Monday, December 11, 2006

46. கற்கை நன்றே கற்கை நன்றே

நாம் ஒன்றைக் கற்க வேண்டுமென்றால் நல்ல ஆசிரியரைத் தேட வேண்டும். பொல்லாத ஆசிரியரிடம் கற்றாலும் கற்ற கல்வி பயன் தராது.

மாவீரன் கர்ணன். பரசுராமரிடம் போய் கல்வி கற்றான். பிறப்பறியாதவன் அவன். எந்தக் குலத்தைச் சொல்வான்? பரசுராமரும் அவனைச் சீடனாக ஏற்றுக் கொண்டார். எல்லாக் கலைகளையும் கற்பித்தார். கர்ணனும் நல்ல மாணவன். அனைத்தையும் நெறியோடு கற்றான். விதி யாரை விட்டது?

ஒரு நாள் பரசுராமர் கர்ணனின் மடியில் தலை வைத்து உறங்கிக் கொண்டிருந்தார். அப்பொழுது ஒரு வண்டு கர்ணனின் தொடைக் கடித்துத் துளைத்தது. ஆசானின் தூக்கம் கலைந்து விடுமே என்று வலியைப் பொறுத்துக் கொண்டான் கர்ணன். ஆனால் தொடையிலிருந்து பெருகிய குருதி பரசுராமரை எழுப்பி விட்டது.

இவ்வளவு வலியைத் தாங்க வல்லவன் குலத்தால் சத்திரியனாக இருப்பான் என்று சொல்லி சபித்து விட்டார். எப்படி? கற்ற கல்வி உற்ற நேரத்தில் அற்றுப் போகச் சபித்தார். அதனால் போர்க்களத்தில் சரியான நேரத்தில் வித்தையை மறந்தான் கர்ணன். அதனால் வீழ்ந்தான்.

கற்பதும் நல்லவர்களிடமே கற்க வேண்டும். அப்பொழுதுதான் முழுப் பயன் கிடைக்கும். எதையும் நல்வழியில் செய்ய வேண்டும். ஏகலைவனைப் பாருங்கள். துரோணரை மனதளவில் குருவாக வைத்து வில் வித்தை பயின்றான். விளைவு? கைக்கட்டை விரலை இழந்தான். நல்ல ஆசான் கிடைக்கவும் தவம் செய்திருக்க வேண்டும்.

"கற்கை நன்றே கற்கை நன்றே. பிச்சை புகினும் கற்கை நன்றே" என்பது ஔவையார் வாக்கு. பிச்சை எடுத்து அந்தப் பணத்தில் படிக்க வேண்டும் என்பது பொருளல்ல. நமக்கு ஒன்றைத் தெரிந்து கொள்ள வேண்டுமானால் அதைத் தெரிந்தவரிடம் சென்று கெஞ்சிக் கூத்தாடியாவது படிக்க வேண்டும் என்பதே உண்மையான பொருள். அதாவது காலில் விழுந்தாவது சாதித்துக் கொள்ள வேண்டும்.

எல்லா ஆசிரியர்களும் மாணவர்களை அரவணைத்துச் சொல்லிக் கொடுப்பார்களா? சிலர் முரடர். சிலர் முசுடர். சிலர் அசடர். இருந்தும் என்ன? நமக்கு வேலை ஆகிறதே.

ஈயென இரத்தல் இழிந்தன்று அதனெதிர்
ஈயேன் என்றல் அதனினும் இழிந்தன்று
- புறனானூறு
அதாவது, கொடு என்று கேட்பது இழிந்ததாம். அப்படிக் கொடு என்று கேட்ட பின்னும் ஒருவர் கொடேன் என்று சொன்னால் அது இன்னமும் இழிந்ததாம். அப்படி நாம் கேட்டு ஒருவர் இல்லையென்று சொன்னால் நமக்கு எவ்வளவு அவமானம். அருணகிரி மானத்திற்கு அஞ்சியர். மயிர் நீப்பின் உயிர் வாழாக் கவரிமா என்கிறது குறள். நாமும் மானத்திற்கு பயப்பட வேண்டும்.

கரவாகிய கல்வியுளார் கடை சென்று
இரவாவகை மெய்ப்பொருள் ஈகுவையோ
குரவா குமரா குலிசாயுத குஞ்
சரவா சிவயோக தயாபரனே


கரவாகிய கல்வியுளார் - நான்கு பேருக்குக் கற்றுக் கொடுக்க வேண்டும் என்ற நல்ல எண்ணம் இல்லாத கற்றவர்கள். அவர்களிடம் சென்று இரவா வகை வேண்டும். மதியாதார் தலை வாசல் மிதிக்க வேண்டா என்கிறார் ஔவை. அப்படி மதிக்காதவரிடம் கையேந்தி நிற்க வைக்காமல் தானாக வந்து அருளினான் முருகன். இப்பொழுது முதலிரண்டு வரிகளைப் படியுங்கள். நன்றாகப் புரியும்.
கரவாகிய கல்வியுளார் கடை சென்று
இரவா வகை மெய்ப்பொருள் ஈகுவையோ

அடுத்த இரண்டு வரிகளைப் பார்க்கலாம்.
குரவா குமரா குலிசாயுத குஞ்
சரவா சிவயோக தயாபரனே

கந்தரநுபூதியில் கடவுள் வாழ்த்தைச் சேர்த்து மொத்தம் ஐம்பத்திரண்டு பாடல்கள். இந்தப் பாடல்களில் ஆங்காங்கே வள்ளிநாச்சியாரைப் பற்றி வரும்.

பணியா என வள்ளி பதம் பணியும்....
வேடர் குலப்பிடி தோய்........
தூசா மணியும் துகிலும் புணைவாள் நேசா...

ஆனால் தெய்வயானை அம்மையாரைப் பற்றி இந்த ஒரு பாடலில்தான் வருகிறது. அதுகூட மறைபொருளாக. குஞ்சரவா என்று முருகனை அழைப்பதனால் தெய்வயானையைப் பற்றிச் சொல்கிறார்.

குஞ்சரம் என்றால் ஆனை. மாபாரதக் கதையில் தருமன் "அஸ்வத்தாமா ஹதகா குஞ்சரகா" என்று பொய்யுரைத்தான். "கொல்லப்பட்டான் அஸ்வத்தாமன்" என்று சொல்லி சிறிய இடைவெளிக்குப் பிறகு "என்ற ஆனை" என்றார். முழுவதும் கேட்டால் "கொல்லப்பட்டான் அஸ்வத்தாமன் என்ற ஆனை" என்று வரும். அஸ்வத்தாமன் சாகாவரம் பெற்றவன். தன்னுடைய மகன் இறந்து விட்டான் என்று எண்ணி மருகி துரோரணர் போர்க்களத்திலேயே தவத்தில் அமர்ந்து விட்டார். அந்த நேரம் பார்த்து திரௌபதியின் அண்ணன் திட்டத்தும்மன் துரோணரின் கழுத்தை அறுத்து விட்டான்.

குஞ்சரவா என்றால் தெய்வயானையை மணந்தவன் என்று பொருள். குரவா-என்றால் அறிவு மிகுந்தவன் என்று பொருள். குறவா என்றால் மலைக்குறவர். குலிசாயுதம் என்றால் எவரையும் வெல்லும் ஆயுதம். எது அது? ஞானம்தான் எதையும் வெல்லும் ஆயுதம். சிவயோகத்தை கொடுக்க வல்லவர் சிவன். ஆனால் சிவயோக தயாபரனே என்று முருகனைச் சொல்கிறார். எப்படி? தகப்பனார் சொத்து மகனுக்கு வருவது போலத்தான் இதுவும்.

பக்தியுடன்,
கோ.இராகவன்

31 comments:

said...

நல்ல விளக்கங்கள் இராகவன்.

said...

நன்றி குமரன். இந்தப் பதிவைப் பதிக்கும் பொழுது உங்கள் நினைவுதான். :-)

said...

ஏன்? நடுவில் குமரா என்று இந்தப் பாடலில் வந்ததாலா? :-)

said...

படத்திலிருப்பது எந்த இடம்? நன்றாக இருக்கிறது.

ஒவ்வொரு பதிவிற்கும் ஒவ்வொரு படமா? :-)

said...

உங்கள் வலைப்பூக்களையெல்லாம் கூகுள் ரீடரில் இட்டிருப்பதால் நீங்கள் தமிழ்மணத்திற்கு அனுப்புவதற்கு முன்பே கூட சில நேரங்களில் உங்கள் பதிவுகளைப் படித்துவிடுவேன். :-)

said...

ஆகா! அருமையான விளக்கம். படிக்கச் சுவைக்கும் தேன் தமிழில் சொல்லியுள்ளீர்கள்.

இராகவன், உங்கள் போன்ற நல்ல தமிழ்ப்பதிவர்களும் என் போன்ற தமிழ்ப் பாமரர்களுக்கு நல்ல ஆசானாகத் தான் திகழ்கிறீர்கள். உங்களின் ஒவ்வொரு பதிவிலும் இருந்து நான் கற்றுக் கொள்ளும் விடயங்கள் ஏராளம் ஏராளம்.

திருப்புகழைப் படிப்பது இன்பம். அதிலும் பொருள் அறிந்து படிப்பது பேரின்பம்.

நன்றி.

said...

// குமரன் (Kumaran) said...
ஏன்? நடுவில் குமரா என்று இந்தப் பாடலில் வந்ததாலா? :-) //

விடாது அடாது சொல்லும் பேரானாலும் அது முருகனைக் குறிக்கும். ஆனால் இந்த விளக்கத்தை இடுகையில் ஏன் உங்களை நினைத்தேன் என்பதை நீவிர் அறிவீர். நீவிர் அறிவதை நானும் அறிவேன். :-)

// குமரன் (Kumaran) said...
படத்திலிருப்பது எந்த இடம்? நன்றாக இருக்கிறது.

ஒவ்வொரு பதிவிற்கும் ஒவ்வொரு படமா? :-) //

இந்தப் படம் சென்ற ஞாயிறு (டிசம்பர் 3 2006ல்) எடுக்கப்பட்டது. நூர்ஜஹான் தெரியும்தானே. அவரது கல்லறை இது. அவருடைய பெற்றோர்களுக்கு அருகிலேயே அவருக்கும் கல்லறை. பெர்ஷியாவிலிருந்து வந்த பெரிய வீரர் அவர் தந்தை. இது ஆக்ராவில் உள்ளது. தாஜ்மகால் அளவில் பெரியது என்றால் இது அழகில் பெரியது. இதிலிருந்த நுணுக்கங்களைத்தான் பின்னால் தாஜ்மகாலில் பயன்படுத்தியிருக்கிறார்களாம்.

said...

// குமரன் (Kumaran) said...
உங்கள் வலைப்பூக்களையெல்லாம் கூகுள் ரீடரில் இட்டிருப்பதால் நீங்கள் தமிழ்மணத்திற்கு அனுப்புவதற்கு முன்பே கூட சில நேரங்களில் உங்கள் பதிவுகளைப் படித்துவிடுவேன். :-) //

அப்படியா? இது எனக்குத் தெரியவே தெரியாது. அதற்கு எங்கு சென்று பார்க்க வேண்டும்?

said...

வெற்றி said...
ஆகா! அருமையான விளக்கம். படிக்கச் சுவைக்கும் தேன் தமிழில் சொல்லியுள்ளீர்கள்.

இராகவன், உங்கள் போன்ற நல்ல தமிழ்ப்பதிவர்களும் என் போன்ற தமிழ்ப் பாமரர்களுக்கு நல்ல ஆசானாகத் தான் திகழ்கிறீர்கள். உங்களின் ஒவ்வொரு பதிவிலும் இருந்து நான் கற்றுக் கொள்ளும் விடயங்கள் ஏராளம் ஏராளம். //

நன்றி வெற்றி. அனைத்தும் முருகனருளன்றி வேறென்ன. என்னால் ஆவதொன்றுமில்லை. உங்கள் நம்பிக்கையை தொடர்ந்து பாதுகாக்க முயல்கிறேன். தொடர்ந்து படித்து உங்கள் கருத்துகளைக் கூறவும். மின்னஞ்சல் முகவரி கொடுத்திருந்தேனே. கிடைத்ததா?

said...

இராகவன்.

கூகுள் ரீடரைப் பற்றி அறிய இந்தப் பதிவைப் பாருங்கள்.

http://vinmathi.blogspot.com/2006/12/blog-post_116556380962128596.html

said...

உங்களுடைய பதிவுகள் அனைத்தையும் தவறாது படிப்பவர்களில் நானும் ஒருவன்..இதுவரை பின்னூட்டம் இட்டதில்லை..நீங்கள் தரும் விளக்கங்கள் எல்லாம் மிகவும் அருமை!..எத்தனையோ விஷயங்களை அறிய முடிகிறது..தொடர்ந்து எழுதுங்கள். முருகன் அருள் பாடுங்கள்.
நன்றி.

said...

அருமையாக இருந்தது ராகவன்...

//அஸ்வத்தாமன் சாகாவரம் பெற்றவன்.//
அஸ்வத்தாமனக்கு துவாபர யுகத்தில் மரணமில்லையென்று எங்கோ படித்ததாக ஞாபகம்...

said...

பரசுராமன் நல்லாசிரியரே..

மகாபாரத பாத்திரங்களில் கர்ணனைத்தவிர, பீஷ்மரும் துரோணரும் அவரிடம் பயின்றவர்களே.

கர்ணன் சாபம் பெற்றது தவறான ஆசிரியரை தேர்ந்தமையால் அல்ல, பொய்யுரைத்து கல்வி கற்றமையால்.

நல்லாசானிடம் பிச்சையேற்று கற்கலாம், பொய்யுரைத்து கற்கலாமோ..


மற்று துரோணரும் மாபெரும் ஆசான். எத்துணைதான் அவர் தம்மை நியாப்படுத்திடினும் ஏகலைவனுக்கு அவர் செய்தது அடாத காரியம் என்று மகாபாரதம் உரைக்கிறது.
(கட்டைவிரலை வெட்டியதால் கல்வி போனது. இன்றும் ஏகலைவனை தம் முன்னோர் என கொள்ளும் பழங்குடியினர் பழக்கத்தால் கட்டை விரலை பயன்படுத்தாது அம்பு எய்யும் திறத்தவராய் உள்ளனர் என்று படித்துள்ளேன்.)

ஆயின் இவ்விரு ஆசிரியர்களும் கரவாகிய கல்வியராய் நின்றது விதியினால் நடந்தது என்றே பாரதம் சுட்டுகிறது.

சத்ரியனுக்கு சொல்லித்தரமறுத்தவர் பரசுராமர்.
சத்ரியன் அல்லாதவருக்கு சொல்லித்தரமறுத்தவர் துரோணர்.

தம்முடைய மாணாக்கனாக இன்னார்தான் இருக்க வேண்டும் என்று குருவே தேர்ந்தெடுக்கும் காலத்தில் அவர்கள் இருந்ததால் அவர்களுடைய செயல்கள் அவர்களுக்கு சரியென்றே தோன்றியது.

கல்வி கற்க பிறப்பு தடையல்ல என்று நிரூபித்தவர்கள் கர்ணனும் ஏகலைவனும். வஞ்சகத்தால் வீழ்ந்தவர்கள்.


விதியையும் வெல்லும் வேலவன் பிறரிடம் சென்று இராவாவகை செய்யும் தன்மையினன் என்பது அருணகிரியார் பாடலில் சிறப்பாய்க் குறிக்கக் காணலாம்.

மற்று தங்கள் பாடல் விளக்கம் அருமை.

நன்றி.

said...

ஜிரா

நான்கடி அநுபூதியுடன்,
"கற்கை நன்றே", "ஈயென இரத்தல்" என்று கூடவே பல தமிழ்ச் செய்யுள் அடிகளையும் அறிந்து கொண்டோம்;

தெய்வயானை அம்மையைப் பற்றி வரும் பாடல் என்று குறிப்பிட்டுச் சொன்னீர்களே! மிக்க நன்றி!!

said...

//கரவாகிய கல்வியுளார்
- நான்கு பேருக்குக் கற்றுக் கொடுக்க வேண்டும் என்ற நல்ல எண்ணம் இல்லாத கற்றவர்கள்//

ஜிரா - இங்குச் சற்று வேறுபடுகிறேன்!

அருணகிரியார் ஆசிரியர்களை அப்படிச் சொல்ல வரவில்லை என்று நினைக்கிறேன்.
இங்கே கர்ணன்-பரசுராமன் ஒப்புமை சரி வராது; அப்படிப் பார்த்தால் பரசுராமர் பொல்லாத ஆசிரியர் என்று விபரீதப் பொருள் ஆகி விடுகிறதே! அது தவறு!

கரவு=மறைத்தல், ஒளித்து வைத்தல்
உள்ளொன்று வத்து புறமொன்று இருத்தல்.
காக்கை "கரவா" கரைந்து உண்ணும், ஆக்கமும் அன்ன நீரார்கே உள என்ற குறளையும் ஒப்பு நோக்குங்கள்! காக்கை மறைத்து வைக்காது உரையே அழைத்து உண்ணும்!

பரசுராமர் கர்ணனிடம் ஏதும் மறைத்து வைத்து எல்லாம் சொல்லிக் கொடுக்க வில்லை; அவன் தான் மனத்துக்குள் மறைத்துக் கற்றான்; நல்ல உள்ளம் மனதைக் குத்தினாலும் பாவம் நண்பன் துரியனுக்காகச் செய்ய வேண்டிய கட்டாயம்!

இங்கே மாணவனாக வரித்துக் கொண்ட பின்னரும், எங்கே தன்னை மிஞ்சிடுவானோ என்ற சில எண்ணங்களால், முழு மனதுடன் இல்லாது, உள்ளுக்குள் சிலவற்றை மறைத்து தரும் ஆசிரியர்களைத் தான் "கரவாகிய கல்வியாளர்" என்று அருணகிரி குறிப்பிடுகிறார்!

இப்படி ஆசிரியர்கள் மறைத்துத் தருவது போர் வித்தைகள் மற்ற கலைகளுக்கு வேண்டுமானால் கூடச் சரியாய் இருக்கலாம்; நீங்கள் சொன்னது போல் "நமக்கு வேலை ஆகிறதே" என்று மாணவர்களும் பயிலலாம்;

ஆனால் ஆன்மீகத் தேடல்கள் செய்யும் சாதகனுக்கு இப்படி ஒரு ஆசிரியரிடம் போய் மாட்டிக் கொண்டால், துன்பம் தான் நேரிடும்; வீண் வாதங்களில் உழன்று, கற்க எண்ணிய பொருள் சிதறி விடும்!

நம் அருணகிரி வேண்டுவதோ ஆத்ம ஞானத்தை! அதனால் தான் "கரவாகிய கல்வியுளார் கடை சென்று இரவா வகை -மெய்ப்பொருள்-" வேண்டுகிறார்.

பெரும் ஞானிகள், ஆரம்ப காலத்தில் பயிலும் போது, இது போன்ற ஆசிரியர்களிடம் இருந்தால், அவர்களுக்குத் தானகவே ஒரு தாழ்வு மனப்பான்மை வந்து விடுகிறது; சீடன் ஞானம் வேண்டிச் சொல்லுவதைக் கூடத் தன்னை மடக்குவதாக எண்ணிக் கொண்டு, மனத்துக்குள் போராட்டம்; மறைத்துக் கொள்வார்கள்! அதனால் இருவருக்குமே சங்கடம்!

எல்லா குருமார்களும் பெரும் சீடனைத் தோழமையோடு பாவிக்க இயலாது; கண்ணனுக்கு ஒரு சாந்தீபனி அமைந்தது போல் எல்லாருக்கும் அமைந்து விடுமா? இல்லை புலிப்பாணிக்கு ஒரு போகர் போல் தான் கிட்டி விடுமா??

அதனால் தான் அருணகிரியார் நேரடியாக முருகப் பெருமானிடமே "மெய்ப்பொருள் ஈகுவையோ" என்று வேண்டுகிறார்! இதுவே அருணை அடியவரின் கண்ணோட்டம்; அடியேனின் புரிதலும் கூட!!

said...

//குரவா குமரா குலிசாயுத குஞ்//

இப்படி "கு" என்று எல்லாச் சொல்லிலும் மோனை வருவதும் இப்பாடலின் சிறப்பு! பார்த்தீர்களா?

//கரவாகிய கல்வியுளார்// இது உடையவர் வாழ்க்கையிலும் ஆரம்பக் கல்வியில் நடந்தது; சீடனைக் கொல்லத் துணியும் அளவுக்குப் போய் விட்டது! குமரன் இரத்தினச் சுருக்கமாகச் சொன்னால் கேட்டுக் கொள்வோம்! :-)

எல்லாம் சரி, தாஜ் மகாலில் ராகவன் படங்கள் எங்கே??

said...

கேட்டும் கொடுக்காமல் இருக்கும் அவர்கள் ஒரூ வகை. நீங்கள் கேட்கமலேயே கொடுக்கும் வகை. இப்படி அழகான விளக்கங்கள் தருவதற்கு நன்றி.

said...

அடியேனிடம் போய் இரத்தினச் சுருக்கமாகக் கேட்கிறீர்களே இரவிசங்கர். இப்போதெல்லாம் இரத்தினச் சுருக்கமாகச் சொல்லவே தெரிவதில்லை. அப்படிச் சொன்னாலும் நண்பர்களுக்குப் புரிவதில்லை. அதனால் எல்லோருக்கும் புரியும் படி விளக்கமாகவே சொல்லிவிடலாம். நேரம் வரட்டும். உடையவர் இராமானுஜரின் திவ்ய சரித்திரத்தையும் சொல்லுவோம்.

said...

சாத்வீகன் & இரவிசங்கர்.

நல்ல விளக்கமான விளக்கங்கள். இராகவனார் பதிலை எதிர்பார்க்கிறேன்.

said...

"கற்கை நன்றே கற்கை நன்றே. பிச்சை புகினும் கற்கை நன்றே" என்பது ஔவையார் வாக்கு. பிச்சை எடுத்து அந்தப் பணத்தில் படிக்க வேண்டும் என்பது பொருளல்ல. நமக்கு ஒன்றைத் தெரிந்து கொள்ள வேண்டுமானால் அதைத் தெரிந்தவரிடம் சென்று கெஞ்சிக் கூத்தாடியாவது படிக்க வேண்டும் என்பதே உண்மையான பொருள். அதாவது காலில் விழுந்தாவது சாதித்துக் கொள்ள வேண்டும்"

ராகவா!
இதுவரை அறியாத புதிய விளக்கமொன்று!! பொருத்தமாகவும் இருக்கிறது.அழகு தமிழ் விளக்கங்கள்!!
ஆற்றொழுக்குப் போல்!!
யோகன் பாரிஸ்

said...

// தமிழ்ப்பிரியன் said...
உங்களுடைய பதிவுகள் அனைத்தையும் தவறாது படிப்பவர்களில் நானும் ஒருவன்..இதுவரை பின்னூட்டம் இட்டதில்லை..//

அதனால் என்ன தமிழ்ப் பிரியன். நீங்கள் படித்து மகிழ்ந்ததே எனக்கு பெருமகிழ்ச்சி.

// நீங்கள் தரும் விளக்கங்கள் எல்லாம் மிகவும் அருமை!..எத்தனையோ விஷயங்களை அறிய முடிகிறது..தொடர்ந்து எழுதுங்கள். முருகன் அருள் பாடுங்கள்.
நன்றி. //

உறுதியாக. முருகன் அருள் இருந்தால் அனைத்தும் செவ்வனே நடக்கும். கந்தனே நமது சொந்தனே என எண்ணும் எண்ணம் நீங்காமை அவன் செயல் வேண்டும்.

// வெட்டிப்பயல் said...
அருமையாக இருந்தது ராகவன்...//

நன்றி வெட்டி.

////அஸ்வத்தாமன் சாகாவரம் பெற்றவன்.//
அஸ்வத்தாமனக்கு துவாபர யுகத்தில் மரணமில்லையென்று எங்கோ படித்ததாக ஞாபகம்... //

சரியாகத் தெரியவில்லை வெட்டி. இறவா வரம் பெற்றவன் என்று படித்த நினைவு. பாரதப் பாவலர்கள் வந்தால் விவரம் தெரியும்.

said...

சாத்வீகன், ரவி,

பரசுராமரோ, துரோணரோ அறிவில் குறைந்தவர் என்ற பொருளிலோ அவர்கள் இருவருக்கும் கற்றுத் தரத் தெரியாது என்ற பொருளிலோ நான் சொல்லவில்லை.

மாணவர்கள் இருவர் தங்களக்குப் பொருந்தாத ஆசிரியர்களிடம் கற்ற கல்வியின் நிலையைச் சொல்வதற்காக எடுத்தியம்ப உவமைகள் அவை. அதாவது தங்களுக்குத் தக்க ஆசானைக் காணாமையால் அவர்கள் உற்ற நட்டம் காட்டச் சொன்ன ஒப்புமை அது. நல்லதோர் வீணை என்றால் இன்னிசையாக வாசிக்கத் தக்கதோர் வீணை என்றுதானே பொருள். அந்த வகையில் தமக்குத் தக்க ஆசிரியர் என்பதற்காக நல்ல ஆசிரியர் என்று சொன்னது. மாணவர்களின் கோணத்திலிருந்து சொல்லப்பட்டதை ஆசிரியர்கள் கோணத்திலிருந்து பார்த்தால் தவறாகத் தெரிகிறது போலும். முருகன் அனைவருக்கும் தக்க ஆசான். ஆகையால்தான் அருணகிரி நேரடியாக இறைவனை வேண்டுகிறார். அருணகிரி சரியான ஆசிரியரைத் தேர்ந்தெடுத்தார். அந்த ஆசிரியரும் அருணகிரி முன்பு தவறு செய்தவன் என்றெல்லாம் பார்க்கவில்லை. ஞானம் அளித்தார். மானிட குருக்களால் அந்த அளவிற்கு இருக்க முடியாது என்பதையும் இந்த எடுத்துக்காட்டுகள் கூறும். இவருக்குச் சொல்லேன். அவருக்கு இல்லேன் என்றெல்லாம் வேலன் வேலை காட்டாமல் ஞான வேலைக் காட்டுவான் என்ற பொருளில் சொன்னது அது.

என்ன குரமன், இராகவனார் விளக்கம் போதுமா? இராகவன் நார் என்பதைத்தான் இராகவனார் என்று சொன்னீர்களோ? ;-)

said...

// காக்கை "கரவா" கரைந்து உண்ணும், ஆக்கமும் அன்ன நீரார்கே உள //

விளக்கங்கள் சொல்கையில் நடுநடுவில் நல்ல சொற்களுக்கும் விளக்கம் சொல்லச் சிறப்பே. ஆனால் விளக்கத்தில் கரவு என்ற சொல்லை எடுத்துக்காட்டோடு விளக்கிச் சொல்லாமல் விட்டு விட்டதை சரியாக எடுத்துக் கொடுத்திருக்கிறீர்கள் ரவி.

// பரசுராமர் கர்ணனிடம் ஏதும் மறைத்து வைத்து எல்லாம் சொல்லிக் கொடுக்க வில்லை; அவன் தான் மனத்துக்குள் மறைத்துக் கற்றான்; நல்ல உள்ளம் மனதைக் குத்தினாலும் பாவம் நண்பன் துரியனுக்காகச் செய்ய வேண்டிய கட்டாயம்! //

ரவி, கர்ணன் திருதிராட்டிரனின் சுயோதனுக்கு அறிமுகம் ஆகுமுன்னமே பரசுராமரிடம் கற்றான் என்று படித்த நினைவு.

said...

// இது உடையவர் வாழ்க்கையிலும் ஆரம்பக் கல்வியில் நடந்தது; சீடனைக் கொல்லத் துணியும் அளவுக்குப் போய் விட்டது! குமரன் இரத்தினச் சுருக்கமாகச் சொன்னால் கேட்டுக் கொள்வோம்! :-) //

குமரன், எப்பொழுது சொல்லப் போகிறீர்கள். இரத்தினச் சுருக்கம் என்றால் மணி சிறிதானாலும் அதன் ஒளிப்பணி பெரிதாக விரியும் என்பதே. ஆகையால் நீங்கள் விரித்துச் சொல்வதும் இரத்தினச் சுருக்கமே. :-)

// எல்லாம் சரி, தாஜ் மகாலில் ராகவன் படங்கள் எங்கே?? //

தாஜ்மகால் படம் பார்க்கலையா? பாரதிராஜா கோவிச்சிக்கப் போறாரு. :-)

விரைவில் இடுகிறேன் ரவி.

said...

// இலவசக்கொத்தனார் said...
கேட்டும் கொடுக்காமல் இருக்கும் அவர்கள் ஒரூ வகை. நீங்கள் கேட்கமலேயே கொடுக்கும் வகை. இப்படி அழகான விளக்கங்கள் தருவதற்கு நன்றி. //

ஈயென இரத்தல் இழிந்தன்று அதனெதிர்
ஈயேன் என்றல் அதனினும் இழிந்தன்று
கொள்ளெனக் கொடுத்தல் உயர்ந்தன்று அதனெதிரி
கொள்ளேன் என்றல் அதனினும் உயர்ந்தன்று

கடைசி இரண்டு அடிகளின் படி கொள் என்று நான் கொடுப்பது உயர்ந்தது ஆயினும் கொள்ளேன் என்று நீங்கள் கொள்ளாமல் போனாலும் உயர்ந்ததாகுமோ :-)

said...

//என்ன குரமன், இராகவனார் விளக்கம் போதுமா? இராகவன் நார் என்பதைத்தான் இராகவனார் என்று சொன்னீர்களோ? ;-)
//

என்ன இராகவன்? நான் உங்களை பெருமதிப்புடன் இராகவனார் என்று அழைத்தால் நீங்களே அதனை இராகவன் + நார் என்று பிரித்துக் கொண்டதோடு நில்லாமல் என் பெயரையும் நார் நாராகக் கிழிக்கிறீர்களே?! இது நியாயமா? :-)

கல்லூரியில் கடைசி வருடம் படிக்கும் போது நடந்த நிகழ்ச்சி நினைவிற்கு வருகிறது. ரமா என்றொரு பெண் முதல் வருடத்தில் சேர்ந்தாள். ஒரு முறை கல்லூரியிலிருந்து மதுரைக்கு வரும் போது நான் சாய்பாபா புத்தகம் படிப்பதைப் பார்த்து அவளும் சாய் பக்தை என்று அறிமுகப்படுத்திக் கொண்டாள். பேசத் தொடங்கினோம். மதுரை வந்து சேரும் வரை பேசினோம். வந்து இறங்கிய பின் தான் நண்பர்களைக் கவனித்தேன். காதில் புகை வந்து கொண்டிருந்தது. அதில் ஒருவன் 'உன்னை குமரா என்று அழைக்கவா? குரமா என்று அழைக்கவா?' என்று பாடத் தொடங்கினான். :-)

said...

//ரவி, கர்ணன் திருதிராட்டிரனின் சுயோதனுக்கு அறிமுகம் ஆகுமுன்னமே பரசுராமரிடம் கற்றான் என்று படித்த நினைவு.
//

இல்லை இராகவன். சுயோதனனுக்காகவே கர்ணன் பரசுராமரிடம் சென்று கற்றதாக எனக்கு நினைவு.

said...

//ரவி, கர்ணன் திருதிராட்டிரனின் சுயோதனுக்கு அறிமுகம் ஆகுமுன்னமே பரசுராமரிடம் கற்றான் என்று படித்த நினைவு//

மகாபாரதம்-ஆதி பர்வம்:
இந்திரன் கள்ளத்தனமாக வந்து கவச குண்டலங்களை யாசித்துப் பெற்று, சக்தி ஆயுதத்தை கர்ணனுக்குக் கொடுத்து விட்டுப் போய் விடுகிறான். இதை நண்பர்களிடம் உரைக்க, சகுனி கர்ணனை மிகவும் சினந்து பேசுகிறான்; பின்னர் மாற்றாகப் பொய்யுரைத்துப் பரசுராமரிடம் பயின்று வருமாறு அவன் தான் முதலில் யோசனை சொல்வது! துரியனும் அவ்வாறே வலியுறுத்த, கர்ணனுக்குப் பாவம் வேறு வழி இல்லாமல் போய் விடுகிறது!

நட்பிற்காகப் பழியையும் துணிந்து ஏற்கும் நண்பன் கிடைப்பதும் ஒரு வரம் தான்!

said...


இதில் ஒரு பிழை இருக்கிறது

"கற்கை நன்றே கற்கை நன்றே. பிச்சை புகினும் கற்கை நன்றே
கூறியவர் அதிவீரராமபாண்டியர்

said...

அதிவீரராமபாண்டியர் என்பது சரி. ஔவையார் அனறு

said...

Vera level explanation