பார்.//அரங்கத்தாரில் பலர் உறங்குவானையும் நினைப்பர் அவர் மருமகனையும் தொழுவர்//

அடியேனும் அவ்வாறே ஷைலஜா!
இப்படிக்கு,
திருமலைப்ரியன் (kannabiran,ravi shankar) :-))

said...

குறியைக் குறியாது விளக்கம் மிக நன்றாக உள்ளது

said...

குறியைக் குறியாது விளக்கம் மிக நன்றாக உள்ளது

said...

கொத்ஸுக்கு வந்த ஐயம் எனக்கும் வந்தது. இன்னும் உங்களிடமிருந்தும் பதில் வருமென நினைக்கிறேன்.

said...

அன்பு தருமி,
நீண்ட நாட்களுக்குப் பின் சந்திக்கிறோம்.

ஆத்திகம் = (இறை)உண்டென்பது
நாத்திகம் = (இறை)இல்லையென்பது.

இதில் எதில் உள்ளது?, எதில் இல்ல? என்னும் உட்பிரிவுகளுக்குள் சென்று ஆய்ந்தோமானால் விடை:
"அவரவருக்கு அதது"


உண்மையான ஆத்திகம் பேசினால் அது நாத்திகமாகத் தோன்றும் சிலருக்கு.

இருளில் நடக்கும் இருவரில் ஒருவன் மரத்தின் வேர்கண்டு பாம்பென அஞ்சுகிறான். மற்றொருவன் பாம்பாகவே இருப்பினும் வேர் என்று ஒதுங்கிச் செல்கிறான்.

நோக்கம் எப்படியோ நோக்கும்(பார்வை) அப்படியே!

இது பின்னூட்டமானதால் விரிவஞ்சி விடுத்தனம்.

said...

// ஜிரா,

நாத்திகம் என்றால் கடவுள் இல்லை என்ற கொள்கை அல்லவா? "மேலை வெளியில் ஒளிரும் சுடர்" என்று சொல்லும் பொழுது, அது கடவுள் மறுப்பாக தோன்றவில்லையே. அது உருவகப் படுத்துதலைத்தானே எதிர்கின்ற மாதிரித் தெரிகிறது.

கொஞ்சம் அதிக விளக்கம் தேவை. ப்ளீஸ். //

கொத்ஸ்...தாமதமாக வந்து சொல்வதற்கு மன்னிக்கவும். ஆனால் அதிலும் ஒரு நன்மை. குமரனும் வெட்டியான் ஐயாவும் சிறப்பாகச் சொல்லியிருக்கிறார்கள். குமரனுக்கும் ஞானவெட்டியான் ஐயாவிற்கும் நன்றி.

கொத்ஸ்...ஆத்திகமும் நாத்திகமும் வெவ்வேறல்ல. இரண்டும் ஒன்றுதான். உண்மையான ஆத்திகமும் நாத்திகமும் ஒரே இடத்தில்தான் தொடங்குகின்றன. ஆனால் அந்த நிலையை அடைவது அத்தனை எளிதன்று.

அதுவுமில்லாமல் இந்த வரிகள் உருவகப்படுத்துவதை எதிர்க்கும் வரிகள் அல்ல. எப்படிப் போனாலும் இப்படித்தான் வரனும் என்று சொல்லும் வரிகள். ஒரு எடுத்துக்காட்டு சொல்கிறேன் கேளுங்கள். சென்னையிலிருந்து விமானத்தில் ஏறி அமெரிக்கா போகிறவர்கள் இரண்டு வழியில் போகலாம். பாகிஸ்தான், ஐரோப்பா வழியாகப் போகலாம். அல்லது சிங்கப்பூர் ஜப்பான் வழியாகப் போகலாம். இத்தனை நாடுகளின் வழியாகப் போனாலும் போகும் வானம் ஒன்றுதான் அல்லவா. அதுதான் இங்கும் சொல்லப் படுகிறது.

said...

// ஷைலஜா said...
//முருகன் என்றால் திருவரங்கத்தார் ஒப்பார். .//

இதெல்லாம் பழையபுராணக்கதைகள்! //

ஷைலஜா நீங்கள் சொல்வதை மறுப்பதற்கில்லை. ஒரு எடுத்துக்காட்டிற்காக அப்படிச் சொன்னேன்.

said...

// தி. ரா. ச.(T.R.C.) said...
தியானம் செய்கின்றவர்களைப் பார்த்தால் மனதில் அந்தக் குறியை நினைத்து மற்ற எண்ணங்களை ஒடுக்குவார்கள். அதாவது எல்லாவற்றையும் நினைப்பதை விட ஒன்றை மட்டும் நினைப்பது. இது இரண்டாம் நிலை. அப்படியானால் முதல் நிலை என்ன? எந்தக் குறியையும் நினைக்காமல் மனத்தை ஒடுக்குவது

இதே மாதிரி நிலையை வள்ளலாரும் விவரிக்கின்றார்.

வானத்தின் மீது மயிலாடக் கண்டேன் மயில் குயில் ஆச்சுதடி. //

தி.ரா.ச, உங்களிடம் ஒரு விண்ணப்பம். இந்தப் பாடலும் அதற்கு விளக்கமும் நீங்கள் எழுதத்தான் வேண்டும். :-)

said...

// Dharumi said...
கொத்ஸுக்கு வந்த ஐயம் எனக்கும் வந்தது. இன்னும் உங்களிடமிருந்தும் பதில் வருமென நினைக்கிறேன். //

தருமி, எனக்கு முந்தியே ஞானவெட்டியான் ஐயாவும் விளக்கம் கொடுத்து விட்டார்.

நாழி உப்பு எடுத்துக்கோங்க. நாழி அப்பு (தண்ணி) எடுத்துக்கோங்க. ரெண்டையும் கலந்தா? ரெண்டு நாழித்தண்ணியா கிடைக்கும்? இல்லையே. ஒரு நாழிதான் மிச்சம். அப்படித்தான் ஆத்திகமும் நாத்திகமும்.

said...

உலகில் மறைநூல் என்று எவையனைத்தும் கொண்டாடப்படுகின்றனவோ அவையனைத்தையும் பொதுவாகச் சொல்கிறார் அருணகிரி. திருக்குறள், கீதை, பைபிள், குரான், கிரந்த சாகிப் என்று எதை வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளுங்கள்.

ராகவா!!
இது தான் உண்மை!!!!தெய்வம் பல பல சொல்லிப் பகைத் தீயை வளர்ப்பர் மூடர்!!
நாமாவது தெளிவோம்.
நன்றி

said...

என்கெங்கு காணிலும் பாராசக்தி...

காக்கைச் சிறகினிலே நந்தலாலா...

//குறியைக் குறியாது குறித்தறியும் நெறி...//
சொல்ல சொல்ல விளங்குதய்யா...

நன்றி!

said...

யாருடைய அறிவு தெய்வம்?