Monday, December 04, 2006

45. தலை மேல் வைத்துக் கொண்டாடி

ஒருவர் மிகவும் துன்பத்திலிருந்தார். பெரும் பசி. வீட்டிலோ துணைவியாரை எண்ணிக் கை பற்றாததால் எண்ணிக்கை கூடியிருந்தது. வீட்டிலும் அனைவருக்கும் துன்பம். என்ன செய்வதென்றே புரியவில்லை. யாரிடம் கேட்பதென்றும் புரியவில்லை.

தெய்வாதீனமாக ஒருவர் உதவினார். முதலில் எல்லாரும் சாப்பாடு போட்டு....துணிமணி கொடுத்து.....பிறகு ஒரு வேலையும் கொடுத்தார். தடுமாறிக் கொண்டிருந்த குடும்பம் ஒரு நிலைக்கு வந்தது. உதவி பெற்றவர் நல்லவர். செய்நன்றி மறவாத உத்தமர். என்ன செய்வார்? உதவி செய்தவரைப் புகழ்ந்து பேசுவார். அவரால்தான் வாழ்வு வந்தது என்பதைத் தயங்காமல் சொல்லுவார்.

இப்படி அவர் பேசுவதையும் சொல்வதையுங் கண்டு மற்றவர்கள் கேலி பேசினார்கள். "பாரிவனை. முதலாளியைத் தலைக்கு மேல் வைத்துக் கொண்டாடுகிறான்!" என்று முதுகுக்குப் பின் கிண்டலடித்தார்கள். அவன் கண்டுகொள்ளவேயில்லை. நேர்மையாக உழைத்து வந்தான்.

நன்றி மறக்கக் கூடாது. உதவி செய்தவரைக் கொண்டாட வேண்டும். அதுவும் தலைக்கு மேல் வைத்துக் கொண்டாட வேண்டும். அதைத்தான் அருணகிரியும் செய்தார்.

எதைத் தலைக்கு மேல் வைத்துக் கொண்டாடினார்? சாடும் தனிவேல் முருகன் சரணம். அப்படியென்றால்? நமக்கு எந்தத் திக்கிலிருந்து துன்பம் வருமென்று தெரியாது. ஆனாலும் நாம் எதிர்பாராத நேரத்தில் எதிர்பாராத விதத்தில் துன்பம் வந்து விடுகிறது. அந்தத் துன்பங்களைச் சாடுகின்ற தனிவேல் முருகனுடைய சரணங்களை, அதாவது திருவடிகளை தலைக்கு மேல் வைத்துக் கொண்டாடுகிறார்.

சாடும் தனிவேல் முருகன் சரணம்
சூடும்படி தந்தது சொல்லுமதோ
வீடும் சுரர் மாமுடி வேதமும் வெங்
காடும் புனலும் கமழும் கழலே


"தனிவேல் முருகன் சரணம் சூடும்படி தந்தது சொல்லுமதோ!" முருகனுடைய திருவடிகளை நாம் நினைப்பதற்கான கருணையும் முருகன் தந்ததே. நாம் மிகவும் மதிக்கும் ஒருவரின் கையெழுத்து வேண்டும். அதை நாமாக அடைய முடியுமா? அவருடைய அனுமதியின்றி சம்மதமின்றி கையெழுத்தைப் பெற முடியுமா? அது போலத்தான் இறைவனை வழிபடுவதற்கும் அவனது கருணை வேண்டும்.

அப்படித்தான் தலைமேல் திருவடிகளை வைத்துக் கொண்டாட கருணை செய்த முருகனுடைய அன்பைச் சொற்களில் அடக்க முடியாமல் திண்டாடுகிறார் அருணகிரி. "சூடும்படி தந்தது சொல்லுமதோ!" எப்படிச் சொல்வது? ஆனாலும் சொல்ல வேண்டும் என்பதால் இப்படிச் சொல்கிறார்.

ஒரு பட்டிக்காட்டுத் தாயார். காட்டிலும் மேட்டிலும் வேலை செய்து பிள்ளைகளைக் காப்பாற்றினார். பிள்ளைகள் பெரிதாயின. படுத்திருக்கும் தாயாரின் கால்களைப் படித்து விடுகிறான் மூத்த மகன். காய்ந்து கிடக்கும் தாயாரின் கால்களைப் பார்த்து கண்ணீர் வருகிறது. "ஐயோ! அம்மா! காட்டிலும் மேட்டிலும் நடந்தாயே! முள்ளும் கல்லும் உன் கால்களை எப்படிப் படுத்தியிருக்கின்றன. எங்களுக்காகச் செய்தாய். அப்படி எங்களுக்காக உழைத்த இந்தக் கால்களை பிடிப்பதற்க்கு என்ன தவம் செய்திருக்க வேண்டும். இந்தக் கருணையை நான் என்ன சொல்வேன்."

இங்கே அருணகிரி மகன். முருகன் தாயார். "வீடும் சுரர் மாமுடி வேதமும் வெங்காடும் புனலும் கமழும் கழலே!" வீடு என்றால் வீடுபேறு. வீடுபேறு தரவல்லவது முருகன் திருவடி. சுரர் மாமுடி - தேவர்களுடைய மணிமுடிகள். சூரனைக் காப்பாற்றி அவனிடமிருந்து தேவர்களைக் காப்பாற்றியதற்கு நன்றியாக தேவர்களின் மணிமுடியை முருகன் பாதத்தில் இட்டார்கள். அல்லது மணிமுடி இறைவன் திருவடிகளில் படுமாறு விழுந்து வணங்கினார்கள். வள்ளி நாச்சியாருக்கு அருள் செய்து அதன் வழியாக நமக்கு அருள் செய்ய காட்டிலும் மேட்டிலும் அருவிககரையும் நடந்தார் முருகன். "அருவித் துறையோடு இதனோடு திரிந்தவனே" என்று ஒரு பாடல் முன்னம் பார்த்தோம்.

இப்படி காட்டிலும் மேட்டிலும் நடந்து வள்ளி நாச்சியாருக்கு அருள்செய்ததும், நன்றியாக எப்பொழுதும் தேவர்கள் விழுந்து தொழுவதும், வீடுபேற்றைத் தரவல்லதுமான உனது திருவடிகள் எல்லாத் துயர்களையும் தீர்க்க வல்லவை. அந்தத் திருவடிகளை என் தலை மேல் வைத்துக் கொண்டாட கருணை செய்தாயே! அந்தக் கருணையை எப்படிச் சொல்வது?

அன்புடன்,
கோ.இராகவன்

12 comments:

said...

இந்த பாடலுக்கு இவ்வளவு அழகான விளக்கத்தை ஜிரா மூலமாக அறியத் தந்தாயே, இந்த கருணையை என்னவென்று சொல்வது?!

நன்றி ஜிரா.

said...

மிகவும் அருமையாக இருந்தது இராகவன். நன்றி!

said...

ஜிரா,

விளக்கிச் சொல்லிய விதம் நன்று !

said...

வீட்டிலோ துணைவியாரை எண்ணிக் கை பற்றாததால் எண்ணிக்கை கூடியிருந்தது.

ஆஹா என்ன சொல்விளையாட்டு!
ஞான சக்தியே நமக்கு நம் ஆற்றலை உணர்வித்திடும் குரு. அந்த குருவே முருகன்.அதனால்தான் அவனது சரணங்களை தலையில் சூடும்படி அருள் தந்தது என்கிறார் அருணகிரியார்.மிக நல்ல விளக்கம் அளித்துள்ளீர்கள் ஷண்முகச்செல்வரே.

said...

//வீடும் சுரர் மாமுடி வேதமும் வெங்
காடும் புனலும் கமழும் கழலே//

ஜிரா அழகாய்ச் சொன்னது போல், முருகப் பெருமானின் திருவடிகள், காடு மேடில் நமக்காகத் திரிந்தவை, தேவர்கள் தலையால் வணங்கியவை, வீடுபேறு தருபவை!
ஆயின் இங்கு கூடவே "வேதமும்" என்கிறாரே!
அதன் விளக்கம் சொல்லவில்லையே!

சதா சர்வ காலமும் வேதங்கள் என்ன செய்யும்? இறைவனைத் துதிக்கும்! இப்படித் துதித்துத் துதித்து நா மணக்கும்! இப்படி வேத வாசம் வீசும், (வேத மணம் கமழும்) கழல்கள் என்பதனால் தான் "கமழும் கழலே" என்றார்!

அதில் வேறு சில வாசங்களும் வீசுகின்றன!
வெங் காடு வாசம், குளிர் புனல் (நீர்) வாசம், தேவர்களின் மகுட வாசம் (தலையின் தைலங்களால்);
இப்படி மணம் கமழும் கழல் ஒரே ஒரு வாசத்தை மட்டும் மறக்கச் செய்கிறது! எதை?
பூர்வ ஜென்ம வாசத்தை!! எப்படி?

அந்தக் கழலே வீ்டுபேறாக மணப்பதால், அதை பற்றும் நமக்கு, மற்ற எல்லா வாசங்களும் நீங்கி விடுகின்றன! அதையே சூடுவோம்; பற்றுவோம்!

ஜிரா, இப்படித் தான் அடியேன் யோசனை செல்கின்றது! சரி தானே?

said...

அலுவலகத்தில் இருந்து கிளம்பும் போது இந்தப் பதிவைப் படித்து முடித்தேன் இராகவன். என்ன அருமையான சொற்றொடர் இந்தப் பாட்டில் இருக்கிறது?! முருகன் சரணம் சூடும்படி தந்தது சொல்லுமதோ என்ற வரியைப் படித்துவிட்டு மனம் அந்த வரியிலேயே நீண்ட நேரம் மயங்கிக் கிடந்தது. ஆகா. என்ன அருமையான வரி இது. அருமை. மிக அருமை.

உங்கள் விளக்கமும் மிக நன்றாக இருக்கிறது. ஒரு நொடி தயங்கி இரண்டாவது முறையாகப் படிக்க வைத்த எண்ணிக்கை சொற்விளையாட்டு உங்கள் தனிமுத்திரை கொண்ட விளையாட்டு. :-)

முருகன் தனிவேல் முனி நம் குரு என்று அருள் கொண்டு அறியார் அறியும் தரமோ என்ற சொற்றொடரும் மனதில் ரீங்காரம் இட்டுக் கொண்டிருந்தது. அருமையான ஒரு அனுபவத்தைத் தந்ததற்கு மிக்க நன்றி.

said...

கொத்ஸ் சொன்னதை அப்படியே வழி மொழிகிறேன். :-)

said...

// இலவசக்கொத்தனார் said...
இந்த பாடலுக்கு இவ்வளவு அழகான விளக்கத்தை ஜிரா மூலமாக அறியத் தந்தாயே, இந்த கருணையை என்னவென்று சொல்வது?!

நன்றி ஜிரா. //

// குமரன் (Kumaran) said...
கொத்ஸ் சொன்னதை அப்படியே வழி மொழிகிறேன். :-) //

கொத்ஸ், குமரன்...நான் என்ன சொல்வேன். யாமோதிய கல்வியும் எம்மறிவும் தாமே பெற வேலவர் தந்தினால் இட்ட பதிவுகள் இவை. அனைத்தும் முருகனருள்.

said...

// நாமக்கல் சிபி said...
மிகவும் அருமையாக இருந்தது இராகவன். நன்றி! //

நன்றி சிபி.


// கோவி.கண்ணன் [GK] said...
ஜிரா,

விளக்கிச் சொல்லிய விதம் நன்று ! //

நன்றி கோவி.

said...

// தி. ரா. ச.(T.R.C.) said...
வீட்டிலோ துணைவியாரை எண்ணிக் கை பற்றாததால் எண்ணிக்கை கூடியிருந்தது.

ஆஹா என்ன சொல்விளையாட்டு!
ஞான சக்தியே நமக்கு நம் ஆற்றலை உணர்வித்திடும் குரு. அந்த குருவே முருகன்.அதனால்தான் அவனது சரணங்களை தலையில் சூடும்படி அருள் தந்தது என்கிறார் அருணகிரியார்.மிக நல்ல விளக்கம் அளித்துள்ளீர்கள் ஷண்முகச்செல்வரே. //

நன்றி தி.ரா.ச. அனைத்தும் முருகனருள்.

said...

// அந்தக் கழலே வீ்டுபேறாக மணப்பதால், அதை பற்றும் நமக்கு, மற்ற எல்லா வாசங்களும் நீங்கி விடுகின்றன! அதையே சூடுவோம்; பற்றுவோம்!

ஜிரா, இப்படித் தான் அடியேன் யோசனை செல்கின்றது! சரி தானே? //

ம்ம்ம்...யோசிக்க வைக்கிறீர்கள் ரவி. உங்கள் கருத்தைப் பொருத்திப் பார்த்தேன். பொருத்தமாக இருப்பது போலத்தான் தோன்றுகிறது. சைவப் பெரியவர்கள் வந்தால் விவரம் தெரியலாம்.

வேதம் என்ற சொல்லுக்கு மறை என்றுதானே பொருள். ஆகையால் முருகன் திருவடிகளில் மறைகள் பணியும் என்றுதான் விளக்கம் சொல்ல வேண்டும். எந்த வேதமாக இருந்தாலும் இறைவனைப் பணியும் என்று பொதுவில் பொருள் கொள்ளலாம்.

said...

அழகிய சிறு கதைகளுடன் இதை விளக்கும் தங்கள் பாணி போற்றற்குரியது!

"கால் பாட்டு அழிந்தது இங்கு என் தலை மேல் அயன் கையெழுத்தே!" எனக் கந்தரலங்காரத்தில் அரற்றுகிறார் அருணையார்.

கையெழுத்தே அழிந்தபின், வாசனைகள் ஏது?

எல்லா மறைகளும் இறைவன் திருவடியையே போற்றுவதால் அங்கும் விளங்குவது இத்திருவடிகளே!

உலகிலேயே சிறந்த படைப்பையே அந்த பரம புருஷன் தன் திருவடிகளிலிருந்து பிறப்பித்ததாகத்தானே மறைகளும் துதிக்கின்றன!

முருகனருள் முன்னிற்கும்!

[பி.கு.: கொத்ஸை நானும் வழி மொழிகிறேன்!]