Monday, December 25, 2006

48. ஆறாறா முப்பத்தாறு

சைவ சித்தாந்தத்தின் மூலப் பொருளை உரைக்கும் பாடல் இது. மிகவும் தத்துவச் செறிவு மிக்கது. முடிந்த அளவிற்கு எளிமையாக விளக்கிச் சொல்கிறேன்.

ஆறாறையும் நீத்து அதன்மேல் நிலையைப்
பேறா அடியேன் பெறுமாறு உளதோ
சூரா வருசூர் சிதைவித்து இமையோர்
கூறா உலகம் குளிர்வித்தவனே


ஆறாறையும் நீத்து - ஆறு X ஆறு = முப்பத்தாறு. முப்பத்தாறு தத்துவங்களையும் நீக்கி அதற்கும் மேலான நிலையை அடைவது என்பது சிவாகமத்தில் மிகவும் உயர்ந்த நிலை. அந்த நிலையை அந்த உயர்ந்த நிலையை அருணகிரிக்கு முருகப் பெருமான் அளித்தார். சரி. அதென்ன முப்பத்தாறு தத்துவங்கள்? ஒவ்வொன்றாகப் பார்க்கலாம்.

இந்த முப்பத்தாறையும் மூன்று பிரிவுகளாகப் பிரித்திருக்கிறார்கள். ஆன்ம தத்துவங்கள், வித்யா தத்துவங்கள் மற்றும் சிவதத்துவங்கள்.

ஆன்ம தத்துவங்கள்: (24)

பஞ்சபூதங்கள் - நிலம், நீர், காற்று, வானம், நெருப்பு - 5
சூட்சும பூதங்கள் - ஒளி, சுவை, ஓசை, நாற்றம், உணர்ச்சி - 5 (இவை ஐம்பொறிகளாலும் உணரப்படும் பண்புகள் )
ஐம்பொறிகள் - கண், வாய், செவி, மூக்கு, மெய் - 5
செயலுறுப்புகள் - கை, கால், நாக்கு, குதம், குறி - 5 (இவை உடலியக்கத்திற்கு ஆனவை )
உட்கரணங்கள் - மனம், குணம், அறிவு, அகங்காரம் - 4 (மனம் வேறு. குணம் வேறு. அறிவு வேறு. அறிவு நல்லதையும் அறியும். தீயதையும் அறியும். ஆனால் மனம் எதை வேண்டுமானால் விரும்பலாம். குணம் என்பது செயலில் வெளிப்படுவது. மனதில் வருத்தமிருந்தாலும் சிலர் நல்லதைச் செய்கிறார்கள் அல்லவா. அகத்தில் இருக்கும் காரம் அகங்காரம். அது போக வேண்டும்.)

ஆக ஆன்ம தத்துவங்கள் மொத்தம் இருபத்தி நான்கு. பஞ்சபூதங்கள் ஸ்தூல பூதங்கள் எனப்படும். அதவது ஒரு உருவமுள்ளவை. சூட்சும பூதங்கள் உருவமற்றவை. ஆனால் உணர முடியும். எடுத்துக்காட்டாக நெருப்பு என்ற ஸ்தூல பூதத்திற்குள் ஒளிந்திருப்பது ஒளி என்ற சூட்சும பூதம். இந்த சூட்சும பூதங்கள் ஐம்பொறிகளால் உணரப் படுகின்றன. அனைத்தும் ஒன்றையொன்று சார்ந்த தத்துவங்கள். ஐம்பொறிகளுக்கு உணரும் வேலை. செயலுறுப்புகளுக்குச் செய்யும் வேலை. கை செய்கிறது. கால் நடக்கிறது. நாக்கு பேசுகிறது. குதம் மலத்தை வெளியேற்றுகிறது. குறி இன்பம் துய்க்கிறது.

வித்யா தத்துவங்கள்: (7)
காலம், நியதி, காலை, விதை, அராகம், புருடன், மூலப்பிரகிருதி

சிவ தத்துவங்கள்: (5)
மொத்தம் ஐந்து சிவ தத்துவங்கள். இவை சிவபக்தித் தத்துவங்கள். சிவனோடு அன்பு கொள்ளும் முறைகள் இந்த ஐந்தும்.
சுத்த வித்தை : அறிவு குறைவாக இருந்து செயல் நிறைய இருத்தல். அதாவது தத்துவார்த்தமாக ஒன்றும் அறியாமல் இருந்து இறைவன் மேலுள்ள அன்பைச் செயலில் காட்டுவது. கண்ணப்ப நாயனாரது பக்தி சுத்த வித்தை.
ஈசுவரம் : அறிவு பெருகி செயல் குறைதல். அனைத்தும் அறிந்து அதனால் அமைதியாக இருப்பது. அனைத்தும் அறிந்தால் அடக்கம் வருவது உண்மைதானே.
சாதாக்கியம் : சுத்த வித்தையும் ஈசுவரமும் கலந்தது. அதாவது அறிவும் செயலும் சமமாக இருப்பது.
விந்து : இது சக்தியின் வடிவம்.
நாதம் : இது சிவாநுபூதி. சிவனோடு ஒன்றுபட்டிருத்தல்.

இப்பொழுது புரிந்திருக்கும் முப்பத்தாறு தத்துவங்களும் அவற்றின் பண்புகளும். ஆனால் முருகப் பெருமானின் தனிக்கருணை இந்த முப்பத்தாறு தத்துவங்களுக்கும் அப்பாற்பட்டது. "ஆறாறையும் நீத்து" - முப்பத்தாறு தத்துவங்களையும் கடந்து அவற்றிற்கும் மேலான நிலையே கந்தரநுபூதி. அதாவது சிவாநுபூதிக்கும் ஒரு படி மேலே.

இதனால் சிவாநுபூதி குறைந்தது என்று பொருள் அல்ல. சிவாநுபூதி என்பது அளவை. அதனால் அளந்த உயர்ந்த பொருள் கந்தரநுபூதி.

சீறி வந்த சூரனை வெற்றி கொண்டு அதனால் கூறாகக் கிடந்த இந்திரலோகத்தில் அருள்மழை பொழிந்து குளிர வைத்தவனே! முப்பத்தாறு தத்துவங்களையும் தாண்டி அவைகளுக்கும் மேலான கந்தரநுபூதியைப் பேறாக பெறவேண்டியதும் உன் கருணையே!

பக்தியுடன்,
கோ.இராகவன்

11 comments:

said...
This comment has been removed by a blog administrator.
said...

பயணம் சிறக்க வாழ்த்துகள்!

said...

இராகவன்,

ஆன்ம தத்துவங்கள் நன்கு புரிந்தன. சிவ தத்துவங்கள் ஓரளவு புரிந்தன. வித்யா தத்துவங்களின் பெயர்களை மட்டும் கூறி விட்டுவிட்டீர்கள். அவற்றையும் கொஞ்சம் விளக்கியிருந்தால் புரிந்திருக்கும்.

கால தத்துவமும் நியதி தத்துவமும் புருட தத்துவமும் மூலப்பிரகிருதி தத்துவமும் கேள்வி பட்டிருக்கிறேன். அதனால் கேள்விபட்டதை வைத்துப் புரிந்து கொள்ள முயல்கிறேன். ஆனால் மற்ற மூன்றும் இதுவரை கேள்வி படாத தத்துவங்கள். கொஞ்சம் விளக்குங்கள். அந்த மூன்றை மட்டும் இன்றி ஏழு வித்யா தத்துவங்களையும் விளக்குங்கள்.

said...

ஜிரா

சற்றே அடர்த்தியான பதிவு. பொறுமையுடன் படித்தால் சைவ சித்தாந்த தத்துவங்களின் அறிமுகம் கிடைக்கும்! உங்கள் பணி சிறந்த ஒன்று!

ஆன்ம தத்துவங்கள் நன்கு புரிந்தன.

வித்யா தத்துவங்களில் மாயை என்ற மிக முக்கியமான தத்துவம் காணவில்லையே, தங்கள் பட்டியலில்!

சிவ தத்துவங்களில் நாத-விந்து சற்றே மேல் விளக்கம் தேவை.
நாதம் : இது சிவாநுபூதி என்றால் இதற்கு முந்தைய பதிவில் நீங்கள் கூறிய சேவல், மயில் (நாத, விந்து) தத்துவங்கள் முரண்படுகின்றனவே!

முப்பத்தாறு தத்துவங்களும் தாண்டிய நிலை கந்தரனூபூதி என்று சொல்லி உள்ளீர்கள். குக சாயுச்சிய நிலை என்பதும் இது தான் அல்லவா?

மேலும் சைவ சித்தாந்தங்களில் இறுதி நிலை அதத்துவம் (பரசிவம்) என்று படித்ததாக நினைவு! கந்தரனூபூதி என்பது முருகப்பெருமானை வழிபடும் நிலையில் மட்டும் சொல்லப்படுவதா?

வரைபடம் கொடுத்து விளக்கினால் இன்னும் தெளிவு பிறக்கும். ஆனால் அநூபூதி விளக்கப் பாடல் என்பதால் அடியேன் மனத்தில் ஓடும் கேள்விகளை வேறொரு சமயத்தில் கேட்கிறேன்! பாடலை மட்டும் இங்கு இரசிப்போம்!

said...

ஆறாறையும் = ஆறு + ஆறையும்
ஆறு வழியையும் என்றும் பிரித்துப் பொருள் கொள்ளும் வழக்கம் உண்டு.

மூலாதாரம், சுவாதிஸ்டானம், மணிபூரகம், அநாகதம், விசுக்தி, ஆக்ஞை என்ற ஆறு ஆதாரங்களின் வழியாக மேலேறி, குண்டலினி ரூபமாய், அடையும் யோக நிலையை அருணகிரி குறிப்பதாகவும் கொள்வர்.
அதனால் தான் வருசூர் என்றும் குளிர்வித்தவன் என்றும் கையாளுவதாக பாடல் விளக்கம் தருகிறார் பாம்பன் சுவாமிகள்!

said...

சிவனே பிறப்பித்த தன் மகனுக்குப் பெருமை சேர்க்க வேண்டி, அவனிடமே பணிவது போல நடித்து, உபதேசம் பெறுவது போல ஒரு நாடகம் ஆடி, தன்னிடமிருந்தே பிறந்த வேதத்திற்கும் பொருள் கேட்டு, மகனையே சோதித்தவன் அல்லவா, அந்த உலக மகா நடிகன்!

அவனையும் தாண்டிய ஒன்றாய்த் தன் மகனின் அனுபூதியை வைத்ததும் வியப்பில்லையே!

பெற்றவரைவிட பிள்ளை ஒருபடி மேலே இருப்பது தந்தைக்கு விருப்பமான செயலன்றோ!

said...

// sivagnanamji(#16342789) said...
பயணம் சிறக்க வாழ்த்துகள்! //

நன்றி சிவஞானம் ஐயா.

// குமரன் (Kumaran) said...
இராகவன்,

ஆன்ம தத்துவங்கள் நன்கு புரிந்தன. சிவ தத்துவங்கள் ஓரளவு புரிந்தன. வித்யா தத்துவங்களின் பெயர்களை மட்டும் கூறி விட்டுவிட்டீர்கள். அவற்றையும் கொஞ்சம் விளக்கியிருந்தால் புரிந்திருக்கும்.

கால தத்துவமும் நியதி தத்துவமும் புருட தத்துவமும் மூலப்பிரகிருதி தத்துவமும் கேள்வி பட்டிருக்கிறேன். அதனால் கேள்விபட்டதை வைத்துப் புரிந்து கொள்ள முயல்கிறேன். ஆனால் மற்ற மூன்றும் இதுவரை கேள்வி படாத தத்துவங்கள். கொஞ்சம் விளக்குங்கள். அந்த மூன்றை மட்டும் இன்றி ஏழு வித்யா தத்துவங்களையும் விளக்குங்கள். //

குமரன்...எனக்குத் தெரிந்த வரையில் விளக்கியிருக்கிறேன். இதற்கு மேல் பெரியவர்கள்தான் வந்து விளக்க வேண்டும். ஞானவெட்டியான் ஐயா, இராம.கி ஐயா, ஜெயஸ்ரீ ஆகியோரிடம் கேட்டால் விளக்கம் கிடைக்கலாம்.

said...

// சிவ தத்துவங்களில் நாத-விந்து சற்றே மேல் விளக்கம் தேவை.
நாதம் : இது சிவாநுபூதி என்றால் இதற்கு முந்தைய பதிவில் நீங்கள் கூறிய சேவல், மயில் (நாத, விந்து) தத்துவங்கள் முரண்படுகின்றனவே! //

முரண்படுகிறதா? இல்லை என்றே என்னறிவு சொல்கிறது. விந்து சக்தி. நாதம் சிவம். எப்பொழுதும் இந்த இரண்டையும் ஒன்றோடு ஒன்று பொருதியதாகத்தான் சொல்வார்கள். விந்து ஒளி. நாதம் ஒலி. அப்படியானால் விந்து மயில். நாதம் சேவல். இப்படித் தொடர்புகள் தொடர்ந்து கொண்டேயிருக்கும்.

// முப்பத்தாறு தத்துவங்களும் தாண்டிய நிலை கந்தரனூபூதி என்று சொல்லி உள்ளீர்கள். குக சாயுச்சிய நிலை என்பதும் இது தான் அல்லவா? //

முப்பத்தாறு என்பது சைவக் கணக்கு. பொதுவில் சொன்னால்....எத்தனை தத்துவங்கள் சொன்னாலும் அத்தனை தத்ததுவங்களையும் அடக்கிக் கொண்டு அவைகளுக்கு மேலானவன் என்று சொல்வார்கள் அல்லவா. அப்படி.

// மேலும் சைவ சித்தாந்தங்களில் இறுதி நிலை அதத்துவம் (பரசிவம்) என்று படித்ததாக நினைவு! கந்தரனூபூதி என்பது முருகப்பெருமானை வழிபடும் நிலையில் மட்டும் சொல்லப்படுவதா? //

சைவத்தில் முருகனையும் சிவனையும் வெவ்வேறாகப் பார்ப்பதில்லை. முருகன் சிவசக்தியன் எனும் பொழுதே சிவன் முருகன் சக்தி முருகன் என்றாகி விடுகிறது அல்லவா. இகத்திற்கு சக்தி பரத்திற்கு சிவம். இகபரத்திற்கு முருகன் என்பார்கள்.

// வரைபடம் கொடுத்து விளக்கினால் இன்னும் தெளிவு பிறக்கும். ஆனால் அநூபூதி விளக்கப் பாடல் என்பதால் அடியேன் மனத்தில் ஓடும் கேள்விகளை வேறொரு சமயத்தில் கேட்கிறேன்! பாடலை மட்டும் இங்கு இரசிப்போம்! //

இதையெல்லாம் என்னிடம் எதிர்பார்க்கலாமா? :-)

said...

// kannabiran, RAVI SHANKAR (KRS) said...
ஆறாறையும் = ஆறு + ஆறையும்
ஆறு வழியையும் என்றும் பிரித்துப் பொருள் கொள்ளும் வழக்கம் உண்டு.

மூலாதாரம், சுவாதிஸ்டானம், மணிபூரகம், அநாகதம், விசுக்தி, ஆக்ஞை என்ற ஆறு ஆதாரங்களின் வழியாக மேலேறி, குண்டலினி ரூபமாய், அடையும் யோக நிலையை அருணகிரி குறிப்பதாகவும் கொள்வர். //

ம்ம்ம்ம்...நான் இந்தப் பாடலுக்கு விளக்கம் எழுதுமுன் எனக்குத் தெரிந்த ஏடுகளைப் புரட்டி விட்டுத்தான் எழுதினேன். வாரியார் முதற்கொண்டு அனைவரும் முப்பத்தாறு தத்துவங்களையும் சொல்லியிருக்கிறார்கள். ஞானவெட்டியான் ஐயா பதிவிலும் எங்கோ படித்த நினைவு.

said...

// SK said...
சிவனே பிறப்பித்த தன் மகனுக்குப் பெருமை சேர்க்க வேண்டி, அவனிடமே பணிவது போல நடித்து, உபதேசம் பெறுவது போல ஒரு நாடகம் ஆடி, தன்னிடமிருந்தே பிறந்த வேதத்திற்கும் பொருள் கேட்டு, மகனையே சோதித்தவன் அல்லவா, அந்த உலக மகா நடிகன்! //

கூத்தரசன் அமைத்த பாத்திரங்களின் கருத்துகள் பற்றிச் சொல்லவும் வேண்டுமா எஸ்.கே.

said...

கருத்தில் ஆழமில்லை சில கருத்துக்கள் தவறு