Tuesday, November 28, 2006

44. எதைத் தட்டினால் எது கிடைக்கும்

பொருட்காட்சிகளுக்குப் போகின்றவர்கள் பஞ்சு மிட்டாய் பார்த்திருப்பீர்கள். வாங்கியும் உண்டிருப்பீர்கள். அந்தப் பஞ்சு மிட்டாய் செய்வதைப் பார்ப்பதும் ஒரு அழகு. சுற்றிக் கொண்டிருக்கும் இயந்திரத்தில் சிறிதளவு நிறமூட்டப்பட்ட சர்க்கரையைப் போடுவார்கள். அந்த இயந்திரம் போட்ட சிறிதளவு சர்க்கரையைப் பகுத்து மெல்லிய பஞ்சுகளாக மெத்தென விரிக்கும். அதைக் குச்சியில் சுற்றி பெரிதாகத் தருவார்கள். அதை அப்படியே வாங்கி அமுக்கினால் மிகவும் சிறியதாகப் போய்விடும். ஆக சிறிய அளவு சர்க்கரைதான் பெரிய பஞ்சு மிட்டாயானது. அதே பெரிய பஞ்சுமிட்டாயை அமுக்கினால் சிறிய அளவுள்ள அடர்ந்த சர்க்கரைக் கட்டியாகிறது.

அது போலத்தான் கந்தரநுபூதியும். முதலில் அநுபூதிக்குத் தயாராக நாற்பது பாடல்கள் வரை சொல்கிறார் அருணகிரி. நாற்பது பாடல்களிலும் நமக்கு ஓரளவு அநுபூதியைப் பற்றித் தெரிந்து விடுகிறது. உடனே இந்தப் பாடலில் அநுபூதியைச் சொல்லி விடுகிறார். பிறகு பத்து பாடல்களில் அநுபூதியின் பெருமைச் சொல்லி விடுகிறார். விரிவாகச் சொல்லி விளங்க வைக்கிறார் செந்தமிழ் முனி.

தூசாமணியும் துகிலும் புனைவாள்
நேசா முருகா நினது அன்பருளால்
ஆசாநிகளம் துகளாயின பின்
பேசா அநுபூதி பிறந்ததுவே


கந்தரநுபூதியில் மிகவும் சிறந்த பாடல் எதுவென்று கேட்டால், இந்தப் பாடலைச் சொல்லலாம். கடவுள் வாழ்த்தோடு சேர்த்து ஐம்பத்து இரண்டு பாடல்கள். அந்த ஐம்பத்திரண்டு பாடல்களிலும் சொன்னதை இந்த ஒரு பாடலில் அடக்கி விட்டார் அருணகிரி நாதர்.

முதலில் அநுபூதி என்றால் என்ன? இறைவனோடு ஒன்று படுதல் என்று பொருள். சிவனோடு ஒன்றாகுதல் சிவாநுபூதி. சக்தியோடு ஒன்றாகுதல் சாக்தாநுபூதி. இகபர சுகம் வேண்டுவோர் சிவாநுபூதியும் சாக்தானுபூதியும் பெற வேண்டும். கலியுகத்தில் இரண்டையும் பெறுவதற்கு மிகவும் பட வேண்டாமென்று இகம் பரம் என்ற இரண்டு சுகங்களும் கந்தரநுபூதி வழியாக வடிவேலர் வழங்குகிறார். ஆங்கிலத்தில் Two-In-One என்று சொல்கிறார்களே. தொலைபேசவும் வேண்டும். புகைப்படம் பிடிக்கவும் வேண்டும். அதற்கு முன்பெல்லாம் இரண்டு கருவிகள் இருந்தன. இப்பொழுதும் இருக்கின்றன. ஆனாலும் இப்பொழுது ஒரு கருவியிலேயே இரண்டையும் செய்ய முடிகிறதல்லவா. அது போலத்தான்.

சரி. கந்தரநுபூதி என்றால் என்னவென்று விளங்கிற்று. அது எப்படிக் கிடைக்கும்? மஞ்சளைப் பொடியாக்கினால் மஞ்சட் பொடி கிடைக்கும். அரிசியைப் பொடியாக்கினால் அரிசி மாவு கிடைக்கும். அது போல ஆசையென்னும் சங்கிலியைப் பொடியாக்கினால் கந்தரநுபூதி கிடைக்கும்.

"ஆசாநிகளம் துகளாயின பின் பேசா அநுபூதி பிறந்ததுவே!" நிகளமென்றால் சங்கிலி. "ஆசையே துன்பத்திற்குக் காரணம்" என்பது புத்த பெருமான் வாக்கும் கூட. ஆசை என்னும் சங்கிலி நம்மைப் பல துன்பங்களோடு இணைத்திருக்கிறது. அந்தச் சங்கிலிகள் அறுந்து விழுந்தால் இறைவனோடு ஒன்று பட முடியும்.

பெரும் யானையானாலும் சங்கிலியால் கட்டி விட்டால் நடக்க முடியுமா? நல்லவனாக இருந்தால் சொர்க்கம் கிடைக்கும். ஆனால் அநுபூதி கிட்டாது. நல்லவனாக இருந்த புண்ணியம் தீர்ந்ததும் மீண்டும் மண்ணுலகம் வர வேண்டும். அநுபூதி எய்தி விட்டால் இறைனோடு ஒன்றாக இருப்பதே தன்மை. அங்கே பேச்சு மூச்சு கிடையாது. நித்யானந்தம். அதாவது குன்றாத இன்பம். அதைத்தான் "பேசா அநுபூதி பிறந்தது" என்கிறார் அருணகிரி.

அநுபூதி எப்படிக் கிடைக்குமென்று தெரிந்தது. எதனால் கிடைக்கும்? அதையும் அருணகிரி சொல்லி விடுகிறார். மறைத்து வைக்க ஒன்றுமில்லை. "தாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்" என்பதே அந்த அன்பரது எண்ணம்.

தூசாமணி என்றால் தூசு இல்லாத மணி. மணியில் தூசு இருந்தால் ஒளி தெரியாது. தூசில்லாத மணியே ஒளிரும். அழுக்கான ஆடை அணிவது நன்றன்று. நீரிருக்குமானால் கந்தையானாலும் கசக்கிக் கட்ட வேண்டும். அப்படிக் குறையில்லாத மணிகளையும் தூய ஆடைகளையும் அணிந்த மலைக் குறத்தி வள்ளியின் நேசனான முருகனின் அன்பாலும் அருளாலும் மட்டுமே அநுபூதி கிட்டும். தமிழ்க் குறத்திகள் தூய ஆடை அணிகலன்களை அணிந்தவர்கள். குறிஞ்சி நிலத்தவர். இன்றைக்கு ஊருக்குள் காணும் குறத்தியர் தமிழ் பேசுகின்றவர்கள் கிடையாது. அது குறையன்று. அவர்கள் உண்மையான மலைக் குறவர்களன்று என்பதைச் சொல்வதற்காக அப்படிச் சொல்லப்பட்டுள்ளது.

பக்தியுடன்,
கோ.இராகவன்

17 comments:

said...

நல்ல விளக்கம் இராகவன்.

அரியைப் பொடியாக்காதீர்கள். அரிசி மாவு கிட்டாது. :-) எழுத்துப்பிழை எனத் தெரியும். ஆனாலும் ஒரு நொடி மனம் துணுக்குற்றதென்னவோ உண்மை தான். :-)

said...

நல்ல விளக்கம் இராகவன். தொடர்ந்து பயின்று வருகிறேன். நீங்கள் சைவத்திலும் இரவிசங்கரும் கண்ணனும் வைணவத்திலும் பாடல்கள் விளக்கம் உரையும் கொடுப்பது வாசகர்களுக்கு நன்றி.

said...

நல்ல விளக்கம் ஜிரா.

(இந்த புகைப்படம் நல்லாவே இல்லை. மாத்துங்க.)

said...

ஜிரா

சின்ன வயசுல நிறைய பொருட்காட்சி போவீங்க போல இருக்கே; அப்படியே போனாலும் பஞ்சு மிட்டாய்க் கடையில் தான் ரொம்ப நேரம் டேரா போல இருக்கே:-))

அறியத் தயார் ஆவதற்கு 40 பாடல்கள்!
அறிவதற்கோ 10 பாடல்கள் மட்டும் தான்!
Project Managementஇல் well designed half done என்பார்கள். அதை எப்படி அழகா நடைமுறைக்கு கொண்டு வருகிறார் பாருங்க அருணகிரி!
ஆண்டாளும் திருப்பாவையில் இதே போல் தான் செய்கிறாள்! பக்குவப்படுத்த 20 பாசுரம்! சமைக்க, ருசிக்க பத்தே பாசுரம் தான்!

பேசா அநுபூதி பிறக்க எம்பெருமான் அருளட்டும்!

said...

ராகவா!
அருமையான "பேசாவனுபூதி" விளக்கம்!
நன்றி!
என் தளம் ஓர் அன்பர் சரி செய்து தந்துவிட்டார்.
யோகன் பாரிஸ்

said...

இராகவன்,
அருமையான விளக்கம். உங்களின் ஒவ்வொரு பதிவைப் படிப்பதன் மூலமும் நானும் தமிழ்ப்பண்டிதர் ஆகிவிடுவேன் விரைவில்.

உங்கள் தமிழ்ப்பணி தொடர வாழ்த்துக்கள்.

நன்றி.

said...

நன்றி ராகவன்.....ரொம்ப நல்லா ஆரம்பித்தூள்ளீர்.....வாழ்த்துக்கள்.

said...

அநுபூதி விளக்கம் மிகவும் அருமை!

said...

அன்பு இராகவா,
//குன்றாத இன்பம். அதைத்தான் "பேசா அநுபூதி பிறந்தது" என்கிறார் அருணகிரி.//

பக்தி மார்க்கத்தில் பேசா அநுபூதிக்குத் தங்களின் விளக்கம் அருமை. இருப்பினும், ஞான மார்க்கத்தில் அது "அசபா மந்திரம்" என்பதையும் தொட்டுச் சென்றிருக்கலாமே! எனும் ஆதங்கம் என் மனதில் எழுகிறது.

இயன்றவரை, நம் மக்களுக்கு இப்படி ஒன்றுள்ளது என்பதை தெரிவித்தல் நலம். இல்லையெனில், அவை வழக்கொழிந்துபடும் என்பதே எம் கருத்து.

said...

ராகவன், நல்ல விளக்கங்கள்.
( நீங்களாக எழுதுவதா அல்லது மண்டபத்தில் யாராவது எழுதித்தருவதா? :) )

எல்லாம் சேர்த்து ஒரு PDF மாதிரி கொடுத்தால் ரொம்ப பயனுள்ளதாக இருக்கும்.

மற்ற பதிவுகளையும் படிக்கிறேன்.

நன்றி!

said...

// குமரன் (Kumaran) said...
நல்ல விளக்கம் இராகவன்.

அரியைப் பொடியாக்காதீர்கள். அரிசி மாவு கிட்டாது. :-) எழுத்துப்பிழை எனத் தெரியும். ஆனாலும் ஒரு நொடி மனம் துணுக்குற்றதென்னவோ உண்மை தான். :-) //

திருத்தி விட்டேன் குமரன். துணுக்குறக் காரணம் என்ன? பொடியாகக் கூடிய ஜிரா அரியைப் பொடியாக்க முடியுமோ என்றா? :-)

said...

// பத்மா அர்விந்த் said...
நல்ல விளக்கம் இராகவன். தொடர்ந்து பயின்று வருகிறேன். நீங்கள் சைவத்திலும் இரவிசங்கரும் கண்ணனும் வைணவத்திலும் பாடல்கள் விளக்கம் உரையும் கொடுப்பது வாசகர்களுக்கு நன்றி. //

நன்றி பத்மா அர்சிந்த். சண்முகச் செல்வர் என்றார் தி.ரா.ச. ரவியோ சண்மதச் செல்வராகத் திகழ்கிறார். சொல்ல வேண்டுமா என்ன!

// இலவசக்கொத்தனார் said...
நல்ல விளக்கம் ஜிரா.

(இந்த புகைப்படம் நல்லாவே இல்லை. மாத்துங்க.) //

மாத்தீட்டேன் கொத்ஸ். இதுவும் சரியில்லைன்னா சொல்லுங்க. வேற படம் இருக்கு.

said...

// kannabiran, RAVI SHANKAR (KRS) said...
ஜிரா

சின்ன வயசுல நிறைய பொருட்காட்சி போவீங்க போல இருக்கே; அப்படியே போனாலும் பஞ்சு மிட்டாய்க் கடையில் தான் ரொம்ப நேரம் டேரா போல இருக்கே:-)) //

ஹி ஹி கண்டுபிடிச்சிட்டீங்களே.

// அறியத் தயார் ஆவதற்கு 40 பாடல்கள்!
அறிவதற்கோ 10 பாடல்கள் மட்டும் தான்!
Project Managementஇல் well designed half done என்பார்கள். அதை எப்படி அழகா நடைமுறைக்கு கொண்டு வருகிறார் பாருங்க அருணகிரி!
ஆண்டாளும் திருப்பாவையில் இதே போல் தான் செய்கிறாள்! பக்குவப்படுத்த 20 பாசுரம்! சமைக்க, ருசிக்க பத்தே பாசுரம் தான்! //

திருப்பாவைச் சுவையைப் பருகத் திகட்டுமா ரவி!

// அநுபூதி பிறக்க எம்பெருமான் அருளட்டும்! //

அந்த அருள் கிட்டுமானால் பெரும்பேறு அதுவே.

said...

// Johan-Paris said...
ராகவா!
அருமையான "பேசாவனுபூதி" விளக்கம்!
நன்றி!
என் தளம் ஓர் அன்பர் சரி செய்து தந்துவிட்டார்.
யோகன் பாரிஸ் //

நன்றி யோகன் ஐயா. உங்கள் தளம் சரியாகி விட்டதல்லவா...அடுத்தடுத்து பதிவுகளை எதிர்பார்க்கிறோம். :-)

// வெற்றி said...
இராகவன்,
அருமையான விளக்கம். உங்களின் ஒவ்வொரு பதிவைப் படிப்பதன் மூலமும் நானும் தமிழ்ப்பண்டிதர் ஆகிவிடுவேன் விரைவில்.

உங்கள் தமிழ்ப்பணி தொடர வாழ்த்துக்கள்.

நன்றி. //

நன்றி வெற்றி. தமிழ்ப் பண்டிதன் பட்டம் விரைவிலேயே கிட்ட எனது வாழ்த்துகள்.

said...

// Mathuraiampathi said...
நன்றி ராகவன்.....ரொம்ப நல்லா ஆரம்பித்தூள்ளீர்.....வாழ்த்துக்கள். //

மதுரையம்பதிக்கு நன்றி பல. உங்கள் வாழ்த்துகள் ஊக்கங்கள்.

// SK said...
அநுபூதி விளக்கம் மிகவும் அருமை! //

நன்றி SK. உங்கள் திருப்புகழ் விளக்கங்களைக் கொஞ்ச நாட்களாகக் காணவில்லையே! என்னவாயிற்று?

said...

// ஞானவெட்டியான் said...
அன்பு இராகவா,

பக்தி மார்க்கத்தில் பேசா அநுபூதிக்குத் தங்களின் விளக்கம் அருமை. இருப்பினும், ஞான மார்க்கத்தில் அது "அசபா மந்திரம்" என்பதையும் தொட்டுச் சென்றிருக்கலாமே! எனும் ஆதங்கம் என் மனதில் எழுகிறது.

இயன்றவரை, நம் மக்களுக்கு இப்படி ஒன்றுள்ளது என்பதை தெரிவித்தல் நலம். இல்லையெனில், அவை வழக்கொழிந்துபடும் என்பதே எம் கருத்து. //

உண்மைதான் ஐயா. ஆனால் அசபா மந்திரம் குறித்த ஞானம் இருந்திருந்தால் சொல்லியிருப்பேனே. முருகன் மீது வைத்த அன்பைத் தவிர நான் என்ன அறிவேன் எடுத்துச் சொல்ல! நீங்கள்தான் இதற்கு விளக்கம் சொல்ல வேண்டும். காத்திருக்கிறேன் அறிந்து கொள்ள.

said...

// BadNewsIndia said...
ராகவன், நல்ல விளக்கங்கள்.
( நீங்களாக எழுதுவதா அல்லது மண்டபத்தில் யாராவது எழுதித்தருவதா? :) ) //

என்னங்க இப்பிடிக் கேட்டுட்டீங்க. அருணகிரின்னு ஒருத்தரு ஏற்கனவே எழுதுனதுதான். அத இப்பிடி எடுத்துச் சொல்லும் போது நம்மளோடது மாதிரி இருக்குது பாத்தீங்களா :-))))

// எல்லாம் சேர்த்து ஒரு PDF மாதிரி கொடுத்தால் ரொம்ப பயனுள்ளதாக இருக்கும்.

மற்ற பதிவுகளையும் படிக்கிறேன்.

நன்றி! //

அனைத்து பாடல்களுக்கும் விளக்கம் முடிந்த பின் தருகிறேன்.