Monday, January 08, 2007

49. அறிவு எத்தனை வகை

கந்தரநுபூதி எந்த அளவிற்கு உயர்ந்தது என்று சென்ற பாட்டில் (ஆறாறையும் நீத்து) பார்த்தோம். இந்தப் பாடலில் கந்தரநுபுதியின் தன்மையைச் சொல்கிறார் அருணகிரி. தன்மை முழுமையும் சொல்ல முடியாது. அதன் தொடக்கத்தைச் சொல்கிறார்.

கப்பலில் பயணம் போகின்றார்கள். நடுக்கடலில் கப்பல் இருக்கிறது. கப்பலின் மேல் தளத்திற்குச் சென்றால் கடலைப் பார்க்கலாம். நான்கு பக்கங்களிலும் கடலைப் பார்க்கலாம். கடலைப் பார்த்தேன் என்று பெருமையாகச் சொல்லலாம். ஆனால் உண்மையில் முழுக்கடலையும் பார்க்க முடியுமா?

இரண்டு கண்கள் அதற்குப் பத்தாது. அது போலத்தான் கந்தரநுபூதியும். கந்தரநுபூதியின் முழுப் பெருமையையும் நம்மால் கேட்டுப் புரிந்து கொள்ள முடியாது. உணர்ந்து புரிந்து கொள்ளலாம்.

கடலின் ஒரு பகுதியை நம் கண்களுக்குக் காட்டுவது போல அநுபூதியின் அறிமுகத்தைக் காட்டுகிறார் அருணகிரிநாதர்.

அறிவொன்று அறநின்று அறிவார் அறிவில்
பிறிவொன்று அறநின்ற பிரான் அலையோ
செறிவொன்று அறவந்து இருளே சிதைய
வெறி வென்றவரோடு உறும் வேலவனே


"செறிவொன்று அற வந்து இருளே சிதைய" - செறிவு என்றால் நம்மைச் சுற்றியிருந்து நம்மைச் செறிவூட்டுகின்றவை. சுருங்கச் சொன்னால் "என்னுடையது" என்று நாம் எதையெல்லாம் நினைக்கின்றோமோ அவையெல்லாம்.

இந்தச் செறிவை அற்றுப் போகச் செய்வது அநுபூதி. இதென்ன கூத்து? எதற்காக இவையெல்லாம் போக வேண்டும்? வள்ளுவரைக் கேட்கலாம்.
"யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்
அதனின் அதனின் இலன்
"
எவற்றையெல்லாம் விட்டு விடுகின்றோமோ அவைகளால் துன்பம் உண்டாகாது. புகைப் பிடித்தலை விட்டால் நுரையீரல் தப்பிக்கும்.

எந்தப் பொருளையும் பழக்கத்தையும் எடுத்துக் கொள்ளுங்கள். அதை விட்டு விலகினால் அதனால் நமக்குத் துன்பம் நேராது. கிருத்துவர்கள் சொல்வார்கள். ஒரு தாளை எடுத்து நம்முடையது என்று நினைப்பவைகளைப் பட்டியலிட்டால், அந்தப் பட்டியலின் நீளமே நமக்கும் கடவுளுக்கும் உள்ள தூரம்.

இதைத்தான் அநுபூதியும் சொல்கிறது. சற்றே வேறுவிதமாக. கடவளோடு ஒன்றாகி விட்டால் நமக்கும் கடவுளுக்கும் இடையே ஒன்றுமில்லை. புரிகின்றதா "செறிவொன்று அறவந்து"?

இப்படிச் செறிவு அற்றுப் போவதால் உண்டாகும் நன்மை என்ன? "இருளே சிதைய" என்கிறார். ஆணவமாகிய இருள் சிதைந்து போகும். ஆணவம் ஆளை அழித்து விடும். ஆனால் ஆணவத்தை முருகனருள் அழித்து விடும். (இது வரைக்கும் மூன்றாவது வரிக்கு மட்டும்தான் விளக்கம் பார்த்திருக்கின்றோம். இன்னும் மூன்று வரிகள் உள்ளன.)

ஆணவம் அழிந்த நிலை என்ன? "வெறி வென்றவர்" என்ற நிலையை எய்துவது. பற்று என்பது எதன் மேலும் இருக்கும். அது அன்பின் முதல் நிலை. பாசம் என்றும் சொல்லலாம். அது தவறாகாது. அந்தப் பாசமே அளவிற்கு மீறினால் வெறியாகி விடும். வெறி நன்றன்று.

மத வெறி, மொழி வெறி, இன வெறி, சாதி வெறி என்று எந்த வெறியும் இருக்கக் கூடாது. நாட்டுப் பற்றுதான் இருக்கலாம். அதிலும் வெறி இருக்கக் கூடாது. அதனால்தான் வள்ளுவரும் "பற்றுக பற்றற்றான் பற்றை" என்று சொல்கிறார். பெரிய அறிஞர்கள் ஒன்றைச் சொன்னால் அதில் ஒவ்வொரு சொல்லையும் மிகக் கவனமாகப் பயன்படுத்தியிருப்பார்கள். ஆழ்ந்து பொருள் கொண்டால் தெளிவாகப் புரியும்.

அப்படி வெறியை வென்றவரோடு வேலவர் இருப்பார். இறைவன் மேலும் பற்றுதான் இருக்க வேண்டும். வெறி இருக்கக் கூடாது.

அறிவு எத்தனை வகைப்படும்? பட்டறிவு, பகுத்தறிவு, கேள்வி ஞானம் மற்றும் படிப்பறிவு.

எதையும் படித்துத் தெரிந்து கொள்வது படிப்பறிவு. கற்றறிந்தவர்களுக்கு மட்டுமே இது கிட்டும். நல்ல அறிஞர்கள் சொல்லியதைக் கேட்டு உணர்ந்து கொள்வது கேள்வியறிவு. இது நல்ல அறிஞர் மொழி கேட்டால் மட்டுமே கிடைக்கும். எதையும் பட்டுத் தெரிந்து கொள்வது பட்டறிவு. இது அநுபவத்தில் வருவது. அனைத்தையும் அநுபவித்துத் தெரிந்து கொள்ள முடியாது. ஆண்கள் பிரசவ வேதனையைக் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம். ஆனால் பட்டுத் தெரிந்து கொள்ள முடியாது. பகுத்தறிவு என்பது இருக்கின்ற அறிவை வைத்து மற்றொன்றைப் பகுத்துத் தெரிந்து கொள்வது. இதுவும் ஒரு எல்லைக்குள் உட்பட்டதே.

ஆகக் கூடி எந்த அறிவுமே முழுமையானது அல்ல. இந்த அறிவுகளெல்லாம் சீவ அறிவுகள். சீவனாக உலகில் வாழத் தேவையான அறிவுகள். சீவ அறிவை விட சிவ அறிவு சிறந்தது. சீவனாகப் பிறந்தவர்களுக்குத் தலையில் சுழியுண்டு. பிறப்பேயில்லாத சிவனுக்குக் கிடையாது. தலையிலுள்ள சுழி போனால் சீவன் சிவனாகி விடும்.

சீவன் சிவனாக வேண்டுமானால் சீவ அறிவு போக வேண்டும். சிவஞானம் பெருக வேண்டும். அதைத்தான் "அறிவொன்று அற நின்று" என்கிறார் முதலடியில். அறிவொன்று அற நின்று சிவனை அறிகின்றவர்கள் அறிவில் என்றைக்கும் பிரியாமல் இருப்பான் முருகன். முதலிரண்டு அடிகளையும் மீண்டும் படியுங்கள்.
"அறிவொன்று அற நின்று அறிவார் அறிவில்
பிரிவொன்று அற நின்ற பிரான் அலையோ
"

பிரான் என்பது பிரியான் என்பதன் சுருக்கம். முருகப் பெருமான் நம்மையேல்லாம் பிரியாமல் காப்பவன்.

பக்தியுடன்,
கோ.இராகவன்

10 comments:

said...

வாங்க இராகவன்.

said...

//மத வெறி, மொழி வெறி, இன வெறி, சாதி வெறி என்று எந்த வெறியும் இருக்கக் கூடாது. நாட்டுப் பற்றுதான் இருக்கலாம். அதிலும் வெறி இருக்கக் கூடாது.//

நல்லாச் சொல்லுங்க. உரக்கச் சொல்லுங்க. இன்னும் பத்து வாட்டி சொல்லுங்க.

இந்த பற்றுக்கும் வெறிக்கும் வித்தியாசம் தெரியாமத்தானே நம்ம ஆளுங்க நிறையா பேரு ஆடறாங்க.

பற்று இருந்தா இருக்கிற நிதானம் வெறி வந்தா இருக்கறது இல்லை. அந்த சமயத்தில்தான் செய்யறது சரியா தப்பான்னு யோசிக்காம நிறையா பேசிடறோம் பண்ணிடறோம்.

//அப்படி வெறியை வென்றவரோடு வேலவர் இருப்பார்.//

அந்த வெறியை வெல்லவே அவன் துணைதானே சாமி வேணும். அது இல்லாம எப்படி இந்த வெற்றி?

said...

ஜிரா

வருக வருக! புத்தாண்டு வாழ்த்துக்கள்!
சென்ற செவ்வாய்க்கும் சேர்த்து பதிவு போடுங்க, சொல்லிட்டோம் :-)

//கப்பலில் பயணம் போகின்றார்கள். நடுக்கடலில் கப்பல் இருக்கிறது. கப்பலின் மேல் தளத்திற்குச் சென்றால் கடலைப் பார்க்கலாம்.//

Any கப்பல் பயணம்? :-))

said...

/Any கப்பல் பயணம்? :-))/

அட ஜிரா கடல்ல ஒரு சாகசமேப் பண்ணிட்டு வந்திருக்காருங்க... அதான் கடல உவமையா சொல்லியிருக்காரு :)))

said...

பொறுமையா எல்லா வரிகளுக்கும் நல்லா பொருள் சொல்லியிருக்கீங்க இராகவன். நல்லா இருந்தது.

பிரான் என்றால் தலைவன் என்றும் பொருள் உண்டல்லவா? எம்பிரான் என்போமே. தம்பிரான் என்றும் சொல்வதுண்டே. பிரியான் என்பதன் சுருக்கம் பிரான் என்பதை இன்று தான் முதன்முதலில் படிக்கிறேன்.

said...

// குமரன் (Kumaran) said...
வாங்க இராகவன். //

வந்துட்டேன் குமரன். :-)

// இலவசக்கொத்தனார் said...
//அப்படி வெறியை வென்றவரோடு வேலவர் இருப்பார்.//

அந்த வெறியை வெல்லவே அவன் துணைதானே சாமி வேணும். அது இல்லாம எப்படி இந்த வெற்றி? //

அது இல்லாம வெற்றி கிடையாது. காப்பியில பால் இருக்கும்னா பால் இல்லாமக் காப்பி கிடையாதுன்னுதானே பொருள்? ;-)

said...

// kannabiran, RAVI SHANKAR (KRS) said...
ஜிரா

வருக வருக! புத்தாண்டு வாழ்த்துக்கள்!
சென்ற செவ்வாய்க்கும் சேர்த்து பதிவு போடுங்க, சொல்லிட்டோம் :-) //

உங்களுக்கும் குடும்பத்தாருக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்.

////கப்பலில் பயணம் போகின்றார்கள். நடுக்கடலில் கப்பல் இருக்கிறது. கப்பலின் மேல் தளத்திற்குச் சென்றால் கடலைப் பார்க்கலாம்.//

Any கப்பல் பயணம்? :-)) //

:-) கப்பல் என்று சொல்ல முடியாது. பெரிய படகு என்று சொல்லலாம். பினாங்கிலிருந்து லங்காவிக்கு.

said...

// அருட்பெருங்கோ said...
/Any கப்பல் பயணம்? :-))/

அட ஜிரா கடல்ல ஒரு சாகசமேப் பண்ணிட்டு வந்திருக்காருங்க... அதான் கடல உவமையா சொல்லியிருக்காரு :))) //

அமைதி அமைதி அமைதி...ஏன் இந்த ஆவேசம். அமைதி கொள்க. மாலை காபிக்கு அழைத்துச் செல்கிறேன். :-)

said...

// குமரன் (Kumaran) said...
பொறுமையா எல்லா வரிகளுக்கும் நல்லா பொருள் சொல்லியிருக்கீங்க இராகவன். நல்லா இருந்தது. //

என்ன பண்றது குமரன். அநுபூதி முடியப் போகுதே. அதான்.

// பிரான் என்றால் தலைவன் என்றும் பொருள் உண்டல்லவா? எம்பிரான் என்போமே. தம்பிரான் என்றும் சொல்வதுண்டே. பிரியான் என்பதன் சுருக்கம் பிரான் என்பதை இன்று தான் முதன்முதலில் படிக்கிறேன். //

தலைவன் என்றும் சொல்லலாம். தலைவன் எந்த வேளையிலும் பிரியான் என்ற பொருளில் எம்மைப் பிரியான் எம்பிரான் என்று வந்திருக்கலாம். தம்மைப் பிரியான் தம்பிரான்.

said...

முருகனின் அருள் ஒருவருக்கு வந்துவிட்டால் அதன்பின் அதுவரை இருந்த ஆத்மாவுக்கும் (மனிதனுக்கும்) இறைவனுக்கும் உள்ள பிரிவு நீங்கி பிரிவுஒன்று அற நின்ற பிரான் ஆகிறான்