Sunday, February 24, 2008

09. இஇ - பன்னிரண்டில் தொடங்கி ஒன்றில்

பிற்காலத் தமிழ் இலக்கியங்களில் மிகச் சிறந்தது திருக்குற்றாலக் குறவஞ்சி. திரிகூட ராசப்பக் கவிராயர் எழுதிய சீரிய நூல் இது. முந்நூற்றுச் சொச்ச ஆண்டுகள்தான் ஆனாலும் சுவையால் தமிழால் உணர்வார் பழந்தமிழ் நூல்களுக்கு எந்த விதத்திலும் குறையாத தனிப் பெரும் நூலாகத் திகழ்கின்றது.

திருக்குற்றாலத்தில் குடி கொண்டிருக்கும் குற்றாலநாதரைத் தலைவனாகக் கொண்டு எழுந்த நூல். பாடல்கள் முழுவதும் பக்தியும் காதலும் நகைச்சுவையும் கலந்து ருசிக்கும் அழகு நூல். சந்தங்கள் கொஞ்சக் கொஞ்ச படிப்பவர் நெஞ்சமோ இன்னும் கொஞ்சம் என்று கெஞ்சக் கெஞ்ச வைக்கும் அருமை நூல்.

இந்த நூலில் முருகப் பெருமானின் மேல் கடவுள் வாழ்த்து ஒன்று. கந்தனைத் தவிர யார் தமிழைத் தர வல்லார்! ஆகையால் வேலவனே இந்த நூலை எழுதக் கவி தந்தான் என்று சொல்ல வேண்டும். அதை எப்படிச் சொல்வது? விளையாட்டாக எண்களை வைத்துச் சொல்லியிருக்கின்றார் நமது கவிராயர். பன்னிரண்டில் தொடங்கி ஒன்றில் முடிக்கின்றார்.

பன்னிருகை வேல் வாங்கப் பதினொருவர் படை தாங்கப் பத்து திக்கும்
நன்னவ வீரரும் புகழ மலைகளெட்டும் கடலேழு நாடி யாடிப்
பொன்னின் முடி ஆறேந்தி அஞ்சுதலை யெனக்கொழித்துப் புயநால் மூன்றாய்த்
தன்னிருதாள் தருமொருவன் குற்றாலக் குறவஞ்சித் தமிழ் தந்தானே


பன்னிரண்டு - பன்னிருகை வேல் வாங்க - பன்னிரண்டு கரங்களிலும் வேலினைப் பிடித்துக் கொண்டு
பதினொன்று - பதினொருவர் படை தாங்க - முருகப் பெருமானின் படைக் கலன்கள் மொத்தம் பன்னிரண்டு. ஆனால் பன்னிரண்டு கரங்களிலும் இப்பொழுது வேலைப் பிடித்துக் கொண்டிருப்பதால் மற்ற பதினோரு படைக்கலங்களையும் பதினொருவர் தாங்கிக் கொண்டார்களாம்.

பத்து - பத்துத் திக்கும் - பத்துத் திசைகளிலும். அதென்ன பத்து? எட்டுத் திக்கு என்றுதானே கேட்டுள்ளோம். மிச்ச இரண்டும் எங்கிருந்து வந்தன? சுற்றியுள்ள எட்டுத் திக்குகளோடு மேலும் கீழும் உள்ள இரண்டு திக்குகளையும் சேருங்கள். எட்டு பத்தாகும்.
ஒன்பது - நன்னவ வீரரும் புகழ - பத்துத் திசைகளிலும் நவவீரர்களால் புகழப் படுகின்ற. வீரவாகு முதலான நவவீரர்கள் என்றும் முருகப் பெருமானின் திருப்புகழைப் பாடிக் கொண்டிருப்பார்களாம்.
எட்டு, ஏழு - மலைகள் எட்டும் கடலேழும் நாடி யாடி - எட்டு மலைகளிலும் ஏழு கடல்களிலும் ஏறியும் தாவியும் குதித்தும் ஓடியும் ஆடியும் விளையாடுகின்ற
ஆறு - பொன்னின் முடி ஆறேந்தி - ஆறு தலைகளிலும் பொன்னாலான திருமுடிகளை ஏந்திக் கொண்டிருக்கும்
ஐந்து - அஞ்சுதலை யெனக்கொழித்து - அஞ்சுதல் என்னும் வேண்டாத பண்பை என்னிடத்தில் ஒழித்து
நான்கு, மூன்று - புய நால்மூன்றாய்த் - நால்மூன்று பன்னிரண்டு. பன்னிரண்டு தோள்களோடும்
இரண்டு - தன்னிருதாள் - தன்னுடைய இரண்டு திருவடிகளையும்
ஒன்று - தருமொருவன் - தருகின்ற ஒருவனாகிய முருகப் பெருமான்
குற்றாலக் குறவஞ்சித் தமிழ் தந்தானே - திருக்குற்றாலக் குறவஞ்சி எழுதும் பொருட்டு எனக்குத் தமிழ் தந்தானே.

வெறுமனே முருகன் தமிழைத் தந்தான் என்று சொல்லாமல். எண்களைக் கொண்டு விளையாடியிருக்கும் திரிகூட ராசப்பக் கவிராயரின் தமிழறிவை என்னவென்று வியப்பது!

அன்புடன்,
ஜிரா (எ) கோ.இராகவன்

14 comments:

said...

குற்றாலக் குறவஞ்சி பற்றி பள்ளி நாட்களில் படித்தது. மீண்டும் நினைவு கொள்ள வைத்த உங்கள் பதிவிற்கு வாழ்த்துக்கள். அருவி, பந்து விளையாட்டு, குரங்குகள், பற்றி எல்லாம் பாடல்கள் படித்த மாதிரி நினைவு. தொடர்ந்து எழுதுங்கள்.

said...

இனியதைக் கேட்க இத்தனை நாட்கள் காக்கச் செய்துவிட்டீரே ஜிரா! - இருப்பினும் காந்திருந்தது 'இலவு' இல்லை எனத்தோன்றுகிறது - முக்கூட அரசக் கவியாரைப் பருகுகையில் - அதிலும் முருகனை வைத்துப் பாடிய எண் சந்தத்தில்.
இதில் ஐந்தாம் எண் மட்டும் நேரடியாக ஐந்தைக் குறிக்காமல் போனதின் மாயமென்னவோ என வியக்கிறேன்!

said...

இலக்கியத்தில் இறை தொடரில் மீண்டும் எழுதத் தொடங்கியதற்கு மிக்க நன்றி மிக்க நன்றி மிக்க நன்றி இராகவன்.

திருக்குற்றாலக் குறவஞ்சி பாடல்கள் நிறைய படித்திருக்கிறேன் இராகவன். பாடநூல்களில் தான். இந்த கடவுள் வணக்கப் பாடலை இன்று தான் படித்தேன். நீங்கள் சொன்னது போல் பன்னிரண்டில் தொடங்கி ஒன்றில் முடிக்கும் வண்ணம் மிக அழகான ஒரு சொல்லோவியத்தைத் தந்திருக்கிறார் கவிராயர். பதினொருவர் என்பது பதினொரு உருத்திரர்களையா? பாடலை மட்டும் படித்த போது அப்படித் தான் பொருள் கொண்டேன். மிக அழகான பாடல் இது.

said...

குற்றாலக்குரவஞ்சி
இலக்கியமும் இனியது. வரும் காட்சிகளும் இனியவை.
சிங்கா சிங்கி பாத்திரங்கள், அவர்கள் பேசிக்கொள்ளும் பாணி
எல்லாமே அழகு.
ஒரு பாட்டு இதோ:
கொட்டழகு கூத்துடையார் குற்றால நாதர் வெற்பில்
நெட்டழகு வாள்விழியும் நெற்றியின் மேற் கஸ்தூரிப்
பொட்டழகும் காதழகும் பொன்னழகுமாய் நடந்த‌
கட்டழகி தன்னழகன் கண்ணளவு கொள்ளாதே..
(இது ஒரு கொச்சகலிப்பா.)

எல்லாப்பாடல்களையும் பொருளொடு எழுதுவீர்கள் என‌
எதிர்பார்க்கிறேன்.

சுப்பு ரத்தினம்.
தஞ்சை.
http://arthamullaValaipathivugal.blogspot.com
http://movieraghas.blogspot.com

said...

// Comments - Show Original Post
Collapse comments

சதங்கா (Sathanga) said...
குற்றாலக் குறவஞ்சி பற்றி பள்ளி நாட்களில் படித்தது. மீண்டும் நினைவு கொள்ள வைத்த உங்கள் பதிவிற்கு வாழ்த்துக்கள். அருவி, பந்து விளையாட்டு, குரங்குகள், பற்றி எல்லாம் பாடல்கள் படித்த மாதிரி நினைவு. தொடர்ந்து எழுதுங்கள். //

ஆம் சதங்கா.... நானும் முதலில் பள்ளியில் படித்தது. அதிலும் முதல் அறிமுகமே... "பொங்குகனங்குழை மண்டிய கெண்டை" பாடல்தான். அந்தச் சந்தத்திலேயே குற்றாலக் குறவஞ்சியுடன் சொந்தத்தை உருவாக்கிவிட்டேன். என் போலத்தான் எல்லாரும் குறவஞ்சியை மகிழ்ந்திருப்பார்கள் என்று நம்புகிறேன். படித்துக் கருத்திட்டமைக்கு நன்றி. :)

said...

// ஜீவா (Jeeva Venkataraman) said...
இனியதைக் கேட்க இத்தனை நாட்கள் காக்கச் செய்துவிட்டீரே ஜிரா! - இருப்பினும் காந்திருந்தது 'இலவு' இல்லை எனத்தோன்றுகிறது - முக்கூட அரசக் கவியாரைப் பருகுகையில் - அதிலும் முருகனை வைத்துப் பாடிய எண் சந்தத்தில்.//

ஆகா...என்ன இப்படிச் சொல்லி விட்டீர்கள். சொல்லும் பொருளும் உள்ளம் அள்ளும் வண்ணம் கொடுக்கும் தமிழ் ஆர்வலர்கள் பலருண்டே. என்னுடையது சிறு முயற்சி. :) இடைவெளியும் முருகன் எண்ணமே...எழுதுவதும் முருகன் எண்ணமே. :)

// இதில் ஐந்தாம் எண் மட்டும் நேரடியாக ஐந்தைக் குறிக்காமல் போனதின் மாயமென்னவோ என வியக்கிறேன்! //

நானும் வியக்கிறேன். அஞ்சுதலை என்று சொல்லி விட்டு அதை ஆறுதலை போக்கி ஆறுதலைத் தரும் என்று சொல்ல வந்திருப்பாரோ!

said...

// குமரன் (Kumaran) said...
இலக்கியத்தில் இறை தொடரில் மீண்டும் எழுதத் தொடங்கியதற்கு மிக்க நன்றி மிக்க நன்றி மிக்க நன்றி இராகவன். //

:) யாம் ஓதிய கல்வியும் எம் அறிவும் தாமே பெற வேலவர் தந்ததினால்

// திருக்குற்றாலக் குறவஞ்சி பாடல்கள் நிறைய படித்திருக்கிறேன் இராகவன். பாடநூல்களில் தான். இந்த கடவுள் வணக்கப் பாடலை இன்று தான் படித்தேன். நீங்கள் சொன்னது போல் பன்னிரண்டில் தொடங்கி ஒன்றில் முடிக்கும் வண்ணம் மிக அழகான ஒரு சொல்லோவியத்தைத் தந்திருக்கிறார் கவிராயர். பதினொருவர் என்பது பதினொரு உருத்திரர்களையா? பாடலை மட்டும் படித்த போது அப்படித் தான் பொருள் கொண்டேன். மிக அழகான பாடல் இது. //

பதினொருவர் உருத்திரர்களா என்று தெரியவில்லை. அப்படியும் இருக்கலாம். ஆனால் யார் பிடித்தார்கள் என்பதை விட ஏன் பிடித்திருப்பார்கள் என்று யோசித்துப் பார்ப்பதில் கவிநயம் தெரிந்தது. ஆகையால் அதைப் பெரிதாக நினைகக்வில்லை.

said...

//பதினொருவர் என்பது பதினொரு உருத்திரர்களையா? //

குமரன் ஊகம் சரியே. தமிழ் இணைய பல்கலைகழகத்தில் கீழ்கண்ட விவரங்களை காணலாம்.

உருத்திரர் படைகள் : தோமரம், தொடி,வாள்,குலிசம்,பகழி,அங்குசம்,
மணி,பங்கயம்,தண்டம்,வில்,மழு

எட்டு மலைகள் : கையிலை, மந்தரம்,இமயம்,விந்தம்,நிடதம்,
ஏமகூடம்,நீலமலை,கந்தமானம்

ஏழு கடல்கள் : நன்னீர், உவர்நீர், பால்,தயிர்,நெய், தேன், கருப்பங்சாறு.

கவி அழகு நன்கு மிளிரும் பாடல். நன்றி

said...

எனக்கு முதலில் அறிமுகமான பாடல் - சிறுவயதில் பெண்கள் குழுவாக பாடி ஆடிய - வானரங்கள் கனிகொடுத்து மந்தியோடு கொஞ்சும். அதுவும் அருமையான பாடல். குற்றாலக் குறவஞ்சி என்றுதான் நினைக்கிறேன்.

said...

பாடலும் சுவை... விளக்கமும் சுவை...மிகவும் ரசித்தேன்

said...

வணக்கம்
இன்னும் நிறைய எதிர் பார்த்து
http://loosupaya.blogspot.com

said...

நீங்கள் தமிழ்ப் பாக்களை விளக்கிச் சொல்லும் விதம் உண்மையிலேயே இனிமையாகத்தான் இருக்கிறது. உங்களின் தமிழ்ப் புலமைக்கு ஒரு வீர வணக்கம்.

ஜான்,
வாசிங்டன் DC

said...

மிக நன்று

said...

அம்மாம், எனக்கும் குறவஞ்சியை படிக்க தூண்டிய பாடல் இது