Thursday, May 24, 2007

01. இலக்கியத்தில் இறை - குறுந்தொகை

பைந்தமிழ் இலக்கியங்கள் படிக்கத் திகட்டாதவை. அந்தத் தீஞ்சுவைத் தமிழ் மாலைகளில் தேன் துளியாக இறைவணக்கப் பாடல்கள் நிறைந்து சிறந்துள்ளன. இறைவனைத் தமிழால் அழகு மிகும் சொற்களால் அன்பால் புனைந்த அந்த இறைவணக்கப் பாக்களைப் பூக்களைத் தேடும் வண்டாய்த் தேடித் தேடி செந்தமிழ்த்தேன் துளிகளைச் சேகரித்துப் படைப்பதில் உவப்படைகிறேன். என்னால் முடிந்த அளவிற்கு இறைவன் அருளால் அப்பாக்களுக்குத் தப்பாத வகையில் பொருளுரைக்கிறேன். இலக்கியத்தில் இறை நம் தமிழ்ப் பசிக்கு இரை.

குறுந்தொகை

குறுந்தொகை என்னும் நூல் அகப்பாடல்களின் தொகுப்பு. பல புலவர்கள் படைத்த தனிப்பாடல்களின் தொகுப்பு. இந்தத் தொகுப்பிற்கு இறைவணக்கம் பாடியவர் பெருந்தேவனார். இவர் பாரதம் பாடிய பெருந்தேவனார் என்றும் அழைக்கப்படுகிறார்.

தாமரை புரையும் காமர் சேவடிப்
பவழத்தன்ன மேனித் திகழொளிக்
குன்றி ஏய்க்கும் உடுக்கைக் குன்றின்
நெஞ்சு பக எறிந்த அஞ்சுடர் நெடுவேல்
சேவலங் கொடியன் காப்ப
ஏமவைகல் எய்தின்றால் உலகே

தமிழ்க் கடவுள் முருகனைப் பாடிய இறைவணக்கப் பாடல் இது. மூத்தகுடியாம் தமிழ்க் குடியில் மூத்த தெய்வம் முருகனைப் பாடாதார் யார்? தன் பங்கிற்குப் பெருந்தேவனார் இந்தப் பாடலில் முருகன் அருளால் உலகின் காக்கப்படுவதைச் சொல்கின்றார்.

தொடக்கத்திலேயே திருவடியைப் பற்றிச் சொல்கின்றார். "பிறவிப் பெருங்கடல் நீத்துவர் நீத்தார் இறைவனடி சேராதவர்" என்பது வள்ளுவன் வாக்கு. இறைவனடியைச் சேர வேண்டும். ஆகையால் முருகப் பெருமானின் திருவடியைப் புகழ்ந்து செய்யுளைத் துவக்குகிறார் பெருந்தேவனார். "தாமரை புரையும் காமர் சேவடி" என்று கந்தனடிகளைச் சொல்கின்றார். தாமரை மலர்களை ஒத்த அழகனுடைய திருவடிகள் என்று பொருள். திருப்புகழில் அருணகிரிநாதரும் "தண்டையணி வெண்டயம் கிண்கிணி சதங்கையும் தன்கழல் சிலம்புடன் கொஞ்சவே" என்று முருகன் திருவடிகளைப் புகழ்கிறார்.

பவழத்தன்ன மேனி. பவழம் செக்கச் சிவந்தது. முருகப் பெருமானி திருமேனியும் சிவந்தது. இங்கே சிவப்பு என்பது செம்மை என்னும் பண்பைக் குறிக்கும். முருகனுடைய மேனி மட்டுமா செம்மை. உடுக்கையும் செம்மைதான். முருகனுக்கு ஏதடா உடுக்கை! அது சிவனுக்கு உரியதாயிற்றே என்று எண்ணாதீர்கள். உடுக்கை என்பது உடுத்தும் துணியைக் குறிக்கும். "உடுக்கை இழந்தவன் கைபோல் ஆங்கே இடுக்கண் களைவதாம் நட்பு" என்ற குறளையும் நினைவிற் கொள்க.

குன்றின் நெஞ்சு பக எறிந்த அஞ்சுடர் நெடுவேல் என்று முருகனுடைய திருக்கை வேலின் சிறப்பைச் சொல்கிறார். மாயை என்பது இருள். ஞானம் என்பது ஒளி. இருள் அனைத்தையும் மறைக்கும். ஆனால் ஒளி வந்ததுமே இருள் விலகும். மாயையின் வடிவாக எழுந்து அனைத்தையும் மறைத்தது கிரவுஞ்ச மலை. வேல் ஞானத்தின் வடிவம். வேலெறிந்து கிரவுஞ்ச மலையைத் தூளாக்கினார் முருகன். ஞானம் அல்லது அறிவு சுடர் விட்டு ஒளிர வேண்டும். ஆகையால்தான் "அஞ்சுடர் நெடுவேல்" என்று பெருமதிப்போடு கூறுகின்றார். "கிரியும் தொளைபட்டுருவத் தொடு வேலவனே" என்று இதே கருத்தை கந்தரநுபூதியும் பகர்கிறது.

ஏமவைகல் என்றால் பாதுகாப்பான நிலை என்று பொருள். இது பழந்தமிழ்ச் சொல். பாதுகாப்பான நிலையை உலகம் எய்தியதாம். எதனால்? சேவலங் கொடியன் காப்ப. தாமரைத் திருவருடிகளையுடைய அழகனும், செம்மைப் பண்புடைய செவ்வேளும், மாயையைச் சாடும் சுடர்வேலைப் படித்தவனும், சேவற்கொடியைக் கொண்டவனுமாகிய முருகன் காப்பதால் உலகம் பாதுகாப்பான நிலையில் உள்ளது என்பது பெருந்தேவனார் கருத்து.

அன்புடன்,
கோ.இராகவன்

13 comments:

said...

அழகான முயற்சி ஜிரா.
அப்படியே இலக்கிய இறையில், ஒவ்வொரு திணைக்கும் ஒரு பாட்டாக இட்டு, அதனுடன் திணை பற்றிய ஏனைய தொடர்புள்ள செய்திகளையும் தாருங்கள்!

//இந்தத் தொகுப்பிற்கு இறைவணக்கம் பாடியவர் பெருந்தேவனார். இவர் பாரதம் பாடிய பெருந்தேவனார் என்றும் அழைக்கப்படுகிறார்//

இவர் காலத்தால் பிந்தியவரா இல்லை சங்கக் கவிஞருள் ஒருவரா ஜிரா?
குறுந்தொகைப் பாடல்கள் நூலாகத் தொகுக்கப்பட்ட பின்னர், அதற்குக் காப்புச் செய்யுள் எழுந்திருக்குமோ?

said...

//உடுக்கையும் செம்மைதான். முருகனுக்கு ஏதடா உடுக்கை!//

அப்படிக் கேட்கவும் முடியாத படி கவிஞரே ஒரு அடைமொழியும் வைத்து விட்டார்...
குன்றி ஏய்க்கும் உடுக்கை = குன்றி மணி போல் சிவந்த உடுக்கை! சிவப்புக் கலர் டிரெஸ்.

பாருங்க மேனியும் பவழம் போல் சிவப்பு!
ஆடையும் குன்றிமணி போல் சிவப்பு!
தாமரைச் சேவடி = தாமரையும் சிவப்பு!
சேவலங் கொடி = சேவலும் சிவப்பு தான்!
இப்படி "செவ்" வேளாகப் படம் பிடிச்சுக் காட்டுகிறார்!

said...

// kannabiran, RAVI SHANKAR (KRS) said...
அழகான முயற்சி ஜிரா.
அப்படியே இலக்கிய இறையில், ஒவ்வொரு திணைக்கும் ஒரு பாட்டாக இட்டு, அதனுடன் திணை பற்றிய ஏனைய தொடர்புள்ள செய்திகளையும் தாருங்கள்! //

ஆகா...இது நல்ல திட்டமாக இருக்கிறதே. ஆனால் இந்தத் தொகுப்பில் ஒவ்வொரு இலக்கியத்திலும் வெவ்வேறு தெய்வங்களைத் தமிழால் எப்படிப் போற்றியிருக்கிறார்கள் என்று சொல்லப் போகிறேன். இப்பொழுதைக்கு நீங்கள் சொல்வதைக் கணக்கில் வைத்துக் கொள்கிறேன். :)

////இந்தத் தொகுப்பிற்கு இறைவணக்கம் பாடியவர் பெருந்தேவனார். இவர் பாரதம் பாடிய பெருந்தேவனார் என்றும் அழைக்கப்படுகிறார்//

இவர் காலத்தால் பிந்தியவரா இல்லை சங்கக் கவிஞருள் ஒருவரா ஜிரா?
குறுந்தொகைப் பாடல்கள் நூலாகத் தொகுக்கப்பட்ட பின்னர், அதற்குக் காப்புச் செய்யுள் எழுந்திருக்குமோ? //

இவர் சங்ககாலத்தவர்தான் ரவி. தொகுக்கப்பட்டதே சங்கத்தில்தான் என நினைக்கிறேன். தகவல் தெரிந்தவர்கள்தான் வந்து சொல்ல வேண்டும்.

said...

நான் ஊருக்குக் கிளம்பும் நேரமாகப்பார்த்து இதனைத் தொடங்குகிறீர்கள். ஊருக்குப் போய் வந்த பின் தான் படிக்க வேண்டும். :-(

பல நாட்களாக இந்த ஆவல் என் மனத்தில் உண்டு இராகவன். இந்த முறை வாங்க வேண்டிய புத்தகங்களுள் பழந்தமிழ் இலக்கியங்கள் (சங்க இலக்கியங்கள் தொடங்கி) உரையுடன் வாங்க வேண்டும் என்று குறித்து வைத்திருக்கிறேன். என்ன என்ன கிடைக்கிறதோ பார்க்கலாம்.

நன்கு தொடங்கினீர்கள். விரைவில் கண்ணன், அவன் அண்ணன் பலராமன் இவர்களைப் பற்றியும் பாடல்கள் கொண்ட சங்க இலக்கியப் பாடல்களை எதிர்பார்க்கிறேன். போன வருடம் நாம் பேசியவையெல்லாம் நினைவிற்கு வருகின்றன. :-)

said...

// குமரன் (Kumaran) said...
நான் ஊருக்குக் கிளம்பும் நேரமாகப்பார்த்து இதனைத் தொடங்குகிறீர்கள். ஊருக்குப் போய் வந்த பின் தான் படிக்க வேண்டும். :-( //

ஆகா. அருமையாகப் போய் வாருங்கள். பிறகு படியுங்கள். இந்தப் பதிவு இங்கேயேதான் இருக்கும். :)

// பல நாட்களாக இந்த ஆவல் என் மனத்தில் உண்டு இராகவன். இந்த முறை வாங்க வேண்டிய புத்தகங்களுள் பழந்தமிழ் இலக்கியங்கள் (சங்க இலக்கியங்கள் தொடங்கி) உரையுடன் வாங்க வேண்டும் என்று குறித்து வைத்திருக்கிறேன். என்ன என்ன கிடைக்கிறதோ பார்க்கலாம். //

கண்டிப்பாக. சங்க இலக்கியங்களைக் கண்டிப்பாகப் படிக்க வேண்டும். ஆனால் உரையோடு என்றால்....சற்றுப் பார்த்து வாங்குங்கள். எல்லா உரையும் உரையல்ல சான்றோர் பொய்யா உரையே உரை. சுஜாதா உரையென்றால் கண்டிப்பாக வாங்க வேண்டாம்.

// நன்கு தொடங்கினீர்கள். விரைவில் கண்ணன், அவன் அண்ணன் பலராமன் இவர்களைப் பற்றியும் பாடல்கள் கொண்ட சங்க இலக்கியப் பாடல்களை எதிர்பார்க்கிறேன். போன வருடம் நாம் பேசியவையெல்லாம் நினைவிற்கு வருகின்றன. :-) //

இலக்கியங்களில் பாகுபாடெல்லாம் பார்க்கவில்லை குமரன். அனைவரும் வருவார்கள். :)

said...

மிகச் சீரிய பணியினைத் தொடங்கியிருக்கிறீர்கள், ஜிரா.

வாழ்த்துகள்.

நல்ல விளக்கம்.
கூடவே ரவியும் வந்து சுவை கூட்டியிருக்கிறார்!

ஒரு சிறு ஐயம், [அ] கருத்து!

ஏமம் என்றால் பொன் என ஒரு பொருள் சமீபத்திய திருப்புகழில் சொல்லியிருந்தேன்.

அதோ ஒட்டிப் பார்த்தால், ஏம வைகல் என்றால், பொற்கதிரை வீசிப் பரவும் அதிகாலைப் பொழுது எனக் கொள்ளலாமோ?

மற்றைய செவ்விலணக்கங்களோடு இதுவும் ஒற்றுகிறதே!

ஒவ்வொரு நாளும் அவன் காவலிலேயே இவ்வுலகம் விடிகிறது என ஒரு பொருளும் சொல்லலாமா?

said...

// VSK said...
மிகச் சீரிய பணியினைத் தொடங்கியிருக்கிறீர்கள், ஜிரா.

வாழ்த்துகள். //

நன்றி வி.எஸ்.கே. உங்கள் ஊக்கம். இங்கு ஆக்கம். :)

// நல்ல விளக்கம்.
கூடவே ரவியும் வந்து சுவை கூட்டியிருக்கிறார்! //

அவர் வழக்கமா வந்து ஆதரிக்கிறவரு. :)

// ஒரு சிறு ஐயம், [அ] கருத்து!

ஏமம் என்றால் பொன் என ஒரு பொருள் சமீபத்திய திருப்புகழில் சொல்லியிருந்தேன்.

அதோ ஒட்டிப் பார்த்தால், ஏம வைகல் என்றால், பொற்கதிரை வீசிப் பரவும் அதிகாலைப் பொழுது எனக் கொள்ளலாமோ?

மற்றைய செவ்விலணக்கங்களோடு இதுவும் ஒற்றுகிறதே!

ஒவ்வொரு நாளும் அவன் காவலிலேயே இவ்வுலகம் விடிகிறது என ஒரு பொருளும் சொல்லலாமா? //

இல்லையென்றே நம்புகிறேன். ஏனென்றால் ஏமவைகல் என்ற சொல்லுக்கு அனைவருமே பாதுகாப்பானது என்றே பொருள் சொல்லியிருக்கின்றார்கள். ஏமவைகல் எய்தினால் என்றால் பாதுகாப்பு எய்துவது என்று பொருள். விடியலை எய்த முடியாதல்லவா.

said...

விடியலை எய்த முடியாதுதான்!

ஆனால், விடியல் எய்தலாமே!

"ஏமவைகலை" என வரவில்லையே.

"ஏமவைகல்" எனத்தானே இருக்கிறது!

பாதுகாப்பு எனும் பொருள் தவறென்று நான் கூறவில்லை.

இதையும் கொள்ளலாமோ எனவே!

ஏனைய சிவப்பு வர்ணனைகளுடன் பொருந்துவதாலும்!

said...

இராகவன்,
ஆகா! படிக்கும் போது தித்திக்குதே!

அருமையான முயற்சி. வாழ்த்துக்கள்.
படிக்கச் சுவைத்திடும் பழச்சுவைத் தமிழைப் பருக ஏங்குபவர்களுக்கு நற்செய்தி.

தொடரட்டும் உங்கள் பணி.

நான் ஏற்கனவே உங்களிடம் வைத்த அன்புக் கோரிக்கை ஒன்றை இங்கே மீண்டும் ஞாபகப்படுத்த விரும்புகிறேன். கடம்பு [கடம்பமரம்] பற்றி பழந் தமிழ் இலக்கிய நூல்களில் சொல்லப்பட்ட கருத்துக்களையும் உங்களின் அழகு தமிழில் பதிவாகத் தரவேணும்.

said...

// வெற்றி said...
இராகவன்,
ஆகா! படிக்கும் போது தித்திக்குதே!

அருமையான முயற்சி. வாழ்த்துக்கள்.
படிக்கச் சுவைத்திடும் பழச்சுவைத் தமிழைப் பருக ஏங்குபவர்களுக்கு நற்செய்தி. //

நன்றி வெற்றி. பழத்திலேயே சுவையிருப்பது போல தமிழிலேயே இனிமை இருக்கிறது. நான் பழத்தைப் பறித்துக் கொடுக்கிறவன். சுவை பழத்திற்கு உரியது. நானும் அதை ருசித்து ருசித்துப் புசித்துப் பார்த்து மகிழ்கின்றவன்.

// தொடரட்டும் உங்கள் பணி. //

நிச்சயமாக.


// நான் ஏற்கனவே உங்களிடம் வைத்த அன்புக் கோரிக்கை ஒன்றை இங்கே மீண்டும் ஞாபகப்படுத்த விரும்புகிறேன். கடம்பு [கடம்பமரம்] பற்றி பழந் தமிழ் இலக்கிய நூல்களில் சொல்லப்பட்ட கருத்துக்களையும் உங்களின் அழகு தமிழில் பதிவாகத் தரவேணும். //

ஆமாம் வெற்றி. இந்தக் கோரிக்கை நினைவிருக்கிறது. ஆனால் அதற்குத் தமிழறிவும் நூலறிவும் நிறைய வேண்டும். எனக்குக் குறைமதி. குமரனும் கூட இது தொடர்பாகச் செய்ய வேண்டும் ஆவல் கொண்டிருந்தார். அவரிடம் கேட்டால் கிடைக்கலாம். கேட்கிறேன். :)

said...

ராகவன் − இறையருள் நிச்சயம் உமக்கு உண்டு
என்ன அருமையான இலக்கிய நயத்துடன் கூடிய விளக்கங்கள்

என் பாட்டி கூறுவது போல் உணர்ந்தேன்

நன்றிகள். எம்பெருமான் முருகன் அருள் உமக்கு என்றும் உண்டு

said...

‘ஹேமம்’ வட சொல்; ‘ஏமம்’ தமிழ்.
பொன்னைக் குறிப்பது.
‘ஏம வைகல்’ - பொற்காலைப் பொழுது என்று கொள்வதே சரியென்று தோன்றுகிறது.

said...

பாவை ஒன்பதாம் பாடலில் ‘ஏமப்பெருந்துயில்’ என்பதற்கு ‘இன்பம் தரும் நீண்ட உறக்கம்’ என்று பொருளுரைத்தீர்கள்;
குறுந்தொகையில் ‘ஏமவைகல்’ ‘பாதுகாப்பான நிலை’ எனும் பொருளைத் தருவதாகிறது.
முந்தைய ஏமத்திற்கு ‘கவலையற்ற , பாதுகாப்பான உறக்கம்’ என்று பொருள் கொள்ளலாமா?